நம் நாட்டின் பணவீக்க விகிதம் உங்களை என்ன செய்யும்? – கொஞ்சம் அலசல்!

நம் நாட்டின் பணவீக்க விகிதம் உங்களை என்ன செய்யும்? – கொஞ்சம் அலசல்!

நுகர்வோர் விலைக் குறியீட்டு மதிப்பீட்டின்படி மே 2021 இல், இந்தியாவின் பணவீக்க விகிதம் 6.3 %, கடந்த நவம்பர் 2020 க்குப் பிறகு இதுதான் அதிகபட்ச உயர்வு, அப்போது பணவீக்க விகிதம் 6.93 %. இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு தொலைக்காட்சிகள் இதைப் பற்றி பேசத் துவங்கின. ஆனால், நீங்கள் எப்போதாவது ஓய்வாக அமர்ந்து இந்தப் பணவீக்க விகிதம் உங்களை என்ன செய்யும் என்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா? இல்லையென்றால், உங்களுக்காக அது குறித்து நான் பேசுகிறேன். புறாக்களுக்கு மத்தியில் பூனையை விடுவதைப் போல இருந்தாலும், வேறு வழியில்லை.

1) ஒவ்வொரு மாதமும் அரசு, இந்த நுகர்வோர் விலை பணவீக்க விகிதங்களை வெளியிடுகிறது, இப்போது மே 2021 இல் பணவீக்கம் 6.3 % என்று செய்திகள் வருகிறபோது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு பொருளின் உண்மையான விலையை விட நீங்கள் 6.3 % அதிகம் விலை கொடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? இது குறித்தெல்லாம் நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?

நுகர்வோர் விலை பணவீக்கம் என்பது பல்வேறு பொருட்களின் விலையைத் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கண்டறியப்படுகிறது. இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகம் இந்தப் பணியைச் செய்கிறது. உணவுப் பொருட்கள் இந்தக் கணக்கீட்டில் 39.06 % அடங்கும். அதாவது ஒவ்வொரு இந்தியரும் தனது வருமானத்தில் ஐந்தில் இரண்டு பங்கை உணவுப் பொருட்களுக்காகச் செலவழிக்கிறார்கள்.நீங்கள் ஒருவேளை இதை வாசிக்க நேர்ந்தால், உங்கள் உணவுக்கான செலவு 39.06 % க்கும் குறைய வாய்ப்பிருக்கிறது.

அதாவது, ஆங்கிலத்தில் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்கள், ஏனெனில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் சராசரி இந்தியரை விட ஓரளவு பொருளாதார மேம்பாடு கண்டவர்கள். பண வீக்கம் 6.3 % என்பது உங்கள் மீதான சராசரி பண வீக்கம், ஒருவேளை இது கொஞ்சம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். உங்கள் வழக்கமான நுகர்வைப் பொறுத்தது அது.

நாம் பெட்ரோல் விலையை எடுத்துக் கொள்வோம்; மொத்த விலைக் குறியீட்டு அடிப்படையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அது 62.28 % உயர்ந்திருக்கிறது. (கடந்த மாதங்களில் இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை) பண வீக்க விகிதத்தில், அதாவது மொத்த விலைக் குறியீட்டுக் கணக்கின்படி பெட்ரோலின் மதிப்பு 1.6 %, நுகர்வோர் விலைக் குறியீட்டு மதிப்பீட்டின்படி அது 2.19 %, உங்கள் மொத்த செலவுக் கணக்கின் கீழ் பெட்ரோலுக்கு நீங்கள் செலவழிக்கும் தொகையானது இந்த விகிதத்தை விட அதிகமானதாக இருக்கும்.

ஒரு சிறிய கூடுதல் தகவலாக, தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலையானது நேரடியாக உணவுப் பொருட்களைத்தான் தாக்கும். ஏனெனில், உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து நுகர்விடத்தை அடைய வேண்டும்.

2) வருமானம் அதிகரிக்கும்போது , ஒட்டுமொத்தச் செலவினங்களில் உணவுக்கான விகிதம் குறையும். அதேபோல, ஒரு சராசரி மனிதரின் உணவுப் பழக்கத்தில் வழக்கமான தானிய வகைகளை விட புரதச்சத்து மிக்க உணவுப் பொருட்களின் விகிதம் அதிகரிக்கும். அதாவது, வருமானம் அதிகரிக்கும்போது இயல்பாகவே மனிதர்கள் முட்டை, பயறு வகைகள் மற்றும் இறைச்சி விகிதத்தை அதிகரிக்கிறார்கள். அதேபோல பாலுக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கும்.

