உத்தரகாண்ட் மாநில புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு!

உத்தரகாண்ட் மாநில புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு!

த்தரகாண்ட் மாநிலத்தில் நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது பாஜக அரசு. ஆனாலும் அடுத்தடுத்து உட்கட்சி குழப்பம் காரணமாக உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தீரத் சிங் ராவத் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். தீரத் சிங் ராவத் நாடாளுமன்ற எம்.பியாகவும் உள்ளார். உத்தரகாண்ட் முதலமைச்சராகப் பதவி ஏற்ற நிலையில் அந்த மாநிலத்தில் வரும் செப்டம்பர் 10ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்தார்.ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டது. மேலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடைத்தேர்தல் நடத்தத் தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் கருதுகிறது. எனவே, முதலமைச்சராக நீண்டகாலம் தொடரமுடியாத சூழல் ஏற்பட்டது.

மேலும் தனக்கு முன்பு பதவியில் இருந்த திரிவேந்திர சிங் அமல்படுத்திய திட்டங்களை பொதுவெளியில் கடுமையாக விமர்சனம் செய்தது பாஜகவுக்கும் பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டது. மேலும் கும்பமேளாவின் போது அதில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையும் நடத்த தேவையில்லை என்றும் தீரத் சிங் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர் அதிருப்தி காரணமாக தீரத் சிங் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு உயர் மட்டத்தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பாஜக மேலிடம் கேட்டுக் கொண்டதை அடுத்து தீரத் சிங் ராவத் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜகவின் 57 எம்.எல்.ஏ-க்கள் கூடி புதிய முதலமைச்சரை தேர்வு செய்யும்பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய முதல்வர் தேர்வு குறித்து பாஜகவின் மத்திய பார்வையாளரும், மத்திய வேளாண் துறை அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் எம்.எல்.ஏ-க்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

சத்பால் மகராஜ், தன் சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி ஆகிய மூவரில் ஒருவர் முதலமச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் புஷ்கர் தாமி பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உத்தரகாண்ட் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் பின்னர் அவர் முதலமைச்சராக பதவி ஏற்பார். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களுக்குள் மூன்றாவது முதலமைச்சர் பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!