பன்னாட்டு நாடக அரங்க தினம்!

பன்னாட்டு நாடக அரங்க தினம்!

லக நாடக அரங்க நாள் உலக நாடக அரங்க நிறுவனத்தினால் 1961 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு இந்நிறுவனத்தின் மையங்களிலும், பன்னாட்டு நாடக அரங்க சமூகங்களினாலும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வை ஒட்டி பல்வேறு தேசிய, பன்னாட்டு நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நாளின் முக்கிய நிகழ்வாக, உலக மட்டத்தில் புகழ் பெற்ற ஒரு நாடகக் கலைஞர் ஒருவர் இந்நாளின் முக்கியத்துவம் குறித்த தனது பிரதிபலிப்புகளையும், உலக கலாச்சார அமைதி பற்றியும் செய்தி ஒன்றை விடுப்பார். இவ்வாறான முதலாவது செய்தியை 1962 ஆம் ஆண்டில் பிரான்சிய எழுத்தாளரும், நாடகக் கலைஞருமான சான் காக்டோ விடுத்தார்.

அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம், காதலர் தினம் என்று வருஷம் முழுதும் ஏதாவது ஒரு நாள் எது குறித்தாவது அல்லது யார் குறித்தாவது கொண்டாடப் பட்டு வருகிறது. சில பரவலாக அறியப் படுகின்றன. சில நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ அதன் சர்ச்சைத் தன்மையைப் பொருத்து ஊடகங்களாலேயே பிரபலப் படுத்தப் படுகின்றன. சில அப்படி ஒன்று இருப்பதே அறியப்படாமல், உலகின் எங்கோ சில மூலைகளில் சின்னச் சின்னக் குழுக்களால் மட்டுமே அனுசரிக்கப் பட்டு நமக்கும் தெரியாமல் நம்மைக் கடந்து போய் விடுகின்றன. அந்த அளவில், ஒவ்வொரு வருஷமும் மார்ச் இருபத்தேழாம் நாள் ‘உலக அரங்க தினமாக’(World Theater Day) அறிவிக்கப் பட்டு உலகின் பல நாடுகளில் நடனம், நாடகம் போன்ற நிகழ்கலைகளின்(Performing Arts) வழியாக விளம்பரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ எதுவும் இன்றிக் கொண்டாடப் பட்டு வருவது, நிகழ்கலைத் துறை சார்ந்த ஆர்வலர்களிலேயே நிறைய பேருக்குத் தெரியாது.

சர்வ தேச அரங்கப் பயிலகம்(International Theater Institute) என்ற அமைப்பு யுனெஸ்கோவுடன் இணைந்து, உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடக, நாட்டிய வல்லுனர்களால், நிகழ்கலைத் துறைகளில் ஈடுபடுவோரின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கோடு, 1948-ஆம் ஆண்டு பாரீசில் ஆரம்பிக்கப் பட்டது.இதன் அடுத்த கட்டச் செயல்பாடாக, 1961-இல், ஹெல்சிங்கியில் நடந்த ITI-இன் ஒன்பதாவது உலக சம்மேளனத்தின் போது, ஃபின்லாந்தின் தேசீய அரங்கவியல் தலைவரும், ஃபின்னிஷ் மொழியின் முன்னணி நாடகாசிரியருமான கார்லோ ஆர்வி கிரிமா என்பவர் உலக அரங்க தினம் ஒன்றை ஏற்படுத்தி, அந்த நாளில் உலகெங்கும் உள்ள ITI-மையங்களில் நாடகம், நாட்டியம் போன்ற அரங்கவியல் நிகழ்வுகளை நிகழ்த்திக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

அது 1962ம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது.1962-ஆம் வருஷம் மார்ச்-27 ஆம் நாள் பாரீசில் துவங்கிய ‘தியேட்டர் ஆஃப் நேஷன்ஸ்’ திருவிழாவை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தையே ஒவ்வொரு வருஷமும் உலக அரங்க தினமாகக் கொண்டாடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதை ஒட்டி, அந்த நாளில் வெவ்வேறு உலக நாடுகளில் உள்ள கிட்டத்தட்ட நூறு ஐ.டி.ஐ. மையங்களில் நாடகம், நாட்டியம், இசை-நாடகம், மற்றும் அந்தந்தப் பிரதேசத்தின் கிராமீய நிகழ்கலைகள் முதலியவை விமரிசையாக நிகழ்த்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டது..இந்த உலக அரங்க தினத்தின் முக்கியமானதும் கவனத்துக்குரியதுமான அம்சம், ஒவ்வொரு வருஷமும் இந்த நாளில், சர்வதேசத் தரம் வாய்ந்த எழுத்தாளர் ஒருவரின் மூலம் உலக அரங்க தினச் செய்தி என்று ஒன்று வெளியிடப் படுவதாகும்

முன்னொருக் காலகட்டத்தில் நாடகம் என்பது சமயத்துக்கு எதிரானதும், அபசாரமானதும், ஆபாசமானதும், யாருக்கும் பயனற்றதுமான மக்களைத் திசை திருப்பும் மலிவான ஒன்றாகவே சித்தரிக்கப் பட்டிருந்தது. அதனால் அப்போது அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு அதன் வளர்ச்சி கவலையை அளித்தது. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இன்றைய மாறிவரும் உலகச் சூழலில் நாடகம் பற்றி எவரும் லட்சியம் கூடப் பண்ணுவதில்லை என்கிற விஷயம் குறித்து ஆந்தை ரிப்போர்ட்டர் கவலைக் கொள்கிறது. ஒரு மிகப் பெரிய ‘கலாச்சார நெருக்கடி’க்கு ஆளாகி இருக்கும் இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கைச் சூழலில், அழிந்து கொண்டிருக்கும் அரங்கத்தை மீட்டெடுத்து, அன்றைய காமெடியா டெலார்ட்டீயைப் போலவே மீண்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் இன்றைய இளம் நாடகக் காரர்கள் முனைப்பாக இருக்க வேண்டியது எந்த அளவுக்கு அவசியம் என்பதை இந்நாளில் அனைவரும் உணரலாம்.

