🚽உலக கழிவறை தினம்: மாற்றமடையும் உலகில் சுகாதாரத்தின் அவசியம்-சிறப்புக் கட்டுரை
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி, சுகாதாரம் மற்றும் கழிவறை வசதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், உலக கழிவறை தினம் (World Toilet Day) அனுசரிக்கப்படுகிறது. அடிப்படைக் கழிவறை வசதிகள் செய்வதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம், மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
🌟 உலக கழிவறை தினத்தின் தோற்றம்
2001 ஆம் ஆண்டில், நவம்பர் 19 ஆம் நாளில் உலகக் கழிவறை அமைப்பு (World Toilet Organization) ஆரம்பிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டே இந்த நாள் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.
பிறகு, 2013 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் நாடு முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல், நவம்பர் 19 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் உலகக் கழிவறை நாளாக உலகளாவிய ரீதியில் உறுப்பு நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

📜 வரலாற்றில் கழிவறை: ஒரு பரிணாம வளர்ச்சி
உடல் கழிவுகளான மலம், சிறுநீர் ஆகியவற்றை அகற்றுவது மனிதனின் இன்றியமையாத தேவையாகும்.
-
பழங்காலத்தில்: பெரும்பான்மையான நாடுகளில் 1800 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டுப்புறத்தில் அல்லது ஊரின் ஒதுக்குப்புற இடங்களில் மக்கள் உடல் கழிவுகளை அகற்றினர். சில ஐரோப்பிய நாடுகளில் அறை தொட்டி (Champer Pot) பயன்படுத்தப்பட்டது.
-
நவீன வருகை: 1800 ஆம் ஆண்டுக்குப் பின்னர், தற்காலத்திப் பயன்பாட்டிலிருந்து வரும் கழிவறை (Toilet) முறையும் அதை அப்புறப்படுத்தும் முறையும் நடைமுறைக்கு வந்தது.
கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டிய தேவை 1850 ஆம் ஆண்டுக்குப் பின்னரேத் தெளிவாக உணரப்பட்டது. கழிவுகள் நீர்நிலைகளை களங்கப்படுத்துவதால், அவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் பரவுவது நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து, கழிவுகளைக் குடிநீர் நிலைகளில் இருந்து பிரிப்பது அவசியமானது.
🌍 நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் உண்மை நிலவரம்
ஐக்கிய நாடுகள் அவையானது, ‘2030க்குள் அனைவருக்கும் பாதுகாப்பான கழிவறைகள்’ என்பதை நிலையான வளர்ச்சி இலக்குகளில் (SDG 6.2) ஒன்றாகக் கொண்டிருக்கிறது. ஆனால், உலகம் இவ்வழியில் மிகவும் மெதுவாகவேச் சென்று கொண்டிருக்கிறது.
கழிவறை வசதி என்பது ஆதிக்கச் சாதியினருக்கும் மேட்டுக்குடியினருக்கும் மட்டுமே உரியது என்கிற நிலை இந்திய நகரங்களுக்கு அப்பால் உள்ள கிராமப்புறங்களில் இன்னும் முழுமையாக மறையவில்லை. மேலும், கழிப்பறைக் கட்டுமானத்தில் மற்ற அறைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை இன்றும் பெரும்பாலான இந்தியர்கள் கழிவறைக்குத் தருவதில்லை.
💔 சுகாதாரப் பற்றாக்குறையின் தாக்கம் (உலகளாவிய புள்ளிவிவரங்கள்):
பாதுகாப்பான மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இன்றி வாழும் மக்கள் குறித்த அதிர்ச்சி தரும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
உலக சுகாதார அமைப்பு 2024-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, நாள்தோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 1,800 குழந்தைகளின் இறப்புகளுக்கு பாதுகாப்பற்ற நீர் மற்றும் சுகாதாரமற்ற சூழலே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட சுகாதார வசதிகள் மூலம் ஆண்டுதோறும் 1.4 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றக்கூடும்.

🗓️ 2025 உலக கழிவறை தினத்தின் கருப்பொருள்
2025-ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று உலக கழிவறை தினம், “Sanitation in a changing world” (மாற்றமடைகிற உலகில் சுகாதாரம்) என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது.
இதன் டேக்லைன்: “We’ll always need the toilet” (நாம் எப்போதும் கழிப்பறையைத் தேவைப்படுவோம்).
இந்தத் தீம் ஆனது, புவி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற சவால்களுக்கு ஏற்ப எதிர்காலத்திற்குத் தயாரான சுகாதார வசதிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. சுகாதாரப் பற்றாக்குறையால் ஏழை மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதால், அவர்கள் மீதான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இந்த நாள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
📣 முக்கியத்துவம்: ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடிப்படை
மனிதக் கழிவுகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பது நோய்த்தடுப்பின் முதல் படியாகும். நீர், சுகாதாரம் மற்றும் சுத்தம் (WASH) ஆகியவற்றில் முதலீடு செய்வது, மக்கள் ஆரோக்கியமாக வாழவும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், பெண்கள் கண்ணியத்துடனும் பாதுகாப்பாகவும் இருக்கவும் உதவுகிறது.
உலக சுகாதார அமைப்பின் இலக்குகளை அடைய, ஒவ்வொரு நாட்டிலும் அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். திறந்தவெளிக் கழிப்பறை அற்ற சமுதாயத்தை உருவாக்குவது, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலனுக்கு மிக முக்கியமாகும்.
இந்த உலக கழிவறை தினத்தில், ஒவ்வொரு தனிமனிதனும் தங்கள் வீடு மற்றும் பொதுச் சூழலில் சுகாதாரத்தை மேம்படுத்த உறுதியேற்க வேண்டும்.
நிலவளம் ரெங்கராஜன்


