தேசிய தையல்காரர்கள் தினம்:கிழிந்த உறவுகளை ஒட்டும் கலை!

தேசிய தையல்காரர்கள் தினம்:கிழிந்த உறவுகளை ஒட்டும் கலை!

லகில் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே மனிதன் தன்னைப் பிற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டப் பயன்படுத்திய முதன்மையான ஆயுதம் ஆடை. அந்த ஆடையை வடிவமைத்து, மனிதனை அழகூட்டும் தையல் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி உலக தையல்காரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த வில்லியம் எலியாஸ் ஹோவ் என்பவரின் பிறந்த நாளைத்தான் நாம் இப்படிச் சிறப்பிக்கிறோம்.

தையல் கலை உருவான கதை

தையல் கலை என்பது நேற்று இன்று உருவானது அல்ல; இது கற்காலத்திலேயே தொடங்கிவிட்டது. சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் விலங்குகளின் தோல்களைத் தைத்து ஆடையாக அணியத் தொடங்கிவிட்டான். அன்று ஊசிகள் கிடையாது. விலங்குகளின் எலும்புகள் மற்றும் கொம்புகளைக் கூர்மையாக்கி, விலங்குகளின் நரம்புகளை நூலாகப் பயன்படுத்தித் தைத்தனர். அதன் பிறகு வெண்கலக் காலத்திலும், இரும்புக் காலத்திலும் உலோக ஊசிகள் பயன்பாட்டுக்கு வந்தன. இடைக்காலத்தில் தையல் கலை என்பது மிக உயரிய கலையாகக் கருதப்பட்டது. ஒரு தையல்காரர் என்பவர் வெறும் துணியைத் தைப்பவர் மட்டுமல்ல, அவர் ஒரு சிற்பியைப் போல மனித உடலின் அளவுகளைச் சரியாகக் கணித்துச் செயல்படும் கலைஞராக மதிக்கப்பட்டார்.

இயந்திரப் புரட்சியும் வளர்ச்சியும்

பல நூற்றாண்டுகளாகக் கைகளாலேயே தைக்கப்பட்டு வந்த நிலையில், 19-ம் நூற்றாண்டில் ஒரு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. 1846-ல் எலியாஸ் ஹோவ் தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. கைகளால் தைக்கும் தையல்காரர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று பயந்தனர். ஆனால், அதே இயந்திரம்தான் பின்னாளில் தையல் கலையைப் பல கோடி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு பெரும் தொழிலாக மாற்றியது. இன்று கணினிமயமாக்கப்பட்ட தையல் இயந்திரங்கள் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஆயிரக்கணக்கான தையல்கள் போடப்படுகின்றன. ஆனாலும், இன்றும் ஒரு தையல்காரரின் கைவண்ணத்தில் உருவாகும் ‘ஃபிட்டிங்’ மெஷின்களால் தர முடியாது என்பதுதான் நிதர்சனம்.

தையல் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்

தையல் கலையில் ஆச்சரியமான பல செய்திகள் ஒளிந்துள்ளன. 18-ம் நூற்றாண்டு வரை ஒரு சட்டையின் விலை என்பது மிக அதிகமாக இருந்தது; காரணம் அது முழுமையாகக் கைகளால் தைக்கப்பட்டது. தையல் ஊசியின் முனையில் ஓட்டை (Eye of the needle) வைப்பது என்பது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பச் சாதனையாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்டது. அதேபோல், தையல்காரர்கள் பயன்படுத்தும் ‘விரல் கவசம்’ (Thimble) பல நூற்றாண்டுகளாகத் தையல் கலைஞர்களின் விரல்களைக் காத்து வருகிறது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், உலகின் முதல் தையல் இயந்திரம் மரத்தால் செய்யப்பட்டது!

தையல் கலைஞர்களின் சேவை

ஒரு துணியைச் சட்டையாகவோ, சுடிதாராகவோ மாற்றுவது என்பது வெறும் தையல் அல்ல; அது ஒரு மனிதனின் நம்பிக்கையை வடிவமைக்கும் செயல். ஒரு விசேஷத்திற்குப் போகும்போது நாம் அணியும் ஆடை சரியாக அமைந்தால் மட்டுமே நம் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். அந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் ஒரு தையல்காரரின் பல மணி நேர உழைப்பும், கூர்மையான பார்வையும் ஒளிந்திருக்கிறது. கிழிந்த துணிகளை மட்டுமல்ல, கிழிந்த உறவுகளையும் அன்பால் ஒட்ட வைக்கும் பொறுமைமிக்கக் கலைஞர்கள் அவர்கள்.

இந்த உலக தையல்காரர்கள் தினத்தில், நம்மை அழகாகக் காட்டும் அந்தத் தையல் கலைஞர்களின் உழைப்பைப் போற்றுவோம். ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள்; அந்த மீதி பாதியான ஆடையைத் தரும் தையல்காரர்களே உண்மையான அழகுக்கலைஞர்கள்.

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts

error: Content is protected !!