June 7, 2023

விநாயகர் சதுர்த்தி : பொது இடங்களில் சிலை வைக்க தடை!

கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் தமிழகம் முழுவதும் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலை பொது இடங்களில் சிலை வைப்பதற்கும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22.8.2020 அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது விழாக்களை தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது.எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப் படுகிறது.

மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடை வெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.சிறிய திருக்கோவில்களில் பொதுமக்கள் வழிட்ட ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில் அத்தகைய திருக்கோவில்களில் வழிபாடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வழிகாட்டு செயல்முறைகள் தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், திருக்கோவில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வழிபாடு தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து உரிய சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.”என்று அதில் கூறப்பட்டு உள்ளது.