சென்சேஷனல் நியூஸ் என்பது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆகி போச்சு! – வெங்கையா நாயுடு காட்டம்!
சென்சேஷனல் நியூஸ் என்பது இப்போது சென்ஸ்லெஸ் நியூஸ் ஆக உள்ளது என்று ஊடகங்களை விமர்சித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்ட தினமான நவம்பர் 16 ஆம் தேதியைத்தான் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடி வருகின்றனர். கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிஷனோட அடிப்படை உரிமை. மேலும், எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு கருத்தைக் கொண்டிருக்கவும் தகவல்களை கோரவும் பெறவும் மட்டுமின்றி எந்தவித எல்லைக்கும் உட்படாமல் தகவல்களையும் கருத்துக்களையும் எந்தவொரு ஊடகத்தின் வாயிலாகப் பெறுவதும் இந்த உரிமைக்கு உட்பட்டதாகும்” என ஐ.நா.வின் மனித உரிமைப் ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.. ஒவ்வொரு மனிதனுக்கும் எப்படி வாழ்வுரிமை, சுதந்திரம், பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமையாக உள்ளதோ அதே அளவிற்கு கருத்து சுதந்திரம் முக்கியமானதாக உள்ளது. கருத்து சுதந்திரம் முழுமையாக உறுதிப்படுத்தப்படும் நாட்டில்தான் ஜனநாயகம் உண்மையாக தழைத்தோங்குகிறது. அதனால்தான் பத்திரிக்கைகளை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்கிறோம். பத்திரிக்கை சுதந்திரம் ஒரு நாட்டில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு அந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால், உலகம் முழுவதும் ஒவ்வொரு நாலு நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார் என யுனெஸ்கோ அமைப்பு முன்னரே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடந்த விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”சென் சேஷனல் நியூஸ் என்பது இப்போது பிரபலமாகிவிட்டது. ”சென்ஷேசனல் நியூஸ்” (பரபரப்பு செய்தி) என்றாலே அது சென்ஸ்லெஸ் நியூஸ் (புத்தி இல்லாத செய்தி) ஆகத் தான் உள்ளது” என்று விமர்சித்தார்.
மேலும்,”வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை தொடங்குகின்றனர். இதனால் பொதுவாக பத்திரிக்கைகளின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.
”நீங்கள் என்னிடம் கேட்கலாம், இங்குள்ளா அரசியல் கட்சிகளுக்கு செய்தித்தாள் தொடங்க உரிமை இல்லையா? என்று கேட்கலாம். அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் அதைக் பத்திரிகையிலே பளிச்சென்று தெரியும் வகையில் குறிப்பிட வேண்டும், இது அரசியல் கட்சியின் செய்தித்தாள் என்று செய்தித்தாளில் குறிப்பிடவேண்டும்” என்று கூறினார்.
கடந்த காலங்களில், செய்தித்தாள்கள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்சனையே. பரபரப்புவாதம் என்பது தான் மரபாக இன்றைய நாளில் மாறியுள்ளது” என்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.
இதே போல் பத்திரிகையாளர்களுக்கு மேற்கு வங்கமாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்து, வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.
மம்தா பானர்ஜி ட்விட்டரில், ”தேசிய பத்திரிகை தினமான இன்று, அனைத்து பத்திரிகையாளர் களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஊடகம்தான் ஜனநாயகத்தின் 4வது தூண். ஊடகங்கள் உண்மைகளை அஞ்சாமல் வெளியிடவேண்டும். “எந்த இடத்தில் பயமில்லாமல் மனம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தலை உயர்ந்து நிற்கும்” என்ற ரவீந்திரநாத் தாகூரின் அழியாத சொற்கள் உங்களுக்கு உற்சகமும் புத்துணர்வும் தரட்டும் என்று பதிவிட்டுள்ளார்.