விஜய், 2024 தேர்தலைத் தவிர்ப்பதேன்?
விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான முதல் படம் ‘நாளைய தீர்ப்பு’. 1992 இல் வெளியானது. அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய மிகவும் பிரபலமான ஒரு வாரப் பத்திரிகை, ‘இந்த மூஞ்சியையெல்லாம் யார் பார்ப்பார்கள்?’ என்று மிகவும் கேலியாகவும் ஏளனமாகவும் எழுதியிருந்தது. அந்த ‘மூஞ்சி’தான் இன்று விஸ்வரூபமெடுத்து, ‘தமிழக வெற்றி(க்) கழகம்’ என்று ஓர் அரசியல் கட்சியையும் தொடங்கியிருக்கிறது. அந்த வார இதழ் எழுதியிருந்த விமர்சனம் பற்றி விஜய் என்னதான் நினைக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது எனது நீண்ட கால ஆசை. அப்போது ‘கல்கி’ இதழில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் விருப்பத்தை ஆசிரியர் கி. இராஜேந்திரனிடம் சொன்னேன். ‘ஒரு பேட்டியாகவே செய்துவிடுங்கள்’ என்றார். காரணம், புதிய படங்கள் வரவர , கல்லூரி மாணவியரிடம் விஜய் ஒரு கனவு நாயகனாகவே மாறிக் கொண்டிருந்தார்.
நான் விஜய் இல்லத்திற்கு போன் செய்தேன். அவர் தந்தை சந்திரசேகர்தான் பேசினார். ‘அவன் படப்பிடிப்பிற்காக நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கிறான். மாலை ஐந்து மணிக்கு ஹோட்டலுக்குத் திரும்பிவிடுவான். அதன்பிறகு டெலிபோனில் பேசுங்கள்’ என தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
பேசினேன். எடுத்தவுடனேயே அவரே மறந்திருந்த அந்த ‘மூஞ்சி’ விஷயம் பற்றித்தான் கேட்டேன். ‘நானும் படிச்சேன். விடுங்க சார். அதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே…’ என சிரித்தபடியே சாதாரணமாகப் பதில் சொன்னார்.
‘நிஜமாகச் சொல்லுங்கள்…கொஞ்சம்கூட வருத்தமாயில்லையா?’
‘இல்லைங்க. இந்த மூஞ்சியை அனைவரும் பார்த்து ரசிக்கும்படி நடிக்க வேண்டும் என்கிற ஆசையைத்தான் அந்த விமர்சனம் தூண்டி விட்டது…இனிமேல் அந்த விஷயம் வேண்டாமே…’ என்று எந்தவிதமான வருத்தமோ, கோபமோ இல்லாமல், அதற்கு அமைதியாக ஒரு முற்றுப் புள்ளி வைத்தார். பிறகு பல்வேறு விஷயங்கள் பற்றிச் சுமார் அரை மணி நேரமாவது பேசியிருப்போம்.
அன்று நான் பேசியதிலிருந்து, கடுமையான விமர்சனத்தைக்கூட – அந்த விமர்சனம் தன்மீதான தனிப்பட்ட முறையிலானதாக இருந்தாலும் கூட அதை இயல்பானதொரு போக்கில் எடுத்துக் கொள்கிற பக்குவம் அந்த இளம் வயதிலேயே அவருக்கு இருந்தது என்பதைத் தெரிந்து கொண்டேன். இன்று அது முதிர்ந்திருந்தால், அவரது அரசியல் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். தன்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகர்களின் அரசியல் ஆசைகளை சர்வசாதாரணமாகக் காலாவதியாக்கி விட்ட ரஜினி போலல்லாமல், விஜய் அரசியலில் தைரியமாகக் குதித்திருப்பது வரவேற்கத் தக்கது. என்றாலும் 2026 இல் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்பது சந்தேகமே. ஒருவேளை எதிர்க்கட்சியாக வர வாய்ப்பிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனாலும் கவலைப் படாமல், 2031 ஐ மனதில் வைத்து உழைக்க வேண்டும்.
தமிழர்களின் தனி அடையாளங்களைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். வீட்டின் வாசல் கதவுகளைஇறுக்கமாகப் பூட்டிவைத்து விடாமல், தேடிவரும் தொண்டர்களைத் தவறாமல் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு கட்சித் தொண்டனும் அந்தந்தக் கட்சிக்கே விசுவாசமாக வாக்களிப்பான் என்பதே உண்மை. அதனால் கட்சி சார்பில்லாத பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற உழைப்பதுதான் முக்கியம். இன்று உயர்நிலைப் பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் 2031 இல் வாக்காளர்களாகி விடுவார்கள். எனவே அவர்களை மனதில் கொண்டு உழைப்பதுதான் மிகவும் முக்கியம்.
எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லை; யாருக்கும் உங்கள் ஆதரவுமில்லை என்பது வரவேற்கத் தக்கதே. என்றாலும் கூடவே ஒரு சந்தேகமும் எழுகிறது. 2024 நாடாளு மன்றத் தேர்தலை ஏன் புறக்கணிக்க வேண்டும்? ஒருவேளை 2024 இல் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயமா? பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சக் கூடாது. மடியில் கனமில்லாத நீங்கள் யாரைக் கண்டு பயப்பட வேண்டும்? எதற்காகப் பயப்பட வேண்டும்? தோல்வியே கண்டாலும் அது உங்கள் தொண்டர்களுக்கு நல்லதொரு அரசியல் பயிற்சியாகவே அமையும் என்பதை மறந்து விடாதீர்கள். வாழ்த்துகள்!