செய்தியைக் கேட்க / Listen to News
சமூகத்தில் பொது நலன் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதும் அவதூறு குற்றத்தின் கீழ் வராது என்பதை மும்பை உயர் நீதிமன்றம் தனது சமீபத்திய தீர்ப்பின் மூலம் மீண்டும் உறுதி செய்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் ஆமிர் கான் தொகுத்து வழங்கி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த இரண்டு மருத்துவர்கள் மீது தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வழக்கின் பின்னணி மற்றும் வரலாற்றுத் தரவுகள்
கடந்த 2012 ஜூன் 24 அன்று ஒளிபரப்பான சத்யமேவ் ஜெயதே நிகழ்ச்சியின் ஒரு பகுதியில், நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை மற்றும் அது ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மருத்துவர் ரஷ்மி சங்கீ சுமார் 40 விநாடிகளும், மருத்துவர் கோபால் கப்ரா சுமார் 3 முதல் 4 நிமிடங்களும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் தங்கள் கருத்துக்களில் காய்கறிகள் மற்றும் பழங்களில் அபாயகரமான அளவில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பது பற்றியும், கர்ப்பகாலத்தில் தாயின் உடலில் சேரும் வேதிப்பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் குறைபாடுகள் குறித்தும் குறிப்பிட்டனர்.

பூச்சிக்கொல்லி தயாரிப்பாளர்கள் அமைப்பின் குற்றச்சாட்டு
இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் வர்த்தகப் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொய் பிரச்சாரமாக அமைந்திருப்பதாகக் கூறி, பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்களின் தொண்டு அமைப்பான க்ராப் கேர் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா நீதிமன்றத்தை நாடியது.
நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2015 மார்ச் மாதத்தில் மும்பை பந்த்ரா நீதிமன்றத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500 கீழ் இந்த மருத்துவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கீழ் நீதிமன்ற மாஜிஸ்திரேட் 2016 அக்டோபரில் மருத்துவர்களுக்கு அழைப்பாணை அனுப்பி உத்தரவிட்டார்.
ஆராய்ச்சிப் பின்னணியும் மருத்துவர்களின் தரப்பு வாதமும்
கீழ் நீதிமன்றத்தின் நடவடிக்கையை எதிர்த்து மருத்துவர்கள் இருவரும் தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். நீதிபதி மிலிந்த் என் ஜாதவ் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
மருத்துவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆய்வுகள்:
மருத்துவர் ரஷ்மி சங்கீ, 2003 ஆம் ஆண்டு ஜெர்னல் ஆஃப் ஹியூமன் அண்ட் எக்ஸ்பெரிமென்டல் டாக்சிகாலஜி என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் “போபாலில் உள்ள பெண்களின் தாய்ப்பாலில் உள்ள ஆர்கனோகுளோரின் மற்றும் ஆர்கனோபாஸ்பரஸ் பூச்சிக்கொல்லி எச்சங்கள்” என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டவர். மருத்துவர் கோபால் கப்ரா, கர்ப்பகாலத்தின் தொடக்கக் கட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் ரசாயனக் காரணிகள் தாயின் கருவை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்து விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டவர். இருவருமே தங்கள் துறையில் நீண்ட அனுபவமும், அறிவியல் தரவுகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட வல்லுநர்கள் என்பதும் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
உயர் நீதிமன்றத்தின் முக்கிய அவதானிப்புகள் மற்றும் தீர்ப்பு
வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதி மிலிந்த் என் ஜாதவ், கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை கடுமையாக விமர்சித்ததுடன், வழக்கை முற்றிலும் ரத்து செய்து தீர்ப்பளித்தார். தீர்ப்பில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
மருத்துவர்கள் இருவரும் எந்தவொரு குறிப்பிட்ட பூச்சிக்கொல்லி மருந்தின் பெயரையோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ குறிப்பிடவில்லை.
அவர்களின் பேச்சு பொதுமக்களிடையே சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மட்டுமே அமைந்திருந்தது.
கீழ் நீதிமன்ற மாஜிஸ்திரேட் எந்தவித தகுந்த காரணங்களையும் குறிப்பிடாமல், கருத்துக்கள் வர்த்தகர்களுக்கு அவதூறாக உள்ளது என்று மட்டுமே கூறி வழக்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார்.
இது மாஜிஸ்திரேட்டின் சுய சிந்தனையற்ற செயல்திறனைக் காட்டுகிறது .
2013 ஆம் ஆண்டிலேயே பிராட்காஸ்டிங் கன்டென்ட் கம்ப்ளெயண்ட்ஸ் கவுன்சில் இந்த நிகழ்ச்சி குறித்து வந்த புகாரை ஆய்வு செய்து, இதில் ஆட்சேபனைக்குரியது எதுவுமில்லை என்று தெளிவுபடுத்தியிருந்தது
மொத்தத்தில் அறிவியல் பூர்வமான கருத்து சுதந்திரத்திற்கும், நிறுவனங்களின் வணிக நலனுக்கும் இடையே ஏற்படும் மோதல்களில், பொது மக்களின் சுகாதார விழிப்புணர்விற்கான உரிமையே முதன்மையானது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. சமூக நன்மைக்காக தங்களின் ஆராய்ச்சி முடிவுகளை உரக்கப் பேசும் மருத்துவ வல்லுநர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இத்தீர்ப்பு மிகப்பெரிய பாதுகாப்பையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
