“காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்” – சனாதன சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

“காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம்” – சனாதன சர்ச்சைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி!

னாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காவிகளின் மிரட்டல்களுக்கு பயப்பட மாட்டோம் என்றும், சவால்களை சட்டரீதியாக சந்திக்கத் தயார் என்றும் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (செப்.2) ’சனாதன ஒழிப்பு மாநாடு’ நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ”கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனமும். அதை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் வேலையாக இருக்கவேண்டும்” என்ற கருத்தில் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா, “சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி அழைப்பு விடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார். அதற்குப் பதலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

மேலும் Legal Rights Observatory- LRO (சட்ட உரிமை கண்காணிப்பகம்) என்ற பெயரிலான ஒரு என்.ஜி.ஓ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பதிவைப் பகிர்ந்து, அதன்பேரில் புகார் ஒன்று அளிக்கப்படுமென கூறியது. இதை ரீ-ட்வீட் செய்த அமைச்சர் உதயநிதி, “கொண்டு வாருங்கள், நான் எந்தச் சட்ட சவாலையும் சந்திக்கத் தயாராக உள்ளேன். இதுபோன்ற சனாதன மிரட்டல்களுக்கு அடிபணிய மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் சமூக நீதியை நிலைநாட்டுவோம். நாங்கள் பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதியைப் பின்தொடர்பவர்கள். இதனை இன்றும், நாளையும் என்றும் சொல்வேன். திராவிட மண்ணில் சனாதனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எங்களது தீர்மானத்தில் பின்வாங்க மாட்டோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!