தமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தமிழகத் தேர்தலில் வாக்குறுதிகளின் தாக்கம் என்ன? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தேர்தல் என்றாலே உடனடியாக நினைவிற்கு வருவது கட்சிகளின் வாக்குறுதிகள் என்றால் மிகையாகாது. ஏனெனில் மக்களின் பிரச்சினைகளைக் களைவதற்கு கட்சிகள் கொடுக்கும் உறுதிமொழியே வாக்குறுதிகள். பல தரப்பட்ட மக்களின் வாழ்க்கையை வளமாக்க அரசியல் கட்சிகள் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றன என்ற அணுகுமுறையை வெளிக்காட்டுவதே வாக்குறுதிகள். இத்தகைய வாக்குறுதிகளின் தொகுப்புதான் தேர்தல் அறிக்கை. மாறாக, தேர்தல் அறிக்கையில் சொல்லப் பட்டவற்றை வாக்குறுதிகளாக வழங்குவதும் உண்டு. தமிழகம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து பலஅரசியல் தலைவர்களின் கொள்கைகளை கவனித்து வந்துள்ளது. விடுதலை அடைந்த 1947 ஆம் ஆண்டில் ஆட்சியில் காங்கிரஸ் இருந்தது. விடுதலைக்கு ஓராண்டு முன்னரே தேர்தல் நடத்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது.

பின்னர் 1952 ஆம் ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் அதிகம் இல்லையென்பதால் காங்கிரஸ் எளிதாக வென்றது. ஆயினும் 1962 ம் ஆண்டில் காங்கிரஸ்சின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. இறுதியாக 1967 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியில் அமர்ந்தது. அத் தேர்தலில் முக்கியப்பிரச்சினைகளாக இருந்தவை ஹிந்தி மொழித்திணிப்பு, அரிசிப் பஞ்சம் மற்றும் காங்கிரசின் அலட்சியப்போக்கு ஆகியவையாகும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஒரு ரூபாய்க்கு மூன்றுபடி அரிசி லட்சியம்; ஒருபடி நிச்சயம் என்று கூறியது. அன்றைய அரிசிப்பஞ்சமே அதற்கு காரணம். இயற்கைப் பொய்த்து இந்தியா முழுதும் வறட்சி நிலவியதும், அடுத்தடுத்து இரண்டு போர்களில் சிக்கிக்கொண்டதும் மத்திய காங்கிரஸ் ஆட்சியை திணற வைத்தது. இதனிடையே நேரு இறந்தப்பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். அவரும் எதிர்பாராமல் இறக்கவே இந்திரா பிரதமரானார். அதே சமயம்  பலவீனப் பட்டிருந்த காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் ஆட்சியைப் பறி கொடுத்தது. தமிழகமும் அதில் ஒன்று. என்றாலும் பிற மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் இதுவரை இயலவில்லை. காரணம் ஆமாம் வாக்குறுதிகளே….

அரிசிப்பஞ்சம் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் காங்கிரஸ்சுக்கு எதிராகப் போனது. திமுகவின் வாக்குறுதி வென்றது. அடுத்து வந்த 1971 ஆம் ஆண்டுத் தேர்தலில் இ.காங்குடன் திமுக கூட்டணி ஏற்படுத்தியது திமுக, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு கருணாநிதி முதல்வராகி, எம்ஜிஆருடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டனர். இதில் முதன்மையாகக் காணவிருப்பது காங்கிரஸ் பிளவு கண்டு இந்திராகாந்திக்கு பிரதமர் பதவியில் தொடர அதிகளவு மக்களவை உறுப்பினர்கள் தேவைப்பட்டனர். இதனால் மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் 25 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்திராவின் சோஷலிசக் கொள்கைகளே அத்தேர்தலில் பெரு வெற்றியைக் கொடுத்தது.

