மே 17. இன்று சர்வதேச தொலைத்தொடர்பு தினம்!
1865இல் உருவான சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் International Telecommunication Union (ITU) உலக தொலைத்தொடர்பு தினத்தை அனுஷ்டிக்கிறது. மனித குலத்துக்கு அது ஆற்றிவரும் சேவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றது. இயற்கை காட்டிய வழிமுறையின் அடிப்படையில், மனிதனின் ஆறாம் அறிவை பயன்படுத்தி, அறிவியல் மூலம் பெற்றுள்ளதே இன்று மனிதகுலம் பல வகைகளில், பல்வேறு வழிகளில் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு வழிமுறைகளாகும். குகைகளை வீடாக பயன்படுத்திய காலம் முதல் விண்ணிலே வீடமைத்து வாழும் வழிமுறைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலம் வரையிலும் மட்டுமல்லாது, நிலவில் குடியேறிய பிறகும்கூட மனித குலத்தின் அடிப்படைத் தேவையாகத் திகழப்போவது தகவல் தொடர்பு என்பதுவே. அறிவியல் சார்ந்த வாழ்க்கைக்கு மட்டுமல்லாது, எளிமையான வாழ்க்கைக்கும் இந்தத் தகவல் தொடர்பு என்பதே அடிப்படையாகும்.
கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் மனிதன் சமுதாயமாக வாழ முற்பட்டபோது முதல் தகவல் தொடர்பு முறை அமைந்திருக்க வேண்டும். மொழி தோன்றுவதற்கு முன்பே தகவல் தொடர்பு சைகைகளால் அமைந்திருக்க முடியும். இவ்வகையில் தற்காலத்தில் பெருவளர்ச்சி பெற்றுள்ள மக்கள் தகவல் தொடர்பியல் துறை செம்மொழி இலக்கிய காலத்தில் ஓரளவிற்கு அச்சமுதாய தேவைக்கு ஏற்ப அமைந்திருந்தது. அரசன், அவனுக்குக் கீழ் அமைச்சர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், வரி வசூல் செய்பவர்கள் என்று அரச சுற்றம் செம்மொழி காலத்தில் இருந்தது. இந்தச் சுற்றம் எடுக்கும் முடிவுகள், கட்டளைகள் மக்களுக்கு அறிவிக்கப்பெற்றன. அவை நடைமுறைக்கு வந்தன.
சங்க காலத்தில் முரசு அறைந்து செய்தி அறிவிக்கும் நடைமுறை இருந்துள்ளது. இது தவிர பறை முழக்குதல், முழவு கொட்டுதல், மணி அடித்தல் போன்ற செயல்பாடுகள் வழியாக மக்கள் அதிகாரக் குழுக்களுடன் இணைவு பெற்றனர். இவ்வடிப்படையில் சங்ககாலத்திலேயே தமிழர்கள் மக்கள் தகவல் தொடர்பியல் கூறுகளைச் சிந்தனைகளைப் பெற்றிருந்தனர் என்பது தெரியவருகிறது.
சொற்கள் வரி வடிவம் பெற்று எழுத்துக்கள் உருவாகியதும், தகவல் தொடர்பில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. கடிதங்கள் எழுதப்பட்டன. அன்றைய நாட்களில், அந்தந்தப் பகுதிகளில் கிடைத்த துணி, ஓலை, தோல், மரத்துண்டு போன்ற தளங்களில் எழுத்துக்கள் எழுதப்பட்டு மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டன.
கடிதப் போக்குவரத்தில் முற்கால அரசர்கள் பயன்படுத்திய சிறப்பான தகவல் தொடர்பு சாதனம் புறாக்கள் ஆகும். இந்த அமைதிப் பறவையின் காலில் கட்டப்பட்டு அனுப்பப்படும் கடிதம், குறித்த நபருக்கு விரைவாகக் கொண்டு சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் இந்த புறாக்களைப் பயிற்றுவிப்பவர்கள் இந்தியாவில் உள்ளனர். சரியான வழியை கண்டுபிடித்து புறப்பட்ட இடத்திற்கு இந்தப் பறவைகள் வந்து சேர்வது இயற்கையின் விந்தைக்குரிய செயல்பாடுகளில் ஒன்றாகும்.
நாட்கள் மாறி, நவீன தொழில்நுட்பங்கள் உருவாக்கிக் கொடுத்த காகிதம் புழக்கத்திற்கு வந்தது. கடிதங்கள் எழுதும் பழக்கம் துவங்கியது. எழுதுபவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று உரிய நபரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் சேவை உருவாக்கப்பட்டது; இதற்கான கட்டணங்களை பெறுவதற்கு பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டன. இறுதியாக இன்றைய நாட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற தபால் தலை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிற்கு இதனை அறிமுகப்படுத்தியவர்கள் தாங்களே என்பதால், இன்றும் தபால் தலையில் இங்கிலாந்து நாட்டின் பெயர் கொடுக்கப்படுவதில்லை. நாட்டின் பெயர் இல்லாத தபால் தலை ஒன்றைக் கண்டால் அது இங்கிலாந்து நாட்டினுடையது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மக்கள் தகவல் தொடர்பியல் இன்று பல்வகை நிலைகளில் விரிந்து பரவி ஆழ் நிலையில் சமுதாயத்திற்குத் தொண்டாற்றி வருகிறது. தற்போது தொடர்பியல் உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளையும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி உலக நாடுகளை எல்லாம் அளவில் சுருக்கி நெருக்க வைத்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவும் தொடர்பியல் கருவியாகப் பயன்படுகிறது.