இத்தனைக்கும் நாடகங்கள் கலை மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டும் அல்ல, அவை கல்வியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இலக்கியம், வரலாறு மற்றும் செயல்திறன் பற்றி மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக தங்கள் பாடத்திட்டத்தில் நாடகத்தை இணைத்துள்ளன. பள்ளி நாடகங்கள் அல்லது நாடகக் கழகங்களில் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் பேச்சுத்திறன், குழு பணி மற்றும் கலாசாரப் பிரதிபலிப்பு போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள உதவுகின்றன நாடகங்கள்.

இன்னும் குறிப்பாகச் சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாடகம் மனித கலாசாரத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. 5ம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏதென்ஸில் அக்ரோபோலியிஸில் உள்ள டையோனிசஸ் என்ற மேடையில்தான் நாடகம் நடைபெற்றது. அங்கிருந்து மேடை நாடகங்கள் பிரபலமானது. அங்கிருந்துதான் கிரீஸின் மற்ற பகுதிகளுக்கும் மேடை நாடகம் பரவியது. கிரேக்க துயரங்கள் முதல் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் வரை நவீன பிராட்வே இசை நாடகங்கள் வரை, நாடகம் அதன் காலத்தின் சமூகம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் தொடர்ந்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் அந்தக் கால மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் மூலம்தான் சுதந்திர போராட்டத்திற்கான விதை போடப்பட்டது. அனைவருக்கும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அந்த நாடகங்கள் இருந்ததால் அதன் தாக்கம் சிறப்பாக இருந்தது. நமது வாழ்வு நாடகங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு கிராமப்புறங்களில் இன்றும் நடைபெறும் திருவிழா நாடகங்களே சாட்சி. அந்தக் காலத்தில் சிவாஜிகணேசன் போன்ற பிரபல நடிகர்கள் நாடகத்தின் மூலம்தான் மக்களுக்கு அறிமுகம் ஆனார்கள். பின்பு திரைத்துறையில் நுழைந்து பணியாற்றினாலும் நாடகத்திற்கு தங்கள் பங்களிப்பை தொடர்ந்து அளித்து வந்தார்கள்.

நடிகர்கள் மேடையில் நடிக்கும்போது அவர்களது உணர்ச்சிகளை பார்வையாளர்கள் உள்வாங்கிக் கொள்வார்கள். தங்களுடைய துயரங்கள் கதாபாத்திரங்களின் வாயிலாக வெளிப்படும்போது உணர்ச்சிவசப்பட்டு அழவோ ஆவேசப்படவோ உணர்ந்து கொள்ளவோ அல்லது கற்றுக் கொள்ளவோ செய்தார்கள். கதாபாத்திரங்களின் இன்பங்களில் பங்கு பெற்று அவர்களோடு சேர்ந்து சிரிக்கவும் செய்தார்கள்.

நாடகங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமல்லாமல் அறிவை ஊட்டுவதாகவும் கால கண்ணாடியாகவும் செயல்பட்டது. நடிகர்கள் மேடையில் நடிப்பது மட்டுமல்ல; இது கதைசொல்லல், உணர்ச்சிகள், படைப்பாற்றல் மற்றும் பார்வையாளர்களுடனான தொடர்பை உள்ளடக்கிய ஒரு துடிப்பான கலை வடிவம். தியேட்டரின் மிக அழகான அம்சங்களில் ஒன்று மக்களை ஒன்றிணைக்கும் திறன். உரையாடல், இயக்கம், இசை மற்றும் காட்சிகள் மூலம், நடிகர்கள் மனித அனுபவத்தை ஆராயும் கதைகளை வெளிப்படுத்துகிறார்கள். அது நகைச்சுவையாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், இசையாக இருந்தாலும் மாற்றங்களை ஏற்படுத்த நாடகங்களை ஒரு கருவியாக பயன்படுத்தினார்கள். நாடக ஆசிரியர்கள் பெரும்பாலும் சமூக, அரசியல் மற்றும் கலாசார பிரச்னைகளில் கருத்து தெரிவிக்க தங்கள் படைப்புகளை பயன்படுத்துகின்றனர். மக்களின் சிந்தனையை தூண்டுவதற்கும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் கதாபாத்திரங்களில் உரையாடல்களும் கதையும் உதவியாக இருந்தன.

மொத்தத்தில் நாடகம் என்பது கலை வெளிப்பாட்டின் ஒரு வடிவம். நடிகர்கள், இயக்குனர்கள், நாடக ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் நாடக தயாரிப்பை உருவாக்க தங்கள் திறமைகளை பங்களிக்கின்றனர். ஆடைகள் முதல் செட் டிசைன் வரை ஒளியமைப்பு வரை, நாடகத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்வையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு முயற்சி மனித படைப்பாற்றலின் பன்முகத்தன்மையையும் புத்தி கூர்மையையும் காட்டுகிறது என்பதை புரிந்து இந்த உலக நாடக அரங்க நாளுக்கு ஒரு சல்யூட் அடித்து வரவேற்போம்!

புவனா குமார்

error: Content is protected !!