உலக புற்றுநோய் தினம்: மிரட்டும் புள்ளிவிவரங்களும்… மீட்கும் மருத்துவமும்!

உலக புற்றுநோய் தினம்: மிரட்டும் புள்ளிவிவரங்களும்… மீட்கும் மருத்துவமும்!

ண்டுதோறும் பிப்ரவரி 4-ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகில் கண்டறியப்பட்டுள்ள கொடிய நோய்களில் ஒன்றாக புற்றுநோய் இருந்தாலும், இன்றைய மருத்துவ வளர்ச்சியால் தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் உயிரைக் காக்க இயலும் என்பதே ஆறுதலான செய்தி.

வரலாறும் விழிப்புணர்வும்

1993-ஆம் ஆண்டு ஜெனிவாவில், புற்றுநோயைக் கட்டுப்படுத்த அனைத்துலக புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பு (UICC) நிறுவப்பட்டது. புற்றுநோயை வேரோடு ஒழிக்கவும், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு உருவான அதே ஆண்டில், ஜெனிவாவில் முதல் அனைத்துலக புற்றுநோய் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர், 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் உலக புற்றுநோய் தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இத்தினம் 2026-இன் தீம் “United by Unique” ஆகும்.இது 2025-2027 காலகட்டத்திற்கான மூன்றாண்டு பிரச்சாரத்தின் (three-year campaign) இரண்டாம் ஆண்டு தீமாகும். இந்த தீம் மக்களை மையமாகக் கொண்டு (people-centred approach) புற்றுநோய் சிகிச்சையை அணுகுவதை வலியுறுத்துகிறது.முக்கிய கருத்துகள்:

  • ஒவ்வொரு புற்றுநோய் அனுபவமும் தனித்துவமானது (Unique).
  • ஆனால் அனைவரும் ஒன்றிணைந்து (United) செயல்படுவதன் மூலம், நோயை மட்டும் பார்க்காமல் நபரை முன்னிலைப்படுத்தி சிறந்த பராமரிப்பை உருவாக்க முடியும்.
  • நோயாளிகள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளின் தேவைகளை மையமாகக் கொண்டு சிகிச்சை அளிப்பதை ஊக்குவிக்கிறது.

மிரட்டும் புள்ளிவிவரங்கள்

உலக அளவில் உயிரிழப்பிற்கான காரணியில் மாரடைப்பிற்கு அடுத்து இரண்டாவதாக புற்றுநோய் உள்ளது.

  • பாதிப்பு: 2022-ஆம் ஆண்டில் சுமார் 2 கோடி பேர் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில், 97 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

  • எதிர்காலக் கணிப்பு: 2050-ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு 3 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும், இது 2022-ஐ விட 77% அதிகம்.

  • விகிதாச்சாரம்: உலக அளவில் உயிரிழக்கும் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் புற்றுநோயால் இறப்பதாக உலக நலவாழ்வு நிறுவனம் (WHO) கூறுகிறது. 5 ஆண்டுகளில் 5.35 கோடி பேருக்குப் புற்றுநோய் கண்டறியப்பட்டதில், 9 ஆண்களில் 1 ஆண் மற்றும் 12 பெண்களில் 1 பெண் என்ற விகிதத்தில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அனைத்துலக அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிய காரணி: காலநிலை மாற்றம்

சமீபத்திய ஆய்வுகளின்படி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் புற்றுநோய் காரணியாக மாறியுள்ளது.

  • புவி வெப்பமடைதல்: நாசாவின் ஆய்வுப்படி பூமியின் வெப்பநிலை 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. பசுமைக்குடில் வாயுக்களை வெளியேற்றும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

  • ஓசோன் பாதிப்பு: ஓசோன் படல ஓட்டை வழியாக வரும் புற ஊதாக் கதிர்கள் தோலில் படும்போது மெலனோமா, தோல் புற்றுநோய் ஏற்படக்கூடும்.

  • வாழ்க்கை முறை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை சீற்றங்களால் மக்கள் தரமற்ற நீர் மற்றும் உணவை உண்ணத் தள்ளப்படுகிறார்கள். இது வயிறு, குடல், மண்ணீரல் சார்ந்த புற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது.

பரவலாகக் காணப்படும் புற்றுநோய்கள்

புற்றுநோய் சுமார் 200 வகைப்படும். இது நாடுகளுக்கு ஏற்பவும் மாறுபடுகிறது:

  • இந்தியா: வாய் மற்றும் நாக்குப் புற்றுநோய் அதிகம்.

  • பிற நாடுகள்: ஆப்பிரிக்காவில் கல்லீரல், இங்கிலாந்தில் நுரையீரல்-மார்பு, ஜப்பானில் வயிற்றுப் புற்றுநோய் அதிகம்.

  • பாலின வாரியாக: ஆண்களுக்கு நுரையீரல், வயிறு சார்ந்த பாதிப்புகளும், பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்களும் அதிகம் தாக்குகின்றன.

வருமுன் காக்க… பரிசோதனை முறைகள்

ஆண்களுக்கு (60 வயதுக்கு மேல்) பெண்களுக்கு (40 வயதுக்கு மேல்)
புராஸ்டேட்: PSA ரத்தப் பரிசோதனை மற்றும் சோனோ கிராம். மார்பகம்: சுய பரிசோதனை மற்றும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மமோகிராம்.
நுரையீரல்: புகைப்பிடிப்பவர்கள் சளிப் பரிசோதனை மற்றும் மார்பு எக்ஸ்ரே. கர்ப்பப்பை வாய்: 35 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு ஒருமுறை பாப் ஸ்மியர் (Pap smear).
குடல்: மலப் பரிசோதனை மற்றும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுண்குழாய் பரிசோதனை. சினைப்பை: ஆண்டுக்கு ஒருமுறை ஸ்கேன் மற்றும் CA125 ரத்தப் பரிசோதனை.

கண்டறியும் முறைகள்: சந்தேகம் ஏற்பட்டால் ரத்தப் பரிசோதனை, CT, MRI, பெட் ஸ்கேன் ஆகியவை செய்யப்படும். இறுதியாக திசுப் பரிசோதனை (Biopsy / FNAC) மூலம் உறுதி செய்யப்படும்.

நாம் செய்ய வேண்டியது என்ன?

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை ஒழித்து, நார்ச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். உடலில் வலி இல்லாவிட்டாலும் தோன்றும் தேவையற்ற கட்டிகள், திடீர் எடையிழப்பு, ஜீரணக்கோளாறு, நீண்ட கால இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம். சிகிச்சைக்குப் பின் 5 ஆண்டுகள் தொல்லை ஏதுமின்றி இருந்தால் அவர்கள் புற்றுநோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் கருதலாம்.

நிலவளம் ரெங்கராஜன்