தூக்க தினம்- உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது!

தூக்க தினம்- உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது!

இன்றைய தங்கிலீஷ் உலகில் ‘sleep’ என்ற ஆங்கில சொல்லின் பொருளில் பாவிக்கப்படும் சொற்களான ‘தூங்குதல்’, ‘தூக்கம்’, ‘நித்திரை’ போன்ற சொற்களை சங்க இலக்கிய காலத்தில் காண முடியவில்லை. அங்கு தூங்குதல் என்றால் தொங்குதல் என்ற பொருளிலும், தூக்கம் என்பதற்கும் தொங்குதல் அல்லது தூக்கிப் பார்த்தல் என்ற பொருளிலும் தான் நாம் காண்கிறோம். மேலும் நித்திரை என்பது சமஸ்கிருதச் சொல் ‘nidra’ [‘निद्रा’] வில் இருந்து பிறந்த சொல். தமிழில் இதற்கு ‘உறக்கம்’, ‘துயில்’, ‘துஞ்சுதல்’ போன்ற அழகான சொற்களை சங்க இலக்கியத்தில் காண்கிறோம். உதாரணமாக திருவள்ளுவர், தனது குறளில், ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்று உறக்கம் என்ற சொல்லை கையாளுகிறார். மேலும் அவர் இன்னும் ஒரு குறளில் ‘கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கம் கடிந்து செயல்’ என்பதன் மூலம் தூங்காது என்ற சொல்லுக்கு தாமதிக்காது, கால நீட்டிப்பு செய்யாது, தொங்கிக் கொண்டு கிடக்காமல் எனும் பொருளில் கையாளுகிறார். என்றாலும் இன்று திரைப்படத்தில் ‘தூங்காதே தம்பி, தூங்காதே!’ என்றும், ‘தூங்காத கண்ணொன்று உண்டு’ என்ற வரிகளை கண்டாலும் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது’ என்ற கர்ணன் படப் பாடல்வரி ஒரு ஆறுதலை கொடுக்கிறது.

அது போகட்டும் நம் சமூகத்தில் மனித உடலுக்கு தூக்கத்தின் அவசியம் மிக முக்கியம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இரவு மற்றும் பகல் சமமாக இருக்கும் வெள்ளிக்கிழமை நாளில் சர்வதேச தூக்கம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான தூக்க தினம் உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் ஸ்லீப் பவுண்டேஷன் என்ற அமைப்புதான் 2008ம் ஆண்டு தூங்க தினத்தை உருவாக்கியது.

கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இன்றைய பரபரப்பான உலகில் மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் அவரது செயல் திறனும் வெகுவாக பாதிகப்படும். குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் பிரச்சனை, மூக்கில் அடினாய்டு சதை வீக்க பிரச்சனை, மூக்கு எலும்பு வளைந்திருத்தல் ஆகியவை காரணமாக மூச்சு தடைபட்டு, தூக்கம் கெடுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. பெரியவர்களைப் பொருத்தவரை உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உரிய தூக்கம் இல்லாமல் போய்விடும்.

ஒவ்வொருவருக்கும் ஆழ்ந்த தூக்கம் எந்த அளவுக்கு அவசியமானது என்பதை அறிந்து கொள்வதற்காக உலக நாடுகளில் மார்ச் செக்ண்ட் பிரைடே தூக்கம் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 10 கோடி பேர், மற்றவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இரவில் குறட்டை விடுவதாக உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ஆண்களில் 4–ல் ஒருவரும், பெண்களில் 9–ல் ஒருவரும் குறட்டை மற்றும் தூக்கமின்மை பிரச்சினையில் அவதிப்படுவதாக தெரிய வந்துள்ளது.

குறட்டை விட்டு மற்றவர்களை நோகடிப்பவர்களில் 90 சதவீதம் பேர் அதற்குரிய சிகிச்சை முறைகளை எடுத்துக் கொள்வதில்லை. நிறைய பேர் குறட்டையை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை. குறட்டையும், தூக்கமின்மையும் மிகவும் அபாயகர மானது. தூக்கமின்மை நீடித்தால் அது காலப்போக்கில் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி விடும்.

