உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்!

உலக சாரணர்  ஸ்கார்ஃப் தினம்!

லக சாரணர் ஸ்கார்ஃப் தினம், (Scout Scarf Day ) ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகெங்கிலும் உள்ள சாரணர்கள், சாரணர் இயக்கத்தின் நிறுவனரான இராபர்ட் பேடன்-பவல் என்பவரால் தொடங்கப்பட்ட இயக்கத்தின் கொள்கைகளையும், சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய சேவைகளையும் நினைவில் கொள்ளும் ஒரு தினமாகும். இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், இளைஞர்களை உடல், மனம், ஆன்மா என அனைத்து வகையிலும் ஆரோக்கியமானவர்களாகவும், சமூக பொறுப்புள்ள குடிமக்களாகவும் உருவாக்குவது. “ஒருமுறை சாரணரானால், எப்போதும் சாரணரே” (“Once a Scout, always a Scout”) என்ற தத்துவம் இந்த இயக்கத்தின் முக்கியப் பண்பு. இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள சாரணர்கள் தங்கள் பெருமையையும் சாரணியத்தின் உணர்வையும் வெளிப்படுத்த பொது இடங்களில் தங்கள் சாரணர் ஸ்கார்ஃப்களை அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இது உலகளாவிய சாரணர் இயக்கத்தையும் அதன் மதிப்புகளையும் கொண்டாடும் ஒரு நாள்.

சாரணர் இயக்கத்தின் தொடக்கம்

1904 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் இளைஞர்களின் நிலை குறித்து பேடன்-பவல் மிகவும் வருத்தப்பட்டார். சரியான வழிகாட்டுதல் இல்லாததால், இளைஞர்கள் பொறுப்பற்றவர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும் மாறுவதைக் கண்டார். ஒரு முன்னாள் ராணுவ வீரராக, இளைஞர்களை ஒழுக்கமானவர்களாகவும், நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும் மாற்ற வேண்டும் என்று அவர் விரும்பினார்.

இதைச் செயல்படுத்தும் விதமாக, 1907 ஆம் ஆண்டில், வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட 22 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை பிரவுன்சியா தீவில் ஒன்பது நாட்கள் முகாமிற்கு அழைத்துச் சென்றார். இந்த முகாமில், இளைஞர்களுக்கு முதலுதவி, முகாம் அமைத்தல், உயிர்வாழும் திறன்கள், மற்றும் விசுவாசம் போன்ற அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொடுத்தார். இந்தச் சோதனை முயற்சி பெரும் வெற்றியடைந்தது. இதுவே, பிற்காலத்தில் உலக சாரணர் இயக்கமாக மாறியது.

சாரணர் இயக்கத்தின் நோக்கம்

சாரணர் இயக்கம், ஜாதி, மதம், இனம் என எந்தவித பேதமுமின்றி, அனைத்து இளைஞர்களையும் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது. இது இளைஞர்களிடம் தன்னம்பிக்கை, ஒழுக்கம், தலைமைப் பண்பு, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை, மற்றும் தேசப்பற்று போன்ற நற்பண்புகளை வளர்க்கிறது.

இந்த இயக்கம் ஒரு தன்னார்வக் கல்வி இயக்கமாகச் செயல்படுகிறது. இது வகுப்பறைகளுக்கு வெளியே, நடைமுறை அனுபவங்களின் மூலம் ஒருவரின் ஆளுமையை முழுமையாக வளர்க்க உதவுகிறது. நீல் ஆம்ஸ்ட்ராங், பில் கிளிண்டன் போன்ற உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் பலரும் சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாரணர் தாவணி தினம், இந்த இயக்கத்தின் மகத்தான நோக்கங்களை மீண்டும் நினைவுபடுத்தி, எதிர்கால சந்ததியினரை சிறந்த குடிமக்களாக உருவாக்க உறுதியெடுக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

சாரணர் ஸ்கார்ஃப் முக்கியத்துவம்

சாரணர் தாவணி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல. அது ஒவ்வொரு சாரணரின் அடையாளச் சின்னம். இந்தத் தாவணி, சாரணர் இயக்கத்தின் உறுதிமொழிகள், சட்டங்கள், மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை உணர்த்துகிறது. இதனை அணிவதன் மூலம், ஒரு சாரணர், தான் எப்போதும் சமூக சேவைக்குத் தயாராக இருக்கிறேன் என்பதை வெளிப்படுத்துகிறார்.

சாரணர் தாவணி தினத்தில், உலகெங்கிலும் உள்ள சாரணர்கள் மற்றும் முன்னாள் சாரணர்கள் தங்கள் தாவணியை அணிந்து பொது இடங்களுக்குச் செல்கின்றனர். இதன் மூலம், சாரணர் இயக்கத்தின் கொள்கைகளை மக்களுக்கு நினைவூட்டவும், புதிய இளைஞர்களை இந்த இயக்கத்தில் சேர ஊக்குவிக்கவும் இது உதவுகிறது.

கொண்டாடும் முறைகள்

உலக சாரணர் ஸ்காட்ஃப் தினத்தைக் கொண்டாட பல வழிகள் உள்ளன.

  • ஸ்கார்ஃப் அணிதல்: இந்நாளில், சாரணர்கள் தங்கள் சாரணர் ஸ்காட்ஃப் அணிந்து பள்ளி, கல்லூரி, வேலைக்குச் செல்வார்கள். இது, சாரணர் இயக்கத்தின் நோக்கங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு அமைதியான வழியாகும்.
  • சாரணர் சேவைப் பணிகள்: சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வு, மரம் நடுதல், இரத்த தானம் செய்தல், விழா காலங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற சமூக சேவைப் பணிகளில் ஈடுபடுவது.
  • விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்: சாரணர் இயக்கத்தின் முக்கியத்துவம், அதன் வரலாறு மற்றும் சமூகத்திற்கு அது ஆற்றும் பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது.
  • முன்னாள் சாரணர்களை கௌரவித்தல்: நீண்ட காலமாக சமூக சேவையாற்றி வரும் முன்னாள் சாரணர்களை கௌரவித்து, அவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது.

தனுஜா

Related Posts

error: Content is protected !!