ராகுல் யாத்திரை :முன்கூட்டியே நிறைவு செய்ய காங். முடிவு!

ராகுல் யாத்திரை :முன்கூட்டியே நிறைவு செய்ய காங். முடிவு!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களை சந்திக்கும் திட்டமாக இந்த பயணத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பணத்திட்டத்தை, திட்டமிட்டதை விட ஒரு வார காலம் முன்னதாகவே நிறைவு செய்யப்படும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரப் பிரதேச பயணத்தில் பல பகுதிகள் தவிர்க்கப்பட்டு அங்கு நாட்குறைப்பு செய்யப்படும். எனவே பயணத் திட்டம், திட்டமிட்டதை விட ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே முடியும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ராகுல் பயணம் உத்தரப் பிரதேசத்தில் இந்த வாரம் நுழையும். 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உ.பி.யில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசி, ரேபரேலி, அமேதி, அலகாபாத், புல்பூர் மற்றும் லக்னோ உள்பட 28 மக்களவைத் தொகுதிகள் வழியாக பயணம் செல்ல இருந்தது.

சந்தௌலி, வாரணாசி, ஜான்பூர், அலகாபாத், பதோஹி, பிரதாப்கர், அமேதி, ரேபரேலி, லக்னோ, ஹர்தோய், சீதாபூர், பரேலி, மொராதாபாத், ராம்பூர், சம்பல், அம்ரோஹா, அலிகார், பதாவுன், புலந்த்ஷாஹர் மற்றும் ஆக்ரா போன்ற பகுதிகளையும் யாத்திரை கடந்து செல்லும். எனினும் தற்போது பயணம் மேற்கு உ.பி.யின் பெரும்பாலான மாவட்டங்களைத் தவிர்க்கப்பட உள்ளது.

மத்தியப் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு முன், லக்னோவில் இருந்து அலிகார் மற்றும் மேற்கு உ.பி.யில் உள்ள ஆக்ராவுக்கு நேரடியாகப் பயணிக்கும் என்று கூறப் படுகிறது. மார்ச் 20-ம் தேதிக்குள் மும்பையில் இறுதி கட்டத்தை எட்டவிருந்த பயணம் இப்போது மார்ச் 10 மற்றும் 14-ம் தேதிகளுக்கு இடையில் முடிவடையும், திட்டமிடப் பட்டதை விட குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னதாக பயணம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!