ஆர்.கே. நகர் ; அதிமுக (சசி அணி) வேட்பாளரானார் டிடிவி தினகரன்
சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக ஆட்சிமன்ற குழுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 21-ஆம் தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ”எனக்கு போட்டியிட வாய்ப்பளித்த புரட்சித் தலைவர்,புரட்சித் தலைவி ஜெயலலிதா ,சின்னம்மா மற்றும் அதிமுகவின் ஆட்சி மன்ற குழுவினர் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டு முறை ஜெயலலிதா அவர்கள் ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர்,அந்த தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். மேலும் அவர் ஆர்.கே நகர் மக்களுக்கு வேறு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என விரும்பினாரோ,அதனை நாங்கள் நிறைவேற்றுவோம்.
ஆர்.கே நகரில் மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அதிமுக வேட்பாளராகிய நான் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன்.இனி எதிர்காலத்தில் வரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடும்.
மேலும் இந்த தேர்தலில் எங்களுக்கு வைகோ, மக்கள் நலக்கூட்டணி,தே.மு.தி.க காங்கிரஸ், பாரதிய ஜனதா எங்களுக்கு ஆதரவு அளித்தால் வரவேற்போம் .அதாவது திமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளையும் அழைக்கிறோம்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