குறட்டை மற்றும் தூக்கமின்மையை உடனே கவனிக்க வேண்டும். இல்லையெனில் அது ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம் உள்ளிட்ட பல விபரீத நோய்களுக்கு வழிவகுத்து விடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

எனவே எப்படியாவது நன்றாக தூங்குங்கள். எந்த வகை பயிற்சிகளாவது செய்து ஆழ்ந்த, சீரான தூக்கத்தை வரவழைத்து கொள்ளுங்கள்.

தூக்கம் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும் என்றாலும் ஒரு நாளில் ஒருவர் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கமாவது அவசியம்.

சிலருக்கு அதிகம் தூக்கம் வரும். அதுவும் நோயின் அறிகுறியாகும்.

சிலருக்கு தூக்கமே வராது. இதுவும் நல்லதல்ல. நாளடைவில் இது சோர்வை ஏற்படுத்தி விடக்கூடும்.

தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதர்களுக்கும் மிகவும் இன்றியமையாதது. எனவே சீக்கிரம் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

படுத்தவுடன் சிலர் அடுத்த சில நிமிடங்களிலேயே தூங்கி விடுவர். ஒரு சிலருக்கு புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வருவது சிரமம். வெகு நேரம் விழித்திருக்க வேண்டிய நிலைமை.

கடினமான உழைப்பு உழைத்துவிட்டு வந்தாலும் சிலருக்கு சாமான்யமாக தூக்கம் வராது.

தூக்கம் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. மனது அமைதியாக இல்லை என்றால் எத்தனை நேரம் ஆனாலும் தூக்கம் என்பது வராது.

பொதுவாக கடுமையான உழைப்பிற்கு பின்பு தூக்கம் வரவேண்டும். ஆனால் மனது அமைதியின்றி இருந்தால் நிச்சயமாக தூக்கம் வராது.

மனது அமைதி இல்லாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அவற்றில் சில நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை.

மனது இதுபோன்று காரணங்களால் பாதிக்கப்படும்போது அவைகளை பற்றியே சிந்தனையே இருக்கும். கண்ணை மூடினாலும் நம்பிக்கை இழத்தல், பயம், பொறாமை, தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம் போன்றவை திரைப்படம் மாதிரி ஓடி கொண்டு இருக்கும்.

சிலருக்கு எதையும் உடனேயே மறந்து விடும் சுபாவம் உண்டு. அதனால் அவர்கள் எப்பேர்பட்ட நிலையிலும் எந்த சூழ்நிலையிலும் எதை பார்த்தும் கேட்டும் கவலை படமாட்டார்கள். எதையும் டேக் இட் ஈசி என்று போய் விடுவர். இடியே பக்கத்தில் விழுந்தால் கூட கவலைபட மாட்டார்கள்.

அவர்களுக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்சனையே இருக்காது.

ஆனால் எது நடந்தாலும் அதை மனதிற்கு எடுத்து சென்று கவலைப்படுபவர்கள், அதையே நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு கண்டிப்பாக தூக்கம் ஒரு பிரச்சனையாகத்தான் இருக்கும். இதுபோன்றவர்கள் தூக்க பிரச்சனையிலிருந்து விடுபட என்ன வழி?

ஒரே வழி அவர்கள் மனதை சரி செய்வதுதான்? மனதை எப்படி சரி செய்யமுடியும்?

தியானம் என்னும் உயரிய கலைமூலம் மனதை சரி செய்யலாம். ஒருவர் தியானம் தொடர்ந்து செய்யும்போது அவருடைய மனது சாமான்யமாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகாது. எந்த ஒரு செயலையும் சிந்தனையையும்

பகுத்து அறிய மனதினை தியானம் தயார் செய்கிறது. மனது பகுத்து அறியும்போது ஏன் கவலை படவேண்டும், ஏன் பயப்பட வேண்டும், ஏன் பொறாமை பட வேண்டும், ஏன் தோல்வியை நினைத்து வருத்தப்பட வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். கவலைபட்டு ஒன்றும் ஆக போவதில்லை,

பொறாமை பட்டு ஒன்றும் ஆக போவதில்லை, தோல்வியை நினைத்து ஒன்றும் ஆக போவதில்லை என்று சிந்திக்க ஆரம்பித்து விடும். அப்படி ஒரு நிலை வரும்போது மனது இலகுவாகிறது. அங்கு எந்த அவ நம்பிக்கை, பயம், பொறாமை, தோல்வி போன்ற சிந்தனைகளுக்கு இடம் இல்லை. அதுபோன்ற மன நிலையினை தியானம் தயார் செய்கிறது.

எனவே இதுபோன்ற மனநிலை ஏற்படும்போது ஒருவருக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்னை இல்லை. மனதை சரி செய்யவில்லை என்றால் தூக்க மாத்திரை சாப்பிட்டால் கூட தூக்கம் வராது.

மேலும் தியானம் செய்வதினால் உடலுக்கும் மனதுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கிறது. ஒரு சில நிமிடங்கள் செய்யும் தியான பயிற்சியினால் கிடைக்கும் ஓய்வானது 6 மணி நேரம் தூங்கினால் என்ன ஓய்வு கிடைக்குமோ அந்த ஓய்வு கிடைக்கிறது என்று ஆராய்சிகள் தெரிவிக்கின்றன.

எனவே தூக்கம் என்பதே பிரச்சனையாக உள்ளவர்கள் தியானம் என்னும் அறிய கலையின் மூலம் விமோசனம் பெறலாம்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு எருமைப் பால், தயிர், கரும்புச்சாறு, ஆகியவற்றை ஜீர்ண சக்திக்காக அதிகம் சேர்ப்பது நல்லது.உடல் சோர்வு நீங்குவதற்கு இதமான வெண்ணீரிலோ குளிர்ந்த தண்ணீரிலோ குளிப்பது நல்லது.

அரிசி மாவில் வெல்லம் கலந்து வேக வைத்து எடுக்கப்படும் இனிப்புப் பண்டம் அரிசி சாதம், உளுந்து போன்றவைகளில் உணவாக அதிக அளவில் சேர்க்க வேண்டும்.உடல் உஷ்ணத்தினால் தூக்கம் வரவில்லை என்றால் ஹிமசாகர தைலம் அல்லது சந்தனாதி தைலத்தை உச்சந் தலையில் அரை மணி முதல் முக்கால் மணி வரை பஞ்சில் நனைத்து தலையில் வைத்து ஊரிக்குளிப்பது நல்ல தூக்கத்தைத் தரும்.

உடல் வலியால் தூக்கமில்லை என்றால் தாண்வந்திரம் தைலத்தைத் தலைமுதல் பாதம் வரை சிறிது சூடாகத்தேய்த்து ஒரு மணி நேரம்கழித்து குளிப்பதால் உடல் வலி குறைந்து தூக்கம் வரும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் மிளகு ரசம் அல்லது ஜீரக ரசம் சுட்ட அப்பளத்துடன் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையில் சூடாக சாப்பிட வேண்டும்.

உறைந்த தயிரின் மேல் நிற்கும் தெளிந்த நீரை உள்ளங்காலில் அழுத்தி தேய்த்துவிட தூக்கம் வரும். மற்றவர் உதவியுடன் உடலை இதமாக பிடித்துவிடச் சொல்வது, இரவில் மனதிற்கு பிடித்த இனிய சங்கீதம் கேட்பது, தூக்கத்தை வரவழைக்கும் வழிகளாகும்.

அதி மதுரத்தையும் ஜீரகத்தையும் சம அளவில் நன்கு பொடித்து துணியில் சலித்து வைத்துக் கொள்ளவும். 23, கிராம் அளவில் இரவில் படுக்கும் முன் ஒரு சிறிய பூவம் வாழைப்பழத்துடன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.

வழக்கமாக தூங்கி விழிக்கும் நேரங்களை எக்காரணத்தைக் கொண்டும் மாற்றாமல் இருப்பது நல்லது. படுக்கப்போகும் முன் மனக்கவலை, கோபம், துக்கம் முதலிய மனக்கிளர்ச்சி தரும் உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடாது.

தலையணையன்றி படுத்தல் நல்லதல்ல. தரைக்கும் தலைக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும்படி தலையணை இருக்க வேண்டும்.

இத்தகைய வழிகள் மூலம் நிச்சயம் நல்ல தூக்கத்தை வரவழைக்க முடியும். தூங்குங்கள் தூங்கினால்தான் நலமாக வாழ முடியும்.

அகஸ்தீஸ்வரன்

Related Posts