‘டியூட்’ பட வெற்றி விழா: இளைஞர்களின் கைவசம் சினிமா!

‘டியூட்’ பட வெற்றி விழா: இளைஞர்களின் கைவசம் சினிமா!

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 அன்று வெளியான ‘டியூட்’ (Dude) திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவின் முக்கிய அம்சங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்களின் பெருமிதம்

தயாரிப்பாளர்கள் ரவி மற்றும் நவீன் ஆகியோர் பேசுகையில், “‘டியூட்’ படம் இரு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதில் மகிழ்ச்சி. இயக்குநர் கீர்த்தீஸ்வரன் ஒரு ‘சென்சிபிளான’ (Sensible) விஷயத்தை மிகச் சரியாகச் சொல்லியுள்ளார். பிரதீப், மமிதா உட்பட அனைத்து நடிகர்களின் சிறப்பான நடிப்பும் படத்திற்குப் பலம். உலகம் முழுவதும் படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் மகிழ்ச்சி 

  • எடிட்டர் பரத் விக்ரமன் பேசுகையில், ரசிகர்கள் மத்தியில் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கீர்த்திக்கு நன்றி தெரிவித்தார்.
  • ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி படத்திற்குக் கிடைத்த வெற்றிக்கு ரசிகர்களுக்கு நன்றி கூறினார். நகைச்சுவை, எமோஷன் மற்றும் முக்கியமான சமூகக் கருத்து ஆகியவற்றைச் சரியான விகிதத்தில் கலந்து, ஒரு பேசுபொருளாக்கிய இயக்குநர் கீர்த்திக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

நடிகர்களின் மனந்திறந்த பேச்சு

ஐஸ்வர்யா வர்மா (சம்க்யுதா கதாபாத்திரம்):

படத்திற்குக் கிடைத்துவரும் வரவேற்பு சந்தோஷம் அளிப்பதாகவும், இந்த ஆண்டு தனக்கு நடந்த அழகான விஷயம் ‘டியூட்’ என்றும் கூறினார். ‘லவ் டுடே’ படத்திலிருந்து பிரதீப்பை மிகவும் பிடிக்கும் என்றும், இயக்குநர் ஆகும் தனது ஆசைக்கு பிரதீப் ஒரு உத்வேகம் என்றும் குறிப்பிட்டார். சரத்குமாரின் மிகப்பெரிய ரசிகரான தன் தந்தையின் கனவை இந்தப் படத்தில் அவருடன் நடித்ததன் மூலம் நிறைவேற்றியதாக உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.

நடிகை ரோகிணி: ‘தைரியமான கதை’, ‘நல்ல இளைஞர்கள் கையில் சினிமா’

“ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தின் சக்ஸஸ் மீட்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. தைரியமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்த பிரதீப்புக்கு நன்றி. மமிதாவின் கடினமான கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். சரத்குமார் சாரின் பாத்திரம் பார்க்கும்போது பொறாமையாக இருக்கிறது. இந்தக் காலக்கட்டத்திற்குத் தேவையான கருத்தை ‘டியூட்’ சொல்லியிருக்கிறது. நல்ல இளைஞர்கள் கையில் சினிமா இருக்கிறது என்ற திருப்தி உள்ளது. அதை மக்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்,” என்று பாராட்டிப் பேசினார்.

சரத்குமார்: ‘கீர்த்தி செதுக்கிய சரத்குமார்’

நடிகர் சரத்குமார், “அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல், கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ‘டியூட்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சமூகச் செய்தியைச் சரியாகக் கொண்டு சேர்த்திருக்கிறார். நான் இந்தப் படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன்; ஒவ்வொரு முறையும் புதிதாகத் தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைத்தான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் காட்சியில் மமிதா மிகச் சிறப்பாக நடித்திருந்தார்,” என்று பாராட்டினார்.

மமிதா பைஜூ: முதல் தமிழ்ச் வெற்றி மேடை

நடிகை மமிதா பைஜூ உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகையில், “இது என்னுடைய முதல் தமிழ்த் வெற்றி மேடை! சந்தோஷமாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், கீர்த்தி அண்ணாவுக்கு நன்றி. பிரதீப், சரத் சார், ரோகிணி மேம் உட்பட அனைவரின் ஆதரவுக்கும், பார்வையாளர்களின் அன்புக்கும் நன்றி,” என்று கூறினார்.

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் உரை: ‘வன்மங்களுக்கு எதிரான படம்’

“எனக்கு இது முதல் வெற்றி மேடை என்பதால், மிகவும் ஸ்பெஷலானது. படத்தைப் பெரிய அளவில் வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கு நன்றி. மூன்று ஹாட்ரிக் வெற்றிகளைக் கொடுத்திருக்கும் பிரதீப், இந்தப் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்களைத் தைரியமாக வசனமாக வைக்க பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால் வைத்தோம். ‘டியூட்’ திரைப்படம் ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது; வேறு யாருக்கும் இல்லை என்பதைப் பேசுகிறது. இது அனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம்,” என்று தனது படத்தின் கருத்தைப் பற்றி அழுத்தமாகப் பேசினார்.

பிரதீப் ரங்கநாதன்: விவாதங்களை உருவாக்கிய படம்

நிறைய காட்சிகளில் மமிதாவின் நடிப்பைப் பார்த்து வியந்ததாகக் குறிப்பிட்ட பிரதீப், “இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. இந்தப் படம் நிறைய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துபாய், நார்த் அமெரிக்கா மற்றும் நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி,” என்று கூறிப் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related Posts