அமெரிக்க வாழ் தமிழர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு ‘வைக்கம் விருது’ அறிவிப்பு!
சென்னை: சமூக நீதிக்காக எல்லை கடந்து சென்று பேராடிய தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் மதிப்புமிகு ‘வைக்கம் விருது’ 2025ஆம் ஆண்டிற்கான வெற்றியாளரை அறிவித்துள்ளது. இந்த ஆண்டிற்கான விருதினை, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய-அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான திருமதி. தேன்மொழி சௌந்தரராஜன் -க்கு வழங்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வைக்கம் விருதிற்காக தேன்மொழி சௌந்தரராஜன் அவர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்க முலாம் பூசிய பதக்கம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைக்கம் விருது – ஓர் அறிமுகம்
- விருதின் நோக்கம்: சமூக நீதிக்காக கேரளாவில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தந்தை பெரியார் அவர்களை நினைவுகூரும் வகையில், அவரது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது.
- அறிவிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 30.03.2023 அன்று சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் இந்த விருதை அறிவித்தார்.
- வழங்கும் நாள்: பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் பாடுபட்டு, குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் ஆளுமைகள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ‘சமூகநீதி நாளான’ செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு அரசால் இந்த விருது வழங்கப்படுகிறது.
தேன்மொழி சௌந்தரராஜன்: சமூக நீதிக்கான குரல்
பின்னணி மற்றும் பங்களிப்புகள்:
- தேன்மொழி சௌந்தரராஜன் பெற்றோர் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தற்போது இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
- இவர் இந்திய-அமெரிக்க ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
- அவர் கட்டமைப்பு சாதியத்தால் ஓரங்கட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
- அமெரிக்காவிலும் உலக அளவிலும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் சிவில் உரிமைகள் அமைப்பான ‘ஈக்வாவிட்டி லேப்ஸ்’ (Equality Labs)-ன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் இவரே.
- அமெரிக்காவிலும் இந்தியாவிலும் சாதி பாகுபாட்டிற்கு எதிரான இவருடைய பணிகளுக்காகவும், ஊடகம் மற்றும் தொழில்நுட்ப நீதித் துறையில் இவரின் பங்களிப்புகளுக்காகவும் இவர் உலக அளவில் அறியப்படுகிறார்.
இலக்கியப் பங்களிப்பு:
- தேன்மொழி சௌந்தரராஜன் “The Trauma of Caste: A Dalit Feminist Meditation on Survivorship, Healing, and Abolition” என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் நோக்கம், சாதியின் பெயரால் காட்டப்படும் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதாகும்.
- இந்த ஆய்வுப் பூர்வமான படைப்பிற்காக இவர் Asian/Pacific American Awards for Literature (APAAL) விருதையும், தெற்காசிய ஆய்வுகள் துறையில் புலமைப்பரிசில் வென்றதற்காக South Asian Literary Association (SALA) Award-யும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேன்மொழி சௌந்தரராஜனுக்கு ‘வைக்கம் விருது’ அறிவிக்கப்பட்டிருப்பது, சமூக நீதிப் போராட்டம் தேச எல்லைகளைக் கடந்து உலகளவில் தொடர்கிறது என்பதற்கான அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.