எளிமையான உண்மை என்ன வென்றால், நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி நகர்ப்புற மனிதர் களின் உணவுக்கான ஒதுக்கீடு அல்லது செலவு விகிதம் கிராமப் புறங்களைக் காட்டிலும் மிக அதிகம். நகர்ப்புற மக்களின் உணவுக்கான மதிப்பீடு 29.62 % ஆகவும், கிராமப்புற மக்களின் உணவுக்கான மதிப்பீடு மிக அதிகபட்சமாக 47.25 % ஆக இருக்கிறது.

அதாவது நுகர்வோர் விலைக் குறியீட்டில் உணவுப் பொருட்களுக்கான விகிதம். இதற்கான முதன்மைக் காரணம், நகர்ப்புற மனிதர்கள் இயல்பாகவே கிராமப்புற மனிதர்களை விட அதிகம் பொருளீட்டுபவர்களாக இருக்கிறார்கள். பொருளாதார வேறுபாடு உணவுக்கான செலவு ஒதுக்கீட்டைப் பாதிக்கிறது.

வருமானம் அதிகரிக்கும்போது வேறு எதற்கும் செலவிடுவதை விட மனிதர்கள் உணவுக்காகச் செலவழிப்பது அதிகரிப்பது இயல்பானதுதான். அது மிக முக்கியமானதும் கூட; இனி, உங்கள் உணவுத் தொகுப்பு மட்டுமன்றி பல்வேறு பொருட்களின் விலை, நுகர்வோர் விலைக் குறியீடு மற்றும் பணவீக்கம் இவற்றுக்கான ஒரு சங்கிலித் தொடர் பிணைப்பை நாம் பார்க்கலாம்.

குறிப்பாக, படுக்கையோடு தொடர்புடைய பல்வேறு பொருட்கள், ஆடை அடுக்கு மேசைகள், அலமாரிகள், நாற்காலிகள், பல்வேறு வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், குளியலறை மற்றும் கழிவறை தொடர்பான பொருட்கள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், ஏர் கண்டிஷனர்கள், தையல் எந்திரம், துணி துவைக்கும் எந்திரம், மின் மாற்றிகள், ஃபிரிட்ஜ் இவற்றின் விலை மீதான பண வீக்கம் மே 2021 கணக்கின்படி 3.89 % ஆக இருக்கிறது.

இங்குதான் விஷயம் இருக்கிறது. ஒரு நடுத்தர இந்தியரின் வாழ்க்கையில் மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் ஓரளவு இலகுவாக வாழ்வதற்கு அவசியமான பொருட்கள். வழக்கமான செலவினங்களை இது பெரிய அளவில் பாதிக்கப் போவதில்லை, ஏனெனில் மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் ஒருமுறை வாங்கும் தன்மை கொண்டவை. அடிக்கடி இவற்றை வாங்க வேண்டிய தேவை இல்லை.

எனவே இது பண வீக்கத்தின் பாதிப்புகளை வழங்காது என்று வைத்துக் கொள்வோம். அரசுக்கு இது ஒரு பெரிய கவலை இல்லை, அரசு சமூகத்தில் பணவீக்கம் பெரிய அளவில் தாக்கம் விளைவிப்பதாகக் கணக்குக் காட்ட விரும்புகிறது. இது வட்டி விகித மாற்றங்களில் அரசுக்கு உறுதுணையாக இருக்கும்.

3) இதற்கு நேர்மாறான ஒரு விஷயமும் இருக்கிறது. உடல் நலம் / மருத்துவம் தொடர்பான பண வீக்கம் மதிப்பானது கடந்த ஆண்டில் 8.44 % ஆக இருக்கிறது. நகர்ப்புற மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தியவர் களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது நிலைமை என்ன என்று. மருத்துவக் கருவிகள் மற்றும் மருந்துகளின் விலை பெருந் தொற்றுக் காலத்தில் உச்சத்தைத் தொட்டது.

கறுப்புச் சந்தை கொடி கட்டிப் பறந்தது, பணவீக்கமாவது ஒன்றாவது என்று விண்ணை முட்டிய ஒரு விலை உயர்வை இந்தச் சந்தையில் நம்மால் உணர முடிந்தது. மருத்துவமனைகளுக்குச் செல்வது பெரும்பாலான மனிதர்களுக்கு வழக்கமான விஷயமில்லை. (அதாவது நான் குறிப்பிடுவது, நீண்ட கால நோய்கள் அல்லது தீவிர மருத்துவ உதவி தேவைப்படுகிற மருத்துவமனைகளை) கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் அப்படி அல்ல. பெரும்பாலானவர்கள் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவழிக்க வேண்டி யிருந்தது. அல்லது நமக்கு நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களின் மருத்துவச் செலவுக்கு உதவி செய்ய வேண்டியிருந்தது. இது மருத்துவச் செலவுகளை மிகப் பெரிய அளவில் உயர்த்தியது.

