வெஞ்சன்ஸ் – விமர்சனம் !
ஸ்டேட் பாலிடிக்ஸ் தொடங்கி சென்ட்ரல் பாலிடிக்ஸ் வரை, அதன் பின்னணியில் கொழுத்து வளரும் கார்ப்பரேட் முதலாளிகள், தேர்தல் வியூகவாதிகளின் சதுரங்க ஆட்டம், கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டி என ஒட்டுமொத்த அரசியலையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.
கதைக்களம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடிக்கும் அபர்ணதிக்கு, அந்தப் பாராட்டும் புகழும் மூன்றே நாட்களில் ஓய்ந்து போவது பிடிப்பதில்லை. எப்போதும் தன்னைப் பற்றியே உலகம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற தீராத ஆசை கொண்ட அவர், வளர்ந்து மாவட்ட ஆட்சியர் (IAS) ஆகிறார். தன் அதிரடி நடவடிக்கைகளால் மக்களின் கவனத்தை ஈர்க்கும் அவருக்கு, முதலமைச்சர் மூலமாகத் தடை வருகிறது. அந்த முட்டுக்கட்டைகளை உடைத்து, ஒரு கட்டத்தில் முதலமைச்சரையே தன் சொல்படி கேட்க வைக்கும் இடத்திற்கு அபர்ணதி எப்படி முன்னேறுகிறார்? தமிழகத்தின் வலிமையான ஒரு பெண் ஆளுமையின் நிழலாகத் திரையில் விரிகிறது இந்த ‘வெஞ்சன்ஸ்’.
நடிப்பு எப்படி?
நாயகி அபர்ணதிக்கு இது வாழ்நாள் பாத்திரம். இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்வியலைத் தழுவிய கதை என்பதை உணர்ந்து, அவரின் நடை, உடை, பாவனை என அனைத்திலும் கம்பீரம் காட்டியிருக்கிறார். சில இடங்களில் நடிப்பால் மிரட்டியும், பல இடங்களில் தோற்றத்தால் ஈர்த்தும் அப்ளாஸ் வாங்குகிறார்.
முதலமைச்சராக வரும் இளவரசு, ஒன்றிய அமைச்சராக மிரட்டும் ஜான் விஜய், பாசமான தந்தையாக காளி வெங்கட், எதிர்க்கட்சித் தலைவராக லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக ஒய்.ஜி.மகேந்திரன் என நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. இதில் பிரதமராக வரும் மங்கல், அமைச்சர் சரவண சுப்பையா என அனைவரும் கச்சிதமான தேர்வு. சச்சு, டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்
இயக்குநர் ராகுல் அசோக் கதையை 2042-ல் தொடங்கி ஒரு ‘பேண்டஸி’ உணர்வைக் கொடுத்தாலும், சட்டென 1985-க்குக் கதையை நகர்த்தி நம்மை நிஜ அரசியலுக்குள் இழுத்துச் செல்கிறார். ஒரு கலெக்டரால் இவ்வளவு மாற்றங்களைச் செய்ய முடியுமா? என்ற ஆச்சரியம் எழுந்தாலும், திரைக்கதையின் வேகம் அதை மறக்கடிக்கச் செய்கிறது.
முதல் பாதி மின்னல் வேகத்தில் நகர, இரண்டாம் பாதியில் நாயகியின் விஸ்வரூபம் மற்றும் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் காட்சிகள் மட்டும் சற்றே அழுத்தம் குறைவாகத் தெரிகின்றன. இதனால் திரைக்கதையில் ஆங்காங்கே சிறிய தொய்வு ஏற்பட்டாலும், பெண் ஆளுமையின் அதிகார ஆசையைத் துணிச்சலாகப் படம் பிடித்ததில் இயக்குநர் ஸ்கோர் செய்கிறார். ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபுவின் கேமரா, அரசியல் களத்தின் அனலை அப்படியே பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக நாயகி அபர்ணதியை மிக அழகாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் காட்டியிருக்கிறார்.
சுருக்கமாகச் சொன்னால்: அதிகார நாற்காலிக்காக ஒரு பெண் நடத்தும் அனல் பறக்கும் ஆடுபுலி ஆட்டம் இந்த ‘வெஞ்சன்ஸ்’!
மார்க்: 3 / 5