பின்னர் 1977 ஆம் ஆண்டில் எம்ஜிஆர் ஊழலற்ற, சீர்கேடுகள் அற்ற ஆட்சியைக் கொடுப்பதாக உறுதியளித்தார் என்பதால் முதல் முறையாக தமிழக முதல்வரானார். பின்னர் நடந்த 1980 ஆம் ஆண்டுத் தேர்தலில் எம்ஜிஆருக்கு அனுதாப அலை அடித்தது. அவர் வாக்குறுதியாக கொடுத்தது ஏழைகளுக்கான ஆட்சி. மீண்டும் 1984 ஆம் ஆண்டில் அனுதாப அலை இந்திராவின் படுகொலை, எம்ஜிஆருக்கு உடல்நலமில்லை இரண்டும் அ இ அதிமுகவை அரியணையில் ஏற்றியது. எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு 1989 ஆம் ஆண்டில் கருணாநிதி மீண்டும் முதல்வரானார். அத்தேர்தலில் இலவச அரிசி வாக்குறுதியாக வழங்கினர் திமுகவினர். இரண்டாண்டுகளில் ஆட்சி பதவி நீக்கம் செய்யப்பட்ட்து.

இந்திய அரசியல் வரலாற்றில் முதல் அரசியல் படுகொலை திருப்பெரும்புதூரில் நிகழ்ந்த்து. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த அனுதாப அலையின் காரணமாக ஜெயலலிதா எளிதாக முதல்வரானார். அவரது 1991-96 ஆம் ஆண்டுகளின் ஐந்தாண்டு ஆட்சியில் ஊழல், அராஜகம் மேலோங்கியதால் 1996 ஆம் ஆண்டில் மீண்டும் கருணாநிதி முதல்வரானார். அத்தேர்தலில் திமுகவுடன் காங்கிரசிலிருந்துப் பிரிந்த தமிழ்மாநிலகாங்கிரஸ் கூட்டணி அமைத்தது. திமுக ஆட்சியில் இலவச மின்சாரம், சென்னையில் பாலங்கள் என உட்கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தப்பட்டது. மீண்டும் இலவச அரிசியின் அளவு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 2001 ஆம் ஆண்டில் ஜெயலலிதா அமைத்த பிரம்மாண்டக்கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. கோயில் அன்னதானம், நிதிக் கட்டுப்பாடு, மாணவர்களுக்கு இலவச சீருடை இப்படிப் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த 2006 ஆம் ஆண்டில் ஜெயல்லிதா வலுவான கூட்டணி அமைக்கவில்லை. எனவே மீண்டும் திமுக ஆட்சி. மத்தியிலும் ஆட்சியில் பங்கு வகித்த திமுக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப் பரிந்துரைத்தது.

எப்போதும் போலவே இலவசங்களும் இருந்தன. வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டது. வாக்குறுதி கொடுத்தது போல இரண்டு ஏக்கர் நிலம் வழங்கப்படவில்லை. அடுத்த 2011 ஆம் ஆண்டுத்தேர்தலில் ஜெயலலிதா கறவை மாடுகள், வீடு, தாலிக்குத் தங்கம் மாணவர்களுக்கு மடிக்கணினி, என பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்.அவற்றில் பல நிறைவேற்றப்பட்டன. மீண்டும் 2016 ஆம் ஆண்டில் அவரது ஆட்சியே தொடர்ந்த்தால் ஏற்கனவே இருந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றம் தொடர்ந்த்து. கூடவே மதுவிலக்கை திமுக அறிவிக்க ஜெயலலிதா படிப்படியாக மதுவிலக்கு என்றார். ஆனால் ஓரளவே நிறைவேற்றப்பட்டது. அம்மா இருசக்கர வாகனம் மகளிர்க்கு என்று உறுதியளிக்கப்பட்ட்து. இதுவும் நிறைவேற்றப்பட்ட்து. கருவுற்ற மகளிர்க்கு ரூ.18,000/- உதவித் தொகையாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச 2ஜி டேட்டா, பெண்களுக்கு பயணச்சலுகை போன்றவை அதிகம் கவரக் கூடியது. சலவை இயந்திரம் வழங்கும் திட்டம் நிறைவேறுமா என்பது தெரியவில்லை. ஒருவேளை இரண்டாண்டுகள் கழித்து நிறைவேற்றப்படலாம்.

ரமேஷ் கிருஷ்ண பாபு

Related Posts

error: Content is protected !!