அமெரிக்கா: ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் விடுப்பு +நிறுவனங்களுக்கு வரிச் சலுகை!

அமெரிக்கா: ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் விடுப்பு +நிறுவனங்களுக்கு வரிச் சலுகை!

ர்வதேச அளவில் தங்களை பெரியண்ணா என்று வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்க மக்களிடையே கொரோனா தடுப்பூசி தொடர்பான தயக்கத்தை போக்கி ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதிபர் ஜோ பிடன் தொழிலாளர்களுக்கான வரிக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ஜோ பிடன் தனது முதல் 100 நாட்களில் 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்படும் என்ற இலக்கை எட்டிய நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு ஒரே நாளில் 13,930 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 30,70,880 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவிற்கு ஒரே நாளில் 63,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,26,00,834 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு 834 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு பலியானோர் மொத்த எண்ணிக்கை 583,288 பேராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் 25,171,620 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 6,845,926 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சூழலில் பெரியவர்களில் 50 சதவீததுக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் சுமார் 2.8 கோடி டோஸ் வழங்கப்படுகிறது. ஆனால் தேவை இன்னும் விநியோகத்தை விட குறைவாகவே உள்ளது.

கடந்த ஒரு வாரமாக, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் வேகம் சற்று குறைந்துள்ளது. அமெரிக்காவில் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அமெரிக்கர்கள் மத்தியில் இன்னும் தயக்கம் உள்ளது. அமெரிக்காவில் இன்னும் 13 கோடி மக்கள் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை.இதை அடுத்து தடுப்பூசிகள் உங்கள் சொந்த உயிரை மட்டுமல்லாமல், உங்களை சுற்றியுள்ளவர்களையும் காப்பாற்ற உதவும். அதனால் நீங்கள் தடுப்பூசி போட வேண்டும் என அதிபர் ஜோ பிடன் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் அமெரிக்க மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பூசி போட ஊக்கம் அளிக்கும் வகையில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என அமெரிக்க அரசுக்கு நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.அதன் அடிப்படையில் அமெரிக்காவில் தடுப்பூசி போடுவோருக்கு அல்லது அதன் பக்கவிளைவுகளிலிருந்து மீள நேரம் ஒதுக்க வேண்டியவர்களுக்கு ஊதிய விடுப்பு வழங்குவதற்காக சிறு வணிகங்களுக்கான வரிக் கடனை ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் 500 க்கும் குறைவான தொழிலாளர்களைக் கொண்ட வணிக நிறுவனங்களில் ஒரு ஊழியருக்கு ஒரு நாளைக்கு 511 டாலர் வரை கடன் வழங்கப்படும். கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட கோவிட் 19 வைரஸுக்கான 19 லட்சம் கோடி டாலர் நிவாரண நிதியுதவி திட்டத்தின் கீழ் இதற்கான செலவுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக வளங்களைக் கொண்ட பெரிய முதலாளிகளை, தங்கள் தொழிலாளர்களுக்கு இதே அளவு சலுகைகள் வழங்கவும், அவர்களுக்கு தடுப்பூசி போட ஊக்குவிக்கவும் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.

“ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஒவ்வொரு பெரிய மற்றும் சிறிய முதலாளிகளையும் நாங்கள் அழைக்கிறோம். தடுப்பூசி போடுவதற்கு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் தேவையான நேரத்தை கொடுங்கள்” என்று அதிபர் ஜோ பிடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!