துடுக்குப் பேச்சு புகழ் உதயநிதிக்கு தடை? – பாஜக கோரிக்கை!

துடுக்குப் பேச்சு புகழ் உதயநிதிக்கு தடை? – பாஜக கோரிக்கை!

மிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதை அடுத்து துடுக்குப் பேச்சு புகழ் உதயநிதி, “இன்னிக்கு காலையில் என்னோட சகோதரி செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு நடத்தி இருக்காங்க. நான் மறுபடியும் இன்னொரு சவால் விடுக்கிறேன். மோடி-அமித்ஷாவுக்கு பயப்படவோ, கூழை கும்பிடு போடவோ நான் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அல்ல. முத்தமிழறிஞர் கலைஞரின் பேரன். எந்த உருட்டலுக்கும், மிரட்டலுக்கும் பயப்பட மாட்டேன்.என் வீட்டு முகவரியைத் தருகிறேன். எண்.25/9, செனடாப் ரோடு, சித்தரஞ்சன் சாலை. தைரியமிருந்தால் என் வீட்டுக்கு ரெய்டுக்கு வா, பார்க்கலாம்” என சவால் விட்டு பேசியது பல தரப்பிலும் சலசலப்பை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் பிரச்சாரமும் அனல் பறக்கும் சூழலில் சில தினங்களுக்கு முன்பு, ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயையும் தரக்குறைவாக விமர்சித்தது தமிழகம் முழுவதும் கட்சி சார்பின்றி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆ.ராசாவுக்கு இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதே போல் தயாநிதி மாறனும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், பிரதமர் மோடியையும் இணைத்து தரக்குறைவாக பேசி சர்ச்சசையில் சிக்கினார். இந்த விவகாரமும் தற்போது தேர்தல் ஆணையத்தின் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்தத் தேர்தல் பரப்புரை தொடங்கியதில் இருந்தே சினிமா வில்லன் பாணியில் அடுத்தடுத்து சவால் விட்டப்படி பேசி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையாகி விட்டது..இப்படிதான் அண்ணா தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் நேற்று திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘காங்கேயம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மு.பெ.சாமிநாதனை ஆதரித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டை பொதுமக்களிடம் காண்பித்து, இது பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு, இதை நான் ஏன் தெரியுமா வச்சிருக்கேன். இதை பார்க்கும்போதெல்லாம் மோடி மேல கொலை வெறி வரும் என்று கலவரத்தை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும், பிரதமரின் கண்ணியத்தை கெடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

மேலும் தடை செய்யப்பட்ட ஆயிரம் ரூபாய் நோட்டையும் வைத்திருப்பது குற்றமாகும். அவர் பேசியது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. பிரதமரை ஒருமையில் தரக்குறைவாக பேசி அவர் மீது கொலைவெறியில் இருப்பது மிகுந்த அச்சத்தையும், பதற்றத்தையும் பொதுமக்கள் மத்தியில் விளைவிப்பதால் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று மனுவில் கூறி இருந்தார்.

இதை அடுத்து மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதாவது முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி இருவரும், மோடியின் தொல்லை தாங்காமல் இறந்தே போய்ட்டாங்க என உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியுள்ளது.

இந்த சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சுஷ்மா ஸ்வராஜின் மகள், என் அம்மாவின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய் பிரதமர் நரேந்திர மோடி என் அம்மா மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும் தான் எங்களுக்குத் தோள் கொடுத்தார்கள். உங்களது பேச்சு எங்களை வேதனைப் படுத்துகிறது’ எனக் கூறியுள்ளார்.

இதே போல் அருண் ஜெட்லியின் மகள் சோனாலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.உதயநிதி ஜி, உங்களுக்கு தேர்தல் அழுத்தம் இருப்பது எனக்குத் தெரியும், அதற்காக எனது தந்தையைப் பற்று பொய் பேசி அவமதிக்கும்போது நான் அமைதியாக இருக்க மாட்டேன்.

அரசியலுக்கு வெளியேயும் எனது அப்பாவும் மோடியும் சிறந்த நட்பைக் கொண்டவர்கள். இந்த உண்மையான நட்பை அறியும் அதிர்ஷ்டசாலியாக நீங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இந்த பேச்சு பலரின் மத்தியில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மறைந்த மத்திய அமைச்சரின் மகள்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது மேலும் திமுக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயம் தற்போது இப்படி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்து, அவரை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக சார்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. அதோடு இவரின் பிரச்சாரத்திற்கு தடை விதித்து, நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் இருந்தும் நீக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!