‘Vowels’ இசை வெளியீட்டு விழாவில் படக்குழு பகிர்ந்த சேதிகள்!
காதல் என்றாலே அது ஒரு தனி உணர்வு. அந்த உணர்வை ஐந்து விதமான கோணங்களில், ஐந்து இயக்குநர்கள் இணைந்து ஒருமித்த கருத்தோடு உருவாக்கியுள்ள திரைப்படம்தான் ‘VOWELS – An Atlas of Love’. ராஜு ஷெரேகர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.
ஐந்து இயக்குநர்கள்.. ஒரு காதல் வரைபடம்!
ஒரே படத்தில் ஐந்து வெவ்வேறு கதைகளை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இளம் இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். பொதுவாக காதலில் ஒரு உணர்வை வைத்துப் படம் எடுப்பார்கள், ஆனால் இதில் ஐந்து விதமான உணர்வுகளைக் கோர்த்து ஒரு ‘காதல் வரைபடமாக’ (Atlas of Love) வழங்கியிருப்பதாக இயக்குநர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
யூகி சேது – சின்னி ஜெயந்த்: படத்தின் இரு தூண்கள்!
இந்த விழாவில் பேசிய நடிகர் சின்னி ஜெயந்த், “கர்நாடகாவிலிருந்து தமிழ் சினிமாவை நம்பி வந்திருக்கும் இந்தத் துணிச்சலான குழுவை தமிழ் ரசிகர்கள் நிச்சயம் கைவிடமாட்டார்கள்” என வாழ்த்தினார். மேலும், இந்தப் படத்திற்கு யூகி சேதுவின் பங்களிப்பு மிகப்பெரிய பலம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நடிகர் யூகி சேது பேசுகையில், “காதலைப் பற்றிப் பல புதிய விஷயங்களை இந்தப் படத்தில் பேசியிருக்கிறோம். குறும்படப் பாணியிலான கதைகளும் சினிமாவில் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்பதற்கு இந்தப் படம் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இசை மற்றும் தொழில்நுட்பம்
இசையமைப்பாளர் சரவணா சுப்ரமணியம் இப்படத்திற்கு 7 பாடல்களை வழங்கியுள்ளார். காதலும் உயிரும் எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளதோ, அதை மையமாக வைத்தே படத்திற்கு ‘Vowels’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். படத்தொகுப்பாளர் ஹரிஷ் கொம்மே மற்றும் கலை இயக்குநர் மதி ஆகியோர் தங்களது தனித்துவமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மார்ச் 13-ல் திரையரங்குகளில்..
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசுகையில், “இன்றைய சூழலில் வன்முறை மற்றும் அடல்ட் படங்கள் அதிகமாக வரும் நிலையில், உணர்வுப்பூர்வமான ஒரு படத்தைக் கொடுத்திருக்கும் இந்த ஐந்து இயக்குநர்களும் பாராட்டுக்குரியவர்கள். இன்றைய ‘ஜென் ஸீ’ (Gen Z) தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.
யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஷ்வநாதன், ராஜ் அய்யப்பா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘Vowels’ திரைப்படம், வரும் மார்ச் 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


