நாப்கின் வழங்குவதில் என்ன குற்றம் கண்டார் அந்த நக்கீரர்?

நாப்கின் வழங்குவதில் என்ன குற்றம் கண்டார் அந்த நக்கீரர்?

ஆசிரியை நான். பள்ளிக்கு செல்லும் போது எப்போதுமே, என் கைப்பையில் 2 அல்லது 3 நாப்கின்கள் இருக்கும். வாரத்தின் இறுதியில் அந்த நாப்கின்கள் தீர்ந்துபோய் அடுத்தவாரம் மீண்டும் கைப்பையில் எடுத்துச்செல்வேன். சில நேரங்களில் ஒரே நாளில் 3ம் தீர்ந்துபோய் வேறொரு ஆசிரியரிடம் கையேந்தி நிற்கும் நிலையும், அவர்களிடத்தில் இல்லால் போனபோது, வீடு பள்ளியின் அருகிலேயே இருந்ததால் வீட்டிற்கே சென்று எடுத்து வந்ததும் உண்டு.

ஒரு மாணவி சுவற்றின் மறைவில் நின்றிருக்க, இன்னொருத்தி தயங்கியபடியே தலையை சொறிந்து கொண்டு மேசையின் அருகே வந்து “மிஸ் அவளுக்கு பீரியட்ஸ்.. உங்க கிட்ட நாப்கின் இருக்கா?!” எனக் கேட்பாள். ஒவ்வொரு முறை இப்படி யாரேனும் ஒருவள் வந்து கேட்பாள். ஒவ்வொரு முறையும் சுவற்றின் மறைவில் நின்றிருக்கும் அந்த இன்னொருவளுக்காகவே கைப்பையில் எப்போதும் நாப்கின்கள் இருக்கும்.

// நாப்கின் இலவசமா குடுக்குறதா தேர்தல் அறிக்கைல இருக்கு!! இது எவ்ளோ கேவலமான தேர்தல் அறிக்கை. வீட்டிலிருக்க தன் பெண்களுக்கு ஒரு நாப்கின் கூட வாங்கித்தர முடியாத அளவுக்கு தமிழர்களென்ன துப்பற்றவர்களா?! நாப்கின யாருக்கு குடுப்ப?! உன் தங்கச்சிக்கு குடுப்பியா?! உங்கம்மாக்கு குடுப்பியா?! உன்னோட பொண்ணுக்கு குடுப்பியா?!// என ஒரு அண்ணன் உணர்ச்சி பொங்கி, மைக் நனையுமளவிற்கு எச்சில் தெறிக்க பேச, அதைக்கேட்ட தம்பிகள் கரகோஷம் எழுப்பும் ஓர் அற்புதக் காணொளியைக் காண நேர்ந்தது.

சுவற்றின் மறைவில் நின்று கொண்டிருந்த எந்த பிள்ளையும் நாப்கின் வாங்க வக்கற்ற பிள்ளை அல்ல. அது அவர்களின் அப்போதைய தேவை. எப்பவுமே பேக்ல நாப்கின் வச்சிக்கலாம்ல?! அது கூட படிக்குற பிள்ளைங்களுக்கு தெரியாதா?! போன்ற கேள்விகளெல்லாம் அபத்தத்தின் உச்சம். அந்நேரத்தில் நாப்கின் கிடைப்பது அப்பிள்ளைக்கு எத்தனை பெரிய ஆசுவாசம். நாப்கின் வழங்குவதில் என்ன குற்றம் கண்டார் அந்த நக்கீரர் எனத் தெரியவில்லை.

சிறு பிள்ளை கூட மேடையேறுமுன் தான் சரியாக பேசுகிறோமா என அத்தனை முறை ஒத்திகை பார்க்கும். அப்பிள்ளை ஏதேனும் தவறிழைத்தால் அதைக் கேட்ட அறிவுள்ள கூட்டம் தவறை எடுத்துரைக்கும். இது இரண்டுமே அங்கு நடந்ததாகத் தெரியவில்லை. அடுத்தமுறை மேடை ஏறும்போது கொஞ்சம் மூளையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் அண்ணா.

மைக்கேல் அமல்ராஜ்

error: Content is protected !!