32°C

கண்கள் வறண்டு போதல் (Dry Eyes) – எளிய தீர்வுகள்!

admin Published: July 28, 2025 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

ன்றைய நவீன உலகில் கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க முடியாது. இந்தத் தவிர்க்க முடியாத பயன்பாட்டின் விளைவாக, கண்கள் வறண்டு போதல் (Dry Eyes) என்ற பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கான எளிய தீர்வுகளைச் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர் விளக்குகிறார்.

ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கும் குழந்தைகள் முதல் ஐ.டி போன்ற துறைகளில் எப்போதும் கணினி, லேப்டாப் உபயோகிப்பவர்கள் வரை, `கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ (Computer Vision Syndrome) என்ற பிரச்சனையால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. தொடர்ந்து பல மணி நேரம் கணினி மற்றும் மொபைல் திரைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைப் பாதிக்கிறது. கண்களில் எரிச்சல், சிவந்து போதல், கண்களிலிருந்து நீர் வடிதல், தலைவலி, கண்கள் வறண்டு போவது போன்ற பிரச்சனைகளுடன் இன்று பலர் கண் மருத்துவர்களைச் சந்திக்கிறார்கள்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கணினிப் பயன்பாட்டில் சில முக்கிய குறிப்புகள்:

  • பெரிய திரையைப் பயன்படுத்துங்கள்: ஆன்லைன் வகுப்புகளை கூடியவரையில் பெரிய திரை உள்ள கணினியில் அட்டெண்ட் செய்வது மாணவர்களுக்கு நல்லது. பெரிய திரை உள்ள கணினிக்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் லேப்டாப் உபயோகிக்கலாம். எக்காரணம் கொண்டும் மொபைல் போனைத் தவிர்க்கவும். மொபைலில் பார்க்கும்போது கண்களுக்கு அதிக சிரமத்தையும், களைப்பையும் கொடுத்து தலைவலியை ஏற்படுத்தும்.
  • சரியான இடைவெளி: உங்கள் கண்களுக்கும் கணினித் திரைக்கும் இடையேயான இடைவெளி குறைந்தது 25 இன்ச் ஆவது இருக்க வேண்டும்.
  • பார்வை நிலை: உங்கள் பார்வையிலிருந்து கணினித் திரையானது சற்றே கீழிறங்கியபடி இருக்க வேண்டும்.
  • கண் இமைத்தல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 10 முதல் 15 முறை நாம் கண்களை இமைக்கிறோம். ஆனால், கணினித் திரையைப் பார்க்கும்போது அதை மறந்துவிடுகிறோம். புத்தகங்களை வாசிக்கும்போது சிரமம் ஏற்படாததற்கு, கணினித் திரைகளில் உள்ள பிக்செல்களே காரணம். அவற்றைப் பார்ப்பதற்காக நாம் கண்களுக்குக் கூடுதல் சிரமத்தைக் கொடுக்கிறோம். அதனால்தான் கண் எரிச்சல், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகின்றன. இவற்றைத் தவிர்க்க, கண்களை அடிக்கடி இமைக்க மறக்கக் கூடாது.
  • வசதியான நிலை: கணினி பயன்படுத்தும்போது வசதியாக உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
  • சரியான வெளிச்சம்: வெளிச்சமானது நேரடியாகக் கணினியில் படாமல், உங்களுக்குப் பின்னாலிருந்து வரும்படி பார்த்துக் கொள்ளவும். கணினி உபயோகிக்கும்போது, அதில் வெளியிலிருந்து வெளிச்சம் விழாதபடி பார்த்துக் கொள்ளவும்.
  • 20:20:20 விதி: இந்த விதி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொரு 20 நிமிடங்கள் கணினியைப் பயன்படுத்தியதும், 20 அடிகள் தொலைவிலுள்ள காட்சிகளை 20 நொடிகளுக்குப் பார்க்க வேண்டும் என்பதே இந்த விதி.

குழந்தைகளுக்கான சிறப்பு கவனம்:

கணினி பயன்படுத்தும்போது குழந்தைகளுக்குக் கண்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பது தெரிந்தால், பார்வை தொடர்பான பாதிப்புகள் உள்ளனவா என உடனடியாக மருத்துவரிடம் பரிசோதிக்கவும். பார்வை பாதிப்புகள் இருந்தால் அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளவும். கண்ணாடி தேவை என்றால் கட்டாயம் அணியவும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டினால் ஏற்படும் கண் வறட்சி மற்றும் பிற கண் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நம் கண்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தனுஜா