சர்வதேச பிரெய்லி நாள்!

சர்வதேச பிரெய்லி நாள்!

ம் ஒவ்வொருவரிம் முகத்துக்கும் அழகு சேர்க்கும் முக்கிய உறுப்பு கண். நாம் இந்த உலகைப் பார்க்க, ரசிக்க, வியக்க வருந்த உதவுவது கண்கள். அம்மாக்கள் குழந்தைகளைப் பார்த்து சந்தோஷப்படும் போதெல்லாம் ‘என் கண்ணு’ என்று அன்பொழுக கொஞ்சுகிறார்கள். ஆனந்தமான வாழ்க்கைக்குக் கண்கள் மிகவும் அவசியம்.நாம் பார்க்கும் பொருட்களை எல்லாம் அதனதன் தன்மை மாறாமல் காட்டுவது கண்களின் மகிமை. கண்களை கேமராவோடு ஒப்பிடுவார்கள். புகைப்படம் எடுக்கப்படுபவரின் பிம்பம் அதன் லென்ஸ் வழியாக கேமராவில் விழுவதுமாதிரி, நாம் பார்க்கும் பொருளின் பிம்பம் கண்ணில் உள்ள விழிலென்ஸ் வழியாக விழித்திரையில் விழுகிறது. அதை பார்வை நரம்பு மூளைக்கு அனுப்புகிறது. அந்தச் செய்தியை மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் மூளை உணர்ந்து கொண்டு நாம் பார்க்கும் பொருளை உணர்த்துகிறது. இதை உணர வேண்டுமானால் இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளையே சிறிது நேரம் கண்களை மூடியபடி செய்து பாருங்கள், மிகவும் கஷ்டம் இல்லையா? நம் அந்த சில நிமிட இருட்டு உலகம் மாதிரிதான் பார்வைத் திறன் சவால் உடையவர்களுடைய மொத்த வாழ்க்கையுமே . பார்வைத் திறன் சவால் உடையவங்களின் தொடக்கக் காலத்தில் எல்லா விஷயங்களுக்கும் மற்றவர்களின் உதவியை நாடி இருக்க வேண்டிய மாதிரியான சூழ்நிலை இருக்கும். போக போக சகல வேலைகளையும் எவரின் உதவியும் இல்லாமல் தாங்களாகவே செய்யப் பழகி கொள்வர். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அவர்களால் செய்ய முடியாமலே இருந்தது. அதுதான் படிப்பது.. எல்லா விஷயங்களையும் சுயமாக செய்ய முடிந்த அவர்களால் சுயமாக படிக்க மட்டும் முடியாமல் போய் விடுகிறது.. இதை போக்கவே தடித்த புள்ளிகளை விரலால் தொடுவதன் மூலம் பாடங்களை கற்க பிரெய்லி எழுத்துக்கள் உதவுகிறது. இதை கண்டுபிடித்தவர் லூயிஸ் பிரெய்லி. இவர் 1809 ஜனவரி 4-ம் தேதி பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். ஆக பார்வையற்றோர் விரல்களால் தடவிப்பார்த்து படிப்பதற்கு ஏற்ற ‘பிரெய்லி’ எழுத்து முறையை உருவாக்கிய லுாயி பிரெய்லியின் பிறந்தநாள் (ஜன.4) உலக பிரெய்லி தினமாக கடைபிடிக்க படுகிறது.

இந்த ரெய்லியின் அப்பா செருப்பு தயாரிப்பவர். ஒய்வு நேரத்தில் சிறுவன் பிரெய்லி அப்பாவின் பட்டறையில் விளையாடுவார் ஒரு நாள் ஊசியை வைத்து விளையாடும் போது அந்த ஊசி பிரெய்லியின் கண்ணில் குத்திவிட்டதால் இரத்தம் வழிந்தது. கண்ணில் குத்திய கம்பி பார்வையின் நரம்பையே பாதித்துவிட்டது. அந்த நரம்பு மற்ற நரம்புக்கும் தொடர்புடையது. அதனால் மற்றொரு கண்ணிலும் பார்வை போய்விட்டது. ஆனாலும் பிரெய்லி பார்வை போனதைப் பற்றி வருந்தாமல் துறு, துறு சிறுவனாகவே இருந்தார். பள்ளியில் கரும்பலகையும் புத்தகத்தையும் பார்க்க முடியவில்லை என்றாலும் ஆசிரியர் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு சிறந்த மாணவராக வலம் வந்தார். தொடக்கக் கல்வியை முடித்தபின் பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார். மேற்படிப்பைத் தொடரும் போதுதான் பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள சிரமம் இருப்பதாகத் தோன்றியது. அந்நேரத்தில் பிரெஞ்சு ராணுவத்தில் இரவு நேர எழுத்து என்ற முறையை அறிமுகம் செய்தனர். 12 புள்ளிகளை அடையாளமாகக் கொண்டு ராணுவ வீரர்கள் விஷயத்தைப் புரிந்து கொள்வார்கள். இதை உருவாக்கியவர் சார்லஸ் பார்ப்பியர். இந்த முறை சிரமமாக இருந்ததால் எல்லோராலும் படிக்க முடியவில்லை. எனவே பிரெஞ்சு ராணுவம் இந்த முறையைக் கைவிட்டது. ஆனால் இந்த முறை பார்வையற்றோர் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கும் இதேபோல சிரமங்கள் ஏற்பட்டன.

