விண்டோஸ் 11 பயனர்களே உஷார்! லாக் ஸ்கிரீனில் ஒரு ‘மாயாஜாலம்’ – மைக்ரோசாஃப்ட் விடுத்த முக்கிய அப்டேட்!
வழக்கமாக ஒரு ‘அப்டேட்’ (Update) வந்தால், கணினியின் வேகம் கூடும் அல்லது புதிய வசதிகள் வரும் என்றுதான் நாம் எதிர்பாப்போம். ஆனால், சமீபத்திய விண்டோஸ் 11 அப்டேட் ஒன்று, பயனர்களுக்கு ஒரு குழப்பமான ‘கண்ணாமூச்சி’ விளையாட்டைக் காட்டி வருகிறது. லாக் ஸ்கிரீனில் இருக்க வேண்டிய முக்கியமான ஒரு ‘ஐகான்’ (Icon) திடீரென மாயமாக மறைந்துவிடுவதால் பயனர்கள் திகைத்துப் போயுள்ளனர்.
என்ன பிரச்சனை?
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட விண்டோஸ் 11 அப்டேட்களை (குறிப்பாக KB5064081 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகள்) இன்ஸ்டால் செய்த பயனர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

வழக்கமாக நாம் கணினியைத் திறக்கும்போது (Lock Screen), உள்நுழைவதற்குப் பல வழிகள் இருக்கும் (PIN, Fingerprint, Face ID). அதில் “Password” (கடவுச்சொல்) என்பதும் ஒரு முக்கியத் தேர்வாக இருக்கும். ஆனால், இந்த அப்டேட்டிற்குப் பிறகு, அந்த ‘Password’ ஐகான் மட்டும் திரையில் தெரிவதில்லை.
யாரெல்லாம் பாதிப்பு?
ஆகஸ்ட் 2025-ல் வெளியான முன்னோட்ட அப்டேட் (Preview Update) மற்றும் விண்டோஸ் 11-ன் 24H2 மற்றும் 25H2 வெர்ஷன்களைப் பயன்படுத்துபவர்கள் தான் இந்தச் சிக்கலில் அதிகம் சிக்கியுள்ளனர்.
பயப்பட வேண்டாம்… ஆனால் கவனிக்கவும்!
இது குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. “ஐகான் கண்ணுக்குத் தெரியவில்லை என்றாலும், அந்த வசதி (Feature) அங்கேதான் இருக்கிறது” என்று கூறியுள்ளது.
அதாவது, ஐகான் இருக்க வேண்டிய அந்த காலி இடத்தில், உங்கள் மவுஸை (Mouse) கொண்டு சென்றாலோ (Hover), அல்லது கிளிக் செய்தாலோ, பாஸ்வேர்ட் உள்ளிடும் வசதி வேலை செய்யும். இது ஒரு காட்சிப் பிழை (Visual Bug) மட்டுமே தவிர, பாதுகாப்பு குறைபாடு இல்லை.
தீர்வு என்ன?
தற்போது மைக்ரோசாஃப்ட் பொறியாளர்கள் இதற்கான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் (Developing a Solution). அதுவரை, பயனர்கள் பாஸ்வேர்ட் ஐகான் தெரியவில்லை என்று பதறாமல், அந்த இடத்தில் கிளிக் செய்து வழக்கம்போல் பயன்படுத்தலாம். விரைவில் வரவிருக்கும் அடுத்த அப்டேட்டில் இந்தப் பிழை சரிசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்தையின் டெக் டிப்ஸ்
கணினித் திரையில் திடீரென ஏதேனும் ஆப்ஷன் காணாமல் போனால், உடனே ரீ-ஸ்டார்ட் (Restart) செய்ய வேண்டாம். இதுபோல மென்பொருள் சார்ந்த பிழையாகவும் (Bug) இருக்கலாம். அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்பதே புத்திசாலித்தனம்.
தனுஜா