ஆக இப்போதைய உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆனாலும் குகைச் சுவற்றில் படமாக வரைந்து தகவல் தெரிவித்த மனிதன் இன்று செல்லும் இடம் எல்லாம் எளிதாகத் தொடர்பு கொள்ளும் செல்பேசிக் கருவியை பயன்படுத்துகின்றான். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு கண்டுபிடிப்பு என்பது மாறி, 100, 50, 10, 4, 1 ஆண்டுகளாகச் சுருங்கி இன்று தினந்தோறும் ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு அறிமுகம் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
என்றாலும் இது கவலைக்குரியதாகவே தோன்றுகிறது. இயற்கைக்கு மாறாக, எதிராக உருவாக்கப்படும் எது ஒன்றும் நிலைப்பதில்லை; அல்லது காலப்போக்கில் இயற்கையாலேயே அழிக்கப்பட்டும் விடுகிறது. மேலும் புதிதாகத் தரப்படும் கண்டுபிடிப்பு பழையதை கொன்றுவிடுகிறது. வானொலிப் பெட்டி, பேஜர் என்று குறிப்பிடப்படும் செய்திக் குறிப்பனுப்பிய கருவி, துவக்க கால செல்பேசிகள், கணினிகளில் பயன்படுத்தப்பட்ட நெகிழ் வட்டுக்கள், நெகிழ் வட்டுப் பெட்டிகள், குறுவட்டுக்கள், பழைய தட்டச்சு இயந்திரங்கள், கையால் அச்சுக் கோர்த்த அச்சு முறை, ஒலிநாடாக்கள், ஒளிக்காட்சி பேழைகள், ஒளிக்காட்சி பேழை இயக்கிகள், ஒலித்தட்டுகள், ஒலித்தட்டு இயக்கிகள், கருப்பு வெள்ளை ஒளிப்படங்கள், நிழற்படக் கருவிகள் என்று ஏராளமான முந்தைய தலைமுறைக் கருவிகள் இன்று கண்காட்சிகளிலும் அருங்காட்சியகங்களிலும் இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க இயலாதல்லவா?
அந்த வகையில் இன்று பயன்பாட்டில் உள்ளவை நிச்சயம் நாளை நீக்கப்படவுள்ளன என்பது தெளிவாகிறது. மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்பார்கள். ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சியால் அந்த மாற்றமும் மாறுபட்டு அமைகிறது என்பது தெரிகின்றதல்லவா? இயற்கை காட்டிய எதிரொலி இன்று பல்வேறு வகைகளில் வளர்ச்சியடைந்துவிட்டது. தகவல் தொடர்பு என்பது மனித நாகரீகத்தின் அடிப்படையாக மாறிவிட்டது. அதனால் தானோ என்னவோ இன்று சாலையில் நடந்து செல்லும், எளிமையான, ஏழ்மையான மனிதர்களும் செல்பேசியை பயன்படுத்தியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு வந்துள்ளனர்.
காற்றுவழியாக அனுப்பப்படும் செல்பேசிக்கான மின்காந்த அலைகள் மனித உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றது என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவருகிறது. இதன் முன்னோட்டமாக, சிட்டுக்குருவிகள் உட்பட சில உயிரினங்கள் பெரிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதும் கவலைக்குரிய ஒன்றாகும். அதிகாலை வேளைகளில் இன்று கிராமத்து மரங்களில்கூட சிட்டுக்குருவிகளின் கீச்சிடும் சத்தம் இல்லாது போய்விட்டது.
ஒருபுறம் தகவல் தொடர்பு வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதகுலத்திற்கு வேகமான தகவல் பரிமாற்ற வழிமுறைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. முகம்பார்த்து பேசும் வசதியை மூன்றாம் தலைமுறை அலைவரிசை கொடுத்துவிட்டது. அடுத்து வரப்போகும் அலைவரிசைகள் ஆளையே நேரில் நிறுத்தினாலும் வியப்படைவதற்கில்லை. ஆனால் அது நிச்சயம் மற்ற உயிரினங்களின் அழிவிற்கும் ஆரம்பமாக அமையும் என்றும் சொல்லலாம். அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இருந்த டைனோசார்களே ஏதோ ஒரு காரணத்தால் இந்த பூமியிலிருந்து மறைந்து போய்விட்டன. அப்படியென்றால், வெய்யில் கொஞ்சம் அதிகமாக அடித்தாலே தாங்காத மனிதனும் மற்ற உயிரினங்களும் இந்தப் பூமியில் இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கப்போகின்றன. தொலைத் தொடர்பு வசதிகளுக்காக நாம் தொலைத்துள்ளவையும் தொலைக்கப் போகின்றவையும் ஏராளம்!
நிலவளம் ரெங்கராஜன்