பிரெய்லி இந்த சிரமங்களைக் களைந்து ஒரு புதிய உத்தியைக் கண்டுப்பிடித்தார். அவரின் அன்றைய முயற்சியின் பலனாகத்தான் பார்வையற்றோரால் எளிதாய் படிப்பதற்கு பிரெய்லி முறை உருவானது. பார்வைக்குறைபாடு முற்றாக இழந்தவர்கள் அல்லது பெருமளவுக்குப் பார்வை தெரியாதவர்கள் இயக்கத்தின் போது தடைகளை உணர்ந்து கொள்ள தகவல் தொடர்பு நுட்பம் சேர்ந்த குச்சிகள், கம்புகள் பயன்படுகின்றன. கேளா ஒலி நுட்பத்தை பயன்படுத்தி எக்கோ லொகேஷன் சிக்னல் என்ற எதிரொலியால் இடமறியும் சமிக்ஞைகள் மூலம் உண்டாகும் அதிர்வுகள் அல்லது தொடு உணர்வு அல்லது ஒலி மூலமாக எந்தவிதமான நிலப்பரப்பிலும் தடைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.

வாசிப்பது என்பது மிகவும் அத்திவாசியமான தினசரி வேலையாகும். செய்தித்தாள் அல்லது பாடப்புத்தகம் மட்டுமின்றி விலைப்பட்டியல் போன்றவற்றைப் படிப்பதும் இதில் அடங்கும் இந்த வேலையைச் செய்ய பார்வையற்றவர்களுக்கு பெரும் துணையாக உதவு நுட்பம் பயன்படுகிறது. ஆப்டிகல் கேரக்டர் ரீடர் என்ற நுட்பம் இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பேசும் புத்தகத்திற்கான சர்வதேசத் தர அளவான டெய்ஸி தரமே இதற்கு அளவு கோலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அல்பினிஸம் குறைபாடு உள்ள நபர்களுக்குப் பள்ளியிலும், வேலைப்பார்க்கும் இடத்திலும், ஏனைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் உதவ வீடியோ மேக்னிபையர் என்ற காணொளிப் பெருக்கி நுட்பம் உதவுகிறது. காணொளிப் பெருக்கிகளில் உள்ள முரண் தகவுகளை மாற்றியமைத்து, அசௌகரியமோ, கோர்வோ ஏற்படாமல் காட்சிகளை பெருக்கிப் பார்த்துக் கொள்ளமுடியும் இப்படி பல தொழில்நுட்பங்கள் இப்போது பெருகினாலும், பிரெய்லி முறையை உருவாக்கியவரை யாராலும் மறக்க முடியாது.இந்த பிரெய்லி உலகம் முழுதும் பார்வையற்றவர்கள் படிக்கும் ஒரு படிப்பாக இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரையில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மக்களிடையே போதிய விழிப்புணர்ச்சி இல்லாததும், பள்ளி கல்லூரிகளில் உயர்படிப்பிற்கான போதிய வசதி இல்லாததும் ஒரு காரணம். இதே காரணத்தால் அறிவியலும் விஞ்ஞானமும் பெருகி வரும் இக்காலகட்டத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை இன்னும் அதளபாதாளத்திலேயே இருக்கிறது. இவர்களுக்கென்று உணவகங்கள், வங்கிகள் மருத்துவமனைகள் போன்ற பல நிறுவனங்களில் உள்ள அறிக்கைகளை தெரிந்துக்கொள்ள அல்லது தங்களுக்கான மெனுகளை கேட்டுப்பெற போதிய வசதிகள் இல்லை. அதனால் அவர்கள் இது போன்ற இடங்களில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்க்கவேண்டியுள்ளது. இந்தநிலை மாறவேண்டுமென்றால் மக்களிடையே இவர்களை பற்றிய விழிப்புணர்வு அவசியம் தேவை. தகவல்தொழில்நுட்பம் அதிகரித்து வரும் இச்சமயத்தில் இவர்களுக்கான பிரத்யேக கணினி பயன்பாட்டை உருவாக்கி, இவர்களுக்கு மக்களின் மத்தியில் வாலைவாய்ப்புகளை அதிகரிக்க ஆவண செய்யவேண்டும்.

லூயிஸ் பிரெய்லி பிறந்த தின மற்றும், உலக பிரெய்லி தினம் சிறப்புக் கட்டுரை இது!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts