எக்ஸ் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை- விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு!

எக்ஸ் டிஜிபி ராஜேஷ்தாசுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை-  விழுப்புரம் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு!

டந்த அதிமுக ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த 2021ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசிற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தரப்பினர் வாதாடுவதற்கு தொடர்ந்து கால அவகாசம் கேட்டு வந்தனர்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி பூர்ணிமா கடந்த 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து 5 நாட்கள் வாதாட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார். மேலும் இதுவே இறுதி வாய்ப்பு என்றும் தொடர்ந்து வாதாடாமல் கால அவகாசம் கேட்டால் மேல்முறையீட்டு வழக்கில் நேரடியாக தீர்ப்பு வழங்க நேரிடும் என்றும் நீதிபதி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து கடந்த 1ஆம் தேதி முதல் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தொடர்ந்து வாதாடி தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். நீதிமன்ற அளித்த 5 நாட்கள் கால அவகாசத்தின்படி கடந்த 7ஆம் தேதி தனது வாதத்தை முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நிறைவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அரசு தரப்பு வாதத்தை முன் வைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஆஜராகவில்லை. இதனையடுத்து அரசு தரப்பு வாதம் தொடங்கியது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜராகி, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் அளித்த வாதத்திற்கு பதிலளிக்கும் விதமாக அரசு தரப்பு வாதத்தை சுமார் அரை மணி நேரம் முன் வைத்து வாதாடி நிறைவு செய்தார்.

இதனையடுத்து இருத்தரப்பு வாதமும் நிறைவடைந்ததையடுத்து இன்று விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பூர்ணிமா அறிவித்தார். அதன்படி, இன்று 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.

error: Content is protected !!