ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.ஆனார் – டிடிவி தினகரன்!

ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.ஆனார் – டிடிவி தினகரன்!

அடுத்தடுத்தத் தடைகள் மற்றும் சர்ச்சைகளுக்கு நடுவே கடந்த வியாழக்கிழமை ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்னை மெரினா கடற்கரை சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு காலை முதலே அரசியல் கட்சியினர் ராணி மேரி கல்லூரிக்கு முன்பு திரண்டிருந்தனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்கே நகரில் பதிவான வாக்குகள் 19 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் முதல் சுற்றிலிருந்தே டிடிவி தினகரன் முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து எல்லா சுற்றுகளிலும் முன்னிலை வகித்த அவர் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதாவது மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்தனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். மொத்தம் 1,76,885 வாக்குகள் பதிவாகின. 19 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில், சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று இடைத்தேர்தலில் வாகை சூடியுள்ளார். 50.32% வாக்குகளை அவர் பெற்றிருக்கிறார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்றுள்ளார். இவரது வாக்கு சதவீதம் 27.31%. திமுக வாக்கு சதவீதம் 13.94% ஆகும். கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதேபோல் 2001-ல் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு சுயேட்சையாக வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரனே சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார். மேலும் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். மொத்தம் பதிவான வாக்குகளில் 6% பெறும் கட்சியே டெபாசிட் பெற முடியும். அதாவது 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே திமுக டெபாசிட் பெற முடியும் என்பது நிலைமை. ஆனால், மருதுகணேஷ் 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ள நிலையில் திமுக டெபாசிட் இழந்துள்ளது.

நாம் தமிழர், பாஜக கட்சிகளும் டெபாசிட் இழந்துள்ளன. நோட்டாவைவிட குறைவான வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்நிலையில், இந்த வெற்றிபெற்ற களிப்புடன் ’தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினராக எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த அதிரடி வெற்றி குறித்து தினகரன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் , “வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிடம் இருந்தால்தான் இரட்டை இலை வெற்றிச்சின்னம். எம்.என்.நம்பியாரிடமும், பி.எஸ். வீரப்பாவிடமும் சின்னம் இருந்தால் மக்கள் வாக்களிப்பார்களா என கேள்வி எழுப்பினார்.ஆர்.கே.நகர் மக்கள் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக வாக்களித்துள்ளனர் என்றார். மதுசூதனன் ரவுடியிசத்தின் மொத்த உருவம். அவர்களுடைய கும்பல் அங்கு தகராறு செய்ததால் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரம் தடைபட்டது.

ஆர்.கே.நகர் மக்கள் ஜெயலலிதாவுக்கு அடுத்து அந்த தொகுதியில் இருந்து வேட்பாளராக யார் வர வேண்டும் என நினைத்து வாக்களித்துள்ளனர். எம்.ஜி.ஆர். அவரது நினைவு நாளில் ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பிய சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற ஆசி வழங்கியுள்ளார் ஆக நான் பல மாதங்களுக்கு முன் சொன்னது உண்மை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. ஆர்.கே.நகர் மக்கள், 7.5 கோடி தமிழக மக்களின் எண்ணத்தை எதிரொலித்தனர். ஆர்.கே.நகர் வெற்றிக்கு பாடுபட்ட ஒன்றரை கோடி தொண்டர்கள், மக்களுக்கு நன்றி. இன்னும் மூன்று மாதங்களில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும்”இவ்வாறு தினகரன் கூறினார்.

இதனிடையே அதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரனை தவிர திமுக உள்ளிட்ட மற்ற 57 வேட்பாளர்களும் டெபாசிட்டை இழந்தனர். சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts