வடக்குப்பட்டி ராமசாமி – விமர்சனம்!

வடக்குப்பட்டி ராமசாமி – விமர்சனம்!

பெல்பாட்ட காலம் -அதாவது எண்பதுகளில் நடக்கும் கதையிதுவாம். அதற்கு முன்னால் 60களில் நடக்கும் ஒரு பிளாஷ் பேக் வந்து போகிறது. அதன்படி அந்த ஊரில் தெய்வம் இல்லாமல் போய் பௌர்ணமியில் மட்டும் தென்படும் ஒரு கொள்ளிவாய் பிசாசு ஊரை பீதிக்குள் வைத்திருக்கிறது.சாமி பூத நம்பிக்கைகளில் ஊரே மூழ்கிக் கிடக்க, அங்கு வசிக்கும் ராமசாமி என்கிற சிறுவன் மட்டும் இதை எல்லாம் நம்பாமல் இருக்கிறான். இந்நிலையில் பெளர்ணமி அன்று போலீஸ் துரத்திக் கொண்டு வரும் ஒரு திருடன் இவர்கள் வீட்டுப் பானையில் திருடிக் கொண்டு வந்த நகைகளை மறைத்து வைக்க, அந்த நேரம் பார்த்து கொள்ளிவாய் பிசாசு தோன்ற அதை அடித்துக் கொல்ல ஊர் மக்கள் துரத்த… இந்தக் களேபரம் ராமசாமி முன்னிலையில் முடிவுக்கு வருகிறது. கடவுளே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்த ராமசாமிக்கு ஊர் மக்களின் முட்டாள்தனம் புதிய எண்ணத்தைத் திறந்து வைக்க, அதன் மூலம் அந்த சாமியை வைத்து பெரும் பணக்காரனாக திட்டமிட்டு தன் வீட்டுப் பானையில் மறைத்து வைத்த நகைகளைக் கொண்டு புதிய கோவிலை உருவாக்கி அந்தப் பானையை சாமியாக்கி பெரிய வசூல் பார்த்து வருகிறார். இந்த விஷயம் தாசில்தார் வரை எட்ட அவரும் தன் பங்குக்கு இந்தக் கோவிலை வைத்துக் காசு பார்க்க நினைக்க ராமசாமிக்கும் தாசில்தாருக்குமான ஈகோ பிரச்சனை கோவிலை இழுத்துப் பூட்ட வைக்கிறது.அதன் பின்னர் கோவில் திறக்கப்பட்டதா… ராமசாமி கடைசிவரை மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாரா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதே வடக்குப்பட்டி ராமசாமி!

பக்கா காமெடியான சரியான கதையை தேர்ந்தெடுத்து இருக்கிறார் சந்தானம். கோல்மால், பித்தலாட்டம், மக்களை ஏமாற்றுவது என தனக்கு என்ன வருமோ அதைக் கொண்டு நியாயம் சேர்த்திருக்கிறார். அங்கங்கே தனது ட்ரேடு மார்க் (Trademark) ஒன் லைனர்கள் மூலம் ரசிகர்களை குதூகலப்படுத்தினாலும் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். .முதல் பாதியில் சேஷு மற்றும் மாறனின் காமெடி காட்சிகள் போர் அடிக்காமல் நேரத்தைக் கடத்த உதவியிருக்கிறது. இரண்டாம் பாதியில் எம்.எஸ். பாஸ்கர், நிழல்கள் ரவி, ரவி மரியா, ஜான் விஜய், பிரசாந்த் என ஏகப்பட்ட காமெடியன்கள் வந்து ஏதேதோ செய்து, சொன்னது எல்லாம் எங்கோ கேட்டவை டைப்பில் இருந்தாலும் டைம் பாஸ் ஆகிவிடுவெதன்னவோ நிஜம்.

மெட்ராஸ் ஐ நோயை வைத்து, அதை ‘சாமிக் குத்த’மாக மடைமாற்றும் காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. மக்களின் அறியாமை பற்றி சிந்திக்கவும் வைக்கின்றன. படம் தொடங்கியது முதல் இறுதிவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதால், அதை மையப்படுத்தியே கதை நகர்வது படத்துக்குப் பலம். மியூசிக் டைரக்டர் ஷான் ரோல்டன் சந்தானத்தைப் பாட வைத்த முதல் இசை அமைப்பாளர் என்ற பட்டத்தை மட்டும் பெற்று செல்கிறார். கேமராமேன் தீபக் தன் கடமையைச் சரியாக செய்து தப்பித்து விடுகிறார்,.

காமெடியான படத்தில் வழக்கம் போல் லாஜிக் ஓட்டைகளும் ஏராளம். எப்போதும் முட்டிக் கொள்ளும் ஊர் பெரியவர்கள் (ரவி மரியா, ஜான் விஜய்) மோதலுக்கு காரணம் என்னவாக இருக்கும்? இவர்கள் பிள்ளைகளுக்கு ஏன் இந்த காதல் காட்சிகளும் ஓடிப்போகும் காட்சிகளும்? மிலிட்டிரி ஆபீசராக வரும் நிழல்கள் ரவி வடக்குப்பட்டிக்கு வரும் காட்சிகளுக்கு என்ன காரணம்?. எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டர் பற்றிய குழப்பம் நமக்கு மட்டும்தானா? எடுத்துக் கொண்ட கதைக் களத்துக்காக ஒட்டு மொத்த கிராமத்தையே முட்டாளாக சித்தரிப்பது நியாயமா? என்பது போன்ற கேள்விகளையெல்லாம் புறந்தள்ள வலுவிருந்தால் ஒரு தபா போ பார்க்கலாம்

மார்க் 2.75

error: Content is protected !!