கடந்த காலங்களை விட இந்த ஆண்டில் மருத்துவத் தொகுப்பிற்கான ஒதுக்கீடு மிகப் பெரிய அளவில் இருந்தது. ஆகவே, ஒரே ஒரு எதிர்பாராத செலவு என்பது மிகப்பெரிய அளவில் நம்முடைய பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வலிமை கொண்டது. அரசு கணக்கிடுகிற நுகர்வோர் விலைக் குறியீட்டு விகிதங்களில் இத்தகைய கணக்குகள் காட்டப்படுவதில்லை.

ஒரு கூடுதல் தகவலுக்காக, கேர் ரேட்டிங்ஸ், நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர், திரு.மதன் சப்னாவிஸ் அவர்களின் கூற்றுப்படி “பணவீக்க விகித எண்களில் இருக்கும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், தனிப்பட்ட செலவுகள், மருத்துவம் / உடல் நலம், பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்தில் நிகழ்கிற விலை உயர்வு என்பது திரும்பக் கீழிறங்குவதே இல்லை. உயர்ந்த விலையையே நாம் அடிப்படை விலையாக எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால், பண வீக்கம் ஒரு நிதி ஆண்டில் உயரும் விலையை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. ஆண்டு சராசரி பண வீக்கம் என்பது மிகப் பெரிய அளவில் உயரவில்லை என்றாலும், விலைவாசி உயரவில்லை என்று பொருள் அல்ல.

4) வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு ஆண்டுகளில், வெவ்வேறு பண வீக்க விகிதங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019-20 நிதி ஆண்டில், பெரிய மாநிலங்களின் வரிசையில் கேரளா அதிகபட்சப் பண வீக்க விகிதமான 6.1 % அளவையும், பீகார் குறைந்த பட்சப் பணவீக்க விகிதமான 2.2 % அளவையும் பதிவு செய்தன. இதன் பொருள் என்ன?

நீங்கள் வசிக்கும் நிலப்பரப்பும் உங்களை பாதிக்கும் பண வீக்கத்துக்கான ஒரு காரணியாக இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இன்னும் சொல்லப் போனால், பணவீக்க அழுத்தமானது நகர்ப்புறம், கிராமப்புறம் போன்ற நில வேறுபாடுகளின் அடிப்படையிலும் மாறுபடுகிறது,

5) தெளிவாக, அரசு அறிவிக்கும் பண வீக்கம் என்பது உங்களிடம் நேரடியாக எதுவும் சொல்வதில்லை. அந்தக் கணக்கை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், முதலும், முடிவுமாக நீங்கள் வழக்கமாகச் செய்யும் செலவுக் கணக்கை நீங்களாகவே தணிக்கை செய்து பாருங்கள், வியப்படைவீர்கள்.

இது ஒன்றும் மிகப் பெரிய வேலை அல்ல, ஒருவேளை நீங்கள் இணையத்தின் வழியாகப் பொருட்களை வாங்கும் பழக்கம் உள்ளவராகவோ, மின்னணுப் பரிவர்த்தனைகள் மேற்கொள்பவராகவோ இருந்தால் இது மிக எளிதான வேலை. இதில் மிக முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது, எல்லாப் பொருட்களின் விலையையும் கண்காணிக்க வேண்டியதில்லை என்பதுதான். மிக முக்கியமான சில பொருட்களின் செலவுக் கணக்கை நீங்கள் தணிக்கை செய்தால் கூடப் போதுமானது.

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இதை நீங்கள் பழக்கப்படுத்திக் கொண்டால், உங்கள் மாதாந்திரச் செலவுகள் எந்தத் திசையில் பயணிக்கிறது என்கிற பொருளாதார ஒழுக்கத்தை நீங்கள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. செலவுகளைப் பற்றிய ஒரு கால அளவீட்டு வரைவையும் இது உங்களுக்கு வழங்கும்,

இந்த முறையானது முழுமையான தவறுகள் இல்லாத பொருளாதாரக் கணக்கீட்டு முறை இல்லை. ஆனால், தோராயமாக அரசு அறிவிக்கும் பணவீக்க விகிதம், நுகர்வோர் விலைக் குறியீடுகள் போன்றவற்றின் தாக்கங்களைத் தனிப்பட்ட முறையில் நம்முடைய வாழ்க்கையில் உள்ளீடு செய்து பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இது இருக்கும்.

கட்டுரையாளர் : திரு.விவேக் கவுல் –
பொருளாதார விமர்சகர், எழுத்தாளர்.

தமிழில்: கை.அறிவழகன்

error: Content is protected !!