“‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ – இயக்குநர் ஞானவேல் விளக்கம்!

“‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ – இயக்குநர் ஞானவேல் விளக்கம்!

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.. இவர் பிரபல வார இதழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இந்தப்படத்தின் கதாநாயகனாக அசோக் செல்வன் மற்றும் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே.பிரசன்னா. வரும் 28ம் தேதி ரிலீஸாகும்  இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ஆயிரத்தில் ஒருத்தனுக்கும் கூட்டத்தில் ஒருத்த னுக்கும் என்ன வித்தியாசம் என்பதை விளக்கினார்.. அதாவது, “சூப்பராக படிக்காத, அதேசமயம் மோசமாகவும் இல்லாத மிடில் பெஞ்ச் மாணவர்களின் வாழ்க்கை தான் இந்த கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் கரு. முன்பு வானொலி யில் பணிபுரிந்த தென்கச்சி கோ.சுவாமிநாதன் என்கிற பேச்சாளரை சந்தித்தபோது அவர், நான் ஒரு மிடில் பெஞ்ச் மாணவன் என்று தன்னை சொல்லிக்கொண்டார்..அப்படிப்பட்டவர் தனக்குள் இருக்கும் திறமையை கண்டறிந்து ஒரு பேச்சாளராக மாறி, தினந்தோறும் அதிகாலையில் எழுந்ததுமே அவரது குரலை மக்கள் கேட்கும் அளவுக்கு மாறினார். அப்படி தனக்குள் என்ன திறமை இருக்கிறது என்பதை கண்டரிபவன் ஆயிரத்தில் ஒருத்தனாக மாறுகிறான்.. அப்படி கண்டுபிடிக்க இயலாதவன் கோட்டத்தில் ஒருத்தனாகவே இருந்து விடுகிறான்.. இது இந்தப்படத்தின் நாயகனின் கதை”என தெரிவித்தார் இயக்குனர் ஞானவேல்.

இதனிடையே இந்த ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் புதுமையான விளம்பர பாணியில் தனித்துவம் தெரிகின்றன‘இது மாதிரி விளம்பரம் செய்யும் ஐடியா எப்படி வந்தது?’ என்ற கேட்ட போது இயக்குநர் த.செ. ஞானவேல் சொன்ன பதில் இதுதான்:

”இப்போதைய சினிமாவுக்கு குறுக்கு வழியில் விளம்பரம் தேடுவதற்கு ஒரு வரைமுறை இல்லாமல் ஆகி விட்டது. ஹீரோ, ஹீரோயின் காதல் என்று படம் ரிலீஸ் ஆகும் போது கதை கட்டுவது. ஏதாவது சாதி சங்கம், மத இயக்கத்தை தூண்டி விட்டு படத்திற்கு விளம்பரம் தேடுவது என்ற போக்கெல்லாம் நிலவுகிறது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். அதே சமயம் பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.. மணமே போதும்’னு சொல்லுவாங்க. ஆனா, பூந்தோட்டமே வெச்சிருந்தாலும் மார்கெட்டிங் தேவைப்படுது. கதையை நம்பி எடுக்கிற படங்களுக்கு, ரொம்ப செலவு செஞ்சு மார்கெட்டிங் பண்ண முடியாது. மலையாளத்துல ஹீரோ, ஹீரோயின், இயக்குநர்கள் எல்லாரும் சேர்ந்து எல்லாப் படத்துக்கும் சோஷியல் மீடியாவுல மார்கெட்டிங் பண்றாங்க. அதேபோல நம்ம படத்துக்கு முயற்சி செய்யலாமேன்னு தோணுச்சு.

பத்திரிகையாளனாக இவங்க எல்லாரோடவும் நல்ல பழக்கம் இருந்தது. ‘நான் படம் டைரக்ட் பண்றேன்னு சொன்னதும்’ வாழ்த்து சொல்லி, புரமோஷன் பாட்டுல எல்லாரும் பங்கெடுத்தாங்க. அசோக்செல்வன் மேலேயும் நிறைய ஹீரோக்களுக்கு நல்ல மதிப்பு இருக்கு. அவருக்காகவும் நிறையப் பேர் ஆர்வமா புரமோஷன் பண்ணாங்க. இப்படி எல்லா தரப்போட ஆதரவும் இருக்கிறதால, எல்லாம் நல்லபடியா நடக்குது.

ஆனாலும் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்தி  ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தைத் திரையரங்கம் வந்து ஏன் பார்க்க வேண்டும்?’ என்ற கேள்விக்கு, பதில் சொல்லும்படியாக புரமோஷன் ஐடியாக்களை உருவாக்க திட்டமிட்டோம். இந்த படத்தில் இடம்பெற்ற ‘மாற்றங்கள் ஒன்றேதான் மாறாதடா’ பாடலுக்கு, சாதாரண மக்கள் முதல் உச்சத்தில் இருக்கும் சினிமா நட்சத்திரங்கள்வரை பலரைப் பங்குபெற வைத்தோம். சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சமுத்திர கனி, விஷ்ணுவிஷால், பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் பெருந்தன்மையோடு எங்களின் புரமோஷனுக்கு உதவினர். அந்த ‘கிஃப்ட் சாங்’ பாடலை 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர், ஃபேஸ்புக்கில் பார்த்தனர். வாட்ஸ் அப் வீடியோவாகப் பகிர்ந்தனர்.

மேலும் கூட்டத்தில் ஒருத்தராக இருந்து ஆயிரத்தில் ஒருத்தராக மாறிய அப்துல் கலாம், ஜாக்கிஜான், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், மேரிகோம் போன்ற ஆளுமைகளைப் பற்றி இரண்டு நிமிட வீடியோ செய்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு. ‘ஏண்டா இப்படி?’ என்ற பாடலை வைத்து, ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று பிரபலங்கள் வாழ்வில் நடந்த சுவாரஷ்யமான விஷயங்களை வீடியோவாக வெளியிட்டோம். இந்த உத்திகள் அனைத்தும் படத்தின் கதையை ஒட்டியே செய்தோம். இதில் குறிப்பிட வேண்டியது என்ன வென்றால் பிரபலங்கள் பலரும் பெரிய மனதோடு ‘கூட்டத்தில் ஒருத்தன்’ திரைப்படத்துக்கு ஆதரவு அளித்தனர். இன்னும் நிறைய ஐடியாக்கள் உள்ளன. ரிலீஸுக்கு அப்புறம் இரண்டு வாரம் வரை இப்படிப் புதிய உத்திகளில் விளம்பரங்கள் வைத்திருக்கிறோம்” என்று தெம்பாக தெரிவித்தார் த.செ. ஞானவேல்.

Related Posts