அகமதாபாத் விபத்து அலட்சியத்தால் நிகழ்ந்ததா?
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து மிகவும் துயரமானது. பல கனவுகளும் ஆசைகளும் வானேறிய சில நொடிகளில் கருகிக் கலைந்து போனது மிகவும் வலி மிகுந்தது. அதுவும் இந்த விமானம் ஒரு கல்லூரி விடுதி மேல் விழுந்து அதில் உணவருந்திக் கொண்டிருந்த மாணவர்களும் இறந்திருப்பது எத்தனை கொடுமையானது?விபத்திற்குள்ளானது ஏர் இந்தியாவின் போயிங் விமானம். ஏர் இந்தியா குறித்து பல சமயங்களில் பலர் கடுமையாக எழுதி பார்த்திருக்கிறேன். எப்போதாவது விமான பயணம் மேற்கொள்ள நேரும்போது கூட, அடிக்கடி விமானங்களில் செல்லும் நண்பர்கள் ஏர் இந்தியா‘வை தவிர்க்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். விபத்திற்குள்ளான இதே விமானத்தில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பயணித்த ஒருவர், அந்த பயணத்தில் விமானத்தில் ஏ.சி, டி.வி உட்பட எந்த உபகரணங்களும் வேலை செய்யவில்லை என எலெக்ட்ரிக் பிரச்சினையை சுட்டிக் காட்டும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஆனால் அதே விமானம் அடுத்த இரண்டு மணி நேரத்தில் லண்டன் நோக்கி பறந்திருக்கிறது!
தொடர்ச்சியாக இத்தனை புகார்கள் இருந்தும் எப்படி ஏர் இந்தியா எந்த விசாரனையும் இன்றி பறந்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்தது. இப்போது, போயிங் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஒருவரின் வீடியோ வெளியாகியிருக்கிறது . அவர், விபத்துக்குள்ளான இந்த ரக விமானம் பாதுகாப்பின்றி இயக்கப்படுவதையும், இதனால் பெரும் விபத்துகள் நிகழக்கூடும் என்பதையும் மூன்று வருடங்களுக்கு முன்பே சொல்லி எச்சரித்திருக்கிறார். உடனே வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டு அங்கு போயிங்கின் வேறு ரக விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை பற்றி பேசியதற்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டிருக்கிறார்.

இந்த விபத்தை பார்த்துவிட்டு இதைப்போன்ற இன்னொரு விபத்து நடந்துவிடக்கூடாதென தன் கரியரை பணயம் வைத்து, தைரியமாக முன்வந்து இந்த உண்மைகளை சொல்லியிருக்கிறார். இவர் கூற்றுப்படி போயிங்கின் இரண்டு ரக விமானங்களில் (விபத்து நடந்த விமானம் உட்பட), ஏகப்பட்ட பாதுகாப்பு கோளாறுகள் இருப்பது போயிங் நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். ஆனால் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல், எச்சரிக்கை செய்த இன்ஜினியரை வேறு பிரிவிற்கு மாற்றி, மிரட்டி அமைதியாக்கி, அந்த விமானங்களை விற்று வந்துள்ளது.
இவர் கூற்றின்படி போயிங் விமான கட்டுமானத்தில் நிறைய ஆபத்தான ‘கேப்’ (இடைவெளிகள்) இருக்கின்றன. ஆனால் அவை அடைக்கப்படுவதில்லை. இதுகுறித்து அவர் தொடர்ச்சியாக தன் மேலதிகாரிகளிடமும் நிறுவனத்திடமும் புகாரளித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அந்த இடைவெளியை ‘மனித தலைமுடி’ அளவுதான் என்று அலட்சியமாக கணக்கிட்டிருக்கிறார்கள். ‘வானத்தில் பறக்கும்போது வாழ்விற்கும் மரணத்திற்கும் உள்ள இடைவெளி இந்த தலைமுடியளவு தான்’ என்கிறார் இந்த விசில்ப்ளோயர். மேலும் 100 ல் 98.7 முறை இந்த இடைவெளிகள் அடைக்கப்படவில்லை, சரியாக கவனிக்கப்படவில்லை என்று கூறுகிறார். இன்று பறிபோன உயிர்களைத் தாண்டி போயிங் நிறுவனம் குறித்த இந்த விஷயம் மனதை சலனப்படுத்துகிறது.
போயிங் போன்ற நிறுவனங்களின் வருமானத்தில் இதை சரிசெய்வதற்கான செலவு மிக மிகக் குறைவான சதவிகிதம் தான். ஆனால் அதைச் செய்யாத மெத்தனத்தினால் பல குடும்பங்களின் வாழ்வு பூஜ்யமாகிக் கிடக்கிறது. எத்தனையோ வழக்குகளில், அதை வைத்து எழுதப்பட்ட புத்தகங்களில், படங்களில் இதுபோன்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். தெரிந்தே ஒரு பெருநிறுவனத்தின் Corporate Negligence பல உயிர்களை பலி வாங்கியதையும் அதற்கான நீதி பெறப்பட்ட கதையையும்.
இப்போது நடந்த விபத்து அப்படியொரு அலட்சியத்தால் நிகழ்ந்ததா என தெரியவில்லை. இதற்குப் பின் உள்ள உண்மைகள் ஏர் இந்தியா, போயிங் போன்ற கார்ப்பரேட்டுகளையும் அரசுகளையும் தாண்டி வெளிவருமா எனத் தெரியவில்லை. வந்தாலும் எந்த தண்டனை, என்ன அபராதம் இன்று பறிபோன உயிர்களுக்கான நீதியாக அமையும் எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு சாமானிய மனிதனாக, பறிபோன உயிர்களுக்கும் அவர்களின் உறவுகளுக்கு வேதனைப்படுவதையும், இந்த கார்ப்பரேட் திமிரை எந்த நீதியாவது இதேபோல் கருக்கி பொசுக்கிடாதா என்று ஆதங்கப்படுவதையும் தவிர வேறென்ன செய்வது என சத்தியமாக தெரியவில்லை.

புதிதாய் சேர்த்தது: படத்தில்/வீடியோவில் இருப்பது ஜான் பார்னெட் சென்ற ஆண்டு, போயிங் நிறுவனத்திற்கு எதிரான ஒரு Whistleblower Lawsuit-ல் அளித்த வாக்குமூலம். சென்ற ஆண்டு போயிங் ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான போது, அவர் முன்வந்து கொடுத்த ஆதாரங்கள் இவை. இது நடந்த சில நாட்களில், வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே, பார்னெட் மர்மமான முறையில் அவரது ட்ரக்கில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


