செய்தியைக் கேட்க / Listen to News
இயற்கையின் விந்தைகளுள் ஒன்று பறவைகளின் இடப்பெயர்ச்சி. “வலசை போதல்” எனப்படும் இந்தப் பயணம், வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது வாழ்வாதாரத்திற்கான ஒரு நெடிய போராட்டம். ஒவ்வோர் ஆண்டும் மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை (இந்த ஆண்டு மே 11) ‘உலக வலசை போகும் பறவைகள் நாள்’ கொண்டாடப்படுகிறது.
ஏன் இந்த நீண்ட பயணம்?
பொதுவாக, உலகின் வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கு பறவைகள் வலசை வருகின்றன. குளிர்காலம் தொடங்கியதும் வடபகுதியிலுள்ள நீர்நிலைகள் பனியால் உறைந்துவிடும். இதனால் மீன், பூச்சிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகள் கிடைப்பதில்லை. இந்த உணவுத் தட்டுப்பாட்டைப் போக்கவும், கடும் குளிரிலிருந்து தப்பிக்கவுமே பறவைகள் மிதவெப்பமண்டல நாடுகளை நோக்கிப் பயணிக்கின்றன.

மத்திய ஆசிய வான்வழிப் பாதை
உலகெங்கும் 12-க்கும் மேற்பட்ட வான்வழி வலசைப் பாதைகள் உள்ளன. இந்தியாவிற்கு வரும் பறவைகள் பெரும்பாலும் ‘மத்திய ஆசிய வான்வெளி வலசைப் பாதையை’ (Central Asian Flyway) தேர்ந்தெடுக்கின்றன. இவை கிழக்கு ஐரோப்பா, மத்திய ரஷ்யா, தென் சீனா, உஸ்பெகிஸ்தான் மற்றும் மங்கோலியா வழியாக இந்தியாவை வந்தடைகின்றன.
திசை காட்டும் இயற்கை நுட்பம்
பல்லாயிரம் மைல் பயணத்தில் பறவைகள் வழிதவறாமல் இருக்கப் பல்வேறு அதிசய முறைகளைக் கையாளுகின்றன:
-
பகல் மற்றும் இரவு: பகலில் சூரியனின் நிலையையும், இரவில் நட்சத்திரங்களையும் கொண்டு பாதையைத் தீர்மானிக்கின்றன.
-
பூமியின் காந்தப்புலம்: சில பறவைகள் மற்றும் கடல் ஆமைகள் பூமியின் காந்த அலைகளை உணர்ந்து பயணிக்கின்றன.
-
அடையாளங்கள்: நில அடையாளங்கள், வாசனை மற்றும் தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் அவை தங்களின் இலக்கை அடைகின்றன.
பழந்தமிழர் இலக்கியத்தில் வலசை
பறவைகளின் வலசை போதலைப் பற்றித் தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர்.
-
பழந்தமிழ் நூல்கள் வலசை போவதை ‘புலம்பெயர் புள்’ என்றும், ‘வம்பப் புள்’ என்றும் அழைக்கின்றன.
-
சத்திமுத்தப் புலவர் இயற்றிய ‘நாரை விடு தூது’ நூலில், “பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்” என்ற பாடல் வரிகள், ஐரோப்பாவிலிருந்து வரும் செங்கால் நாரைகளின் நீண்ட தூரப் பயணத்தைப் பதிவு செய்துள்ளன.
பறவைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள்
நவீன வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக வலசை வரும் பறவைகளின் எண்ணிக்கை 1980-களில் இருந்து வெகுவாகக் குறைந்து வருகிறது.
-
ஆற்றல் கட்டமைப்புகள்: காற்றாலைகள் மற்றும் மின்வழங்கல் கம்பிகளில் மோதி உலகளவில் ஆண்டுக்கு 1.40 லட்சம் முதல் 3.28 லட்சம் பறவைகள் வரை உயிரிழப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
வாழிட அழிப்பு: நீர்நிலைகள் குடியிருப்புகளாக மாறுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, 1980-களில் 5 லட்சம் பறவைகள் வந்த கோடியக்கரைக்கு, இன்று ஒரு லட்சத்திற்கும் குறைவான பறவைகளே வருகின்றன.
-
வேளாண் நச்சுகள்: பயிர்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பறவைகள் நேரடியாகப் பாதிக்கப்படுவதுடன், இயற்கை உயிர்ச் சங்கிலியும் அறுந்து போகிறது.
2026-ன் மையக்கருத்து: பயணப் பாதைகளின் பாதுகாப்பு
ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தின் அடிப்படையில் இந்நாள் அனுசரிக்கப்படும் நிலையில், 2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக “வலசைப் பறவைகளின் பயணப் பாதையில் நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல்” (Protecting Landscapes Along the Migratory Paths) என்பது முன்வைக்கப்பட்டுள்ளது. பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து வரும்போது, அவை இடையில் தங்கி இளைப்பாறவும், உணவு தேடிக்கொள்ளவும் பாதுகாப்பான நிலப்பரப்புகள் மிக அவசியமானவை. ஆனால், நகரமயமாதல் மற்றும் காடுகள் அழிப்பால் இத்தகைய வாழிடங்கள் சுருங்கி வருகின்றன. எனவே, வெறும் புகலிடங்களை மட்டும் காக்காமல், அவை பயணிக்கும் முழுப் பாதையிலுள்ள காடுகள், புல்வெளிகள் மற்றும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. இத்தகைய நிலப்பரப்புகளை மீட்டெடுப்பதன் மூலமே, வருங்கால சந்ததியினரும் இந்தப் பறவைகளின் வியத்தகு பயணத்தைக் காணும் வாய்ப்பைப் பெற முடியும்.
நாம் செய்ய வேண்டியது என்ன?
பறவைகள் வேளாண்மைக்கு உற்ற துணையாகவும், இயற்கைச் சூழலின் சமநிலையைப் பாதுகாப்பவர்களாகவும் இருக்கின்றன. இந்த ஆண்டு வலசை போதல் நாளுக்கான கருப்பொருள்: “பறவைகள் பாதுகாப்புக்காக நம் குரல்களை ஒருங்கிணைப்போம்” (Protect Insects, Protect Birds – பறவைகளின் உணவு ஆதாரமான பூச்சிகளைப் பாதுகாப்பதையும் இது வலியுறுத்துகிறது).
நமது நீர்நிலைகளையும், காடுகளையும் பாதுகாப்பதன் மூலமே இந்தப் பறவை இனங்களை அழியாமல் காக்க முடியும். பறவைகளைப் பாதுகாப்பது என்பது ஒட்டுமொத்த சுற்றுச்சூழலை மேம்படுத்துவதாகும்.
நிலவளம் ரெங்கராஜன்


