புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் இன்று முதல் கூட்டம்…! – அங்கு என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் இன்று முதல் கூட்டம்…! – அங்கு என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

ல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கியது. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால பயணம் குறித்து முதல் நாள் அமர்வில் விவாதிக்கப்பட உள்ளது என கடந்த 13 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால சிறப்புகள், முடிவுகளை, நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வரலாற்றை பகிர்ந்தார். மோடி உரையில். `வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்றத்தை விட்டு நாம் அனைவரும் விடைபெறுகிறோம். சுதந்திரத்துக்கு முன், இந்த மாளிகை ஏகாதிபத்திய சட்டசபைக்கான இடமாக இருந்தது. சுதந்திரத்துக்குப் பிறகு, இது நாடாளுமன்றமானது. இந்த கட்டடத்தைக் கட்டும் முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், இந்த கட்டுமானத்துக்கான உழைப்பும், பணமும் நம் நாட்டு மக்களுடையது என்பதை நாம் மறுக்க முடியாது. அதை பெருமையுடன் சொல்லலாம்.

இன்று இந்தியர்களின் சாதனைகள் எங்கும் பெருமிதத்துடன் பேசப்படுகின்றன. இது நமது 75 ஆண்டுக்கால நாடாளுமன்ற வரலாற்றில் நம் ஒன்றுபட்ட முயற்சியின் பலன். சந்திரயான் 3-ன் வெற்றி இந்தியாவை மட்டுமின்றி உலகையே பெருமைப்படுத்தியிருக்கிறது. மேலும், ஜி 20 உச்சி மாநாடு ஒரு தனிநபரின் வெற்றியோ, கட்சியின் வெற்றியோ அல்ல. இந்தியாவின் 140 கோடி மக்களின் வெற்றி. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம்.

ஜனநாயகத்தின் கோயிலான இந்த நாடாளுமன்றத்தில், ஒரு எம்.பி-யாக நான் நுழைந்தபோது, இதை வணங்கி மரியாதை செய்தேன். ரயில்வே நடைபாதையில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. மக்களிடம் இவ்வளவு அன்பைப் பெறுவேன் என்றும் நினைத்துப் பார்த்ததில்லை. இன்று இந்தியர்களின் சாதனைகள் எங்கும் பெருமிதத்துடன் பேசப்படுகின்றன. நாடாளுமன்றத்தில், பெண் எம்.பி-க்களின் எண்ணிக்கை முன்பு குறைவாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களின் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட்டில் இந்த சபை, 25 முதல் 93 வயதுடைய உறுப்பினர்களின் பங்களிப்பைக் கண்டது. சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டின் வெற்றி குறித்து பலரும் சந்தேகித்தனர். ஆனால். இந்த நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதைத் தவறு என நிரூபித்தது. இந்த நாடாளுமன்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையே, இந்த சபையின் 75 ஆண்டுக்கால சாதனை. நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களை இந்த நாடாளுமன்றம் இழந்தபோது அவர்களுக்கு உரிய அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேரு முதல் சாஸ்திரி, வாஜ்பாய் வரை பல தலைவர்கள், இந்தியா குறித்த தங்கள் பார்வையை முன்வைத்ததை இந்த நாடாளுமன்றம் கண்டிருக்கிறது. இரு அவைகளிலும் இதுவரை 7,500 உறுப்பினர்கள் பங்களித்திருக்கின்றனர். சுமார் 600 பெண் எம்.பி-க்கள், இரு அவைகளின் கண்ணியத்தை உயர்த்தியிருக்கின்றனர். இந்த நாடாளுமன்றத்தில், நள்ளிரவு நேரத்தில் நேரு பேசியது, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இதே நாடாளுமன்றத்தில், `பிரிவு 370, ஜிஎஸ்டி, ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ போன்ற பல முக்கிய முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். அதோடு, மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் அரங்கேறிய `ஓட்டுக்கு பணம்’ என்ற ஊழலை இந்த சபை பார்த்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், வெறும் நான்கு எம்.பி-க்களைக் கொண்ட கட்சி ஆட்சியில் அமர்வதையும், 100-க்கு மேற்பட்ட எம்.பி-க்களைக் கொண்ட கட்சி எதிர்க்கட்சியாக அமர்வதையும் இந்த நாடாளுமன்றம் பார்த்திருக்கிறது.

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது எங்கும் கொண்டாட்டங்கள். ஆனால், தெலங்கானா மாநில உருவாக்கம் கசப்பான நினைவுகளை விட்டுச் சென்றது. கடந்த காலத்தை, எதிர்காலத்துடன் இணைக்கும் தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் நாம் அதிர்ஷ்டசாலிகள். புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் நுழையும்போது, புதிய நம்பிக்கையுடன் அங்கு செல்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.

அவரை தொடர்ந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை குறிப்பிட்டு பேசினார்கள். அதை தொடர்ந்து மாலை நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே அந்த மசோதா மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

நேற்று நாடாளுமன்ற பழைய கட்டிடத்தில் கடைசியாக அவை நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் அதற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு எம்.பிக்கள் புறப்பட்டனர். இன்றைய நாடாளுமன்ற சிறப்புக் கூட்ட நிகழ்வு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற இருக்கிறது.. சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெறும்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை மதியம் 1:15 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2:15 மணிக்கும் கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசு, இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’, `பாரத்’ பெயர் மாற்றம் எனப் பல விவகாரங்கள் தொடர்பான மசோதாக்களைத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய நாடாளுமன்றக் கட்டட்ட வளாகம் “பிளாட்டினம்-மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டிடம்” என அங்கீகாரம் பெற்றுள்ளது

முக்கோண வடிவில் 4 மாடிகளை கொண்டு 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற வளாகத்தின் திறப்பு விழா கடந்த மே மாதம் 28ஆம் தேதி நடைபெற்றது.

புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளை டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.

புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் சில முக்கிய அம்சங்கள் இதோ…!

புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடம் பழைய கட்டடத்தை விட விஸ்தாரமான அறைகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தேசிய பறவையான மயிலை அடிப்படையாகக் கொண்டு, புதிய மக்களவை கட்டடம் 888 இருக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் சின்னம் மற்றும் தேசிய மலரான தாமரை கருப்பொருளை அடிப்படையாக கொண்டு மாநிலங்களவை 348 இடங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அவைகளின் கூட்டுக்கூட்டத்தை நடத்தும் வகையில் 1,272 இருக்கைகளுடன் அரங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் ஆயுட்காலம் 150 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட செங்கோல் ஆனது மக்களவையில் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட்டுள்ளது.

மக்களவை, மாநிலங்களவையை தவிர புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மையத்தில் ‘அரசியலமைப்பு மண்டபம்’ என்ற புதிய அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது முந்தைய கட்டிடத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும்.

புதிய வளாகத்தில், அலுவலகங்கள் ‘அதி-நவீன’ பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மிகவும் பாதுகாப்பானவையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

விவாதங்களின் தரத்தை கூட்டும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட நூலகத்தை புதிய நாடாளுமன்றம் கொண்டுள்ளது.

நாட்டின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்காக பல பிராந்திய கலைப்படைப்புகளையும் இது வழங்கும்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் திறந்த முற்றத்தில் தேசிய மரமான ஆலமரமும் உள்ளது.

மேலும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மொத்தம் 6 வாயில்கள் இருக்கின்றன. இந்த 6 வாயில்களுக்கும் 6 வெவ்வேறு உயிரினங்களின் பெயரிடப்பட்டுள்ளன. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும் 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்றத்தின் வெவ்வேறு அம்சங்களைக் குறிக்கிறது.

கஜ துவாரம், அஸ்வ துவாரம், கருட துவாரம், மகர துவாரம், ஷர்துலா துவாரம் மற்றும் ஹம்ச துவாரம் ஆகியவை நாடாளுமன்ற வாயில்களின் பெயர்களாகும். புதிய நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு வாயிலிலும் அந்த வாயிலின் பெயரை கொண்ட உயிரினத்தின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

கஜ துவாரம்

புத்தி, நினைவாற்றல், செல்வம் மற்றும் ஞானம் ஆகியவற்றைக் குறிக்கும் யானையின் பெயரான ‘கஜம்’ நாடாளுமன்றத்தின் முதல் வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாயில் கட்டிடத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது. வாஸ்து சாஷ்திரத்தின் படி, வடக்கு திசை புதனுடன் தொடர்புடையது. இது புத்திசாலித்தனத்திற்கான இடமாக நம்பப்படுகிறது. வாயில்களில் யானை உருவங்களை வைப்பது மிக பிரபலமான ஒரு நடைமுறையாகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, யானை உருவங்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரும்.

அஸ்வ துவாரம்

அஸ்வம் என்பது குதிரைக்கான இன்னொரு பெயராகும். பொதுவாக, சக்தி, வலிமை மற்றும் தைரியத்தை குதிரை குறிக்கிறது. ஒரு அரசாங்கத்திற்கு தேவையான குணங்களாக இவை கருதப்படுகின்றன. இந்திய பாரம்பரியத்தில் குதிரைகளின் முக்கியத்துவத்தை வேத இலக்கியங்களிலும், ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் காண முடியும். 1250 CEஇல் கிழக்கு கங்கா வம்சத்தின் நரசிம்மதேவனால் கட்டப்பட்ட கோனார்க் சூரிய கோவிலில் உள்ள குதிரையின் சிற்பம் தான் அஸ்வ துவாரத்தை அமைக்க தூண்டியது.

கருட துவாரம்

மூன்றாவது வாயிலுக்கு பறவைகளின் ராஜாவான கருடனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் , நாயக்கர் காலத்தில், தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட கருடனின் சிலையை குறிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றத்தின் மூன்றாவது வாயிலில் கருட சிற்பம் வைக்கப்பட்டுள்ளது. ராமாயணத்தின் படி, கருடன் இந்து கடவுள் விஷ்ணுவின் வாகனமாகும். மும்மூர்த்திகளில் பாதுகாவலரான விஷ்ணுவின் வாகனம் கருடன் என்பதால், அது சக்தி மற்றும் தர்மத்தின் சின்னமாக பார்க்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கிழக்கு நுழைவாயிலுக்கு தான் கருட துவாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாகவே, கழுகுகளும் பருந்துகளும் அதிகாரத்தின் சின்னமாக கருதப்படுகின்றன. அதனால் தான், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் அதிகாரபூர்வ சின்னமாக கழுகுளை வைத்திருக்கின்றன.

மகர துவாரம்

இந்திய புராணங்களின் படி, மகரம் என்பது வெவ்வேறு விலங்குகளின் கலவையான கடல் உயிரினம் ஆகும். தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவியுள்ள இந்து மற்றும் புத்த நினைவுச் சின்னங்களில் மகர சிற்பங்கள் காணப்படுகின்றன. வெவ்வேறு உயிரினங்களின் கலவையாக மகரம் இருப்பதால், அது இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை குறிக்கிறது. மேலும், வாசல்களில் வைக்கப்படும் மகர சிற்பங்கள் சக்திவாய்ந்த பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றன. புதிய நாடாளுமன்றத்தின் மகர துவாரம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயிலை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது.

ஷர்துல துவாரம்

ஐந்தாவது வாயிலுக்கு ‘ஷர்துலா’ என்ற மற்றொரு புராண உயிரினத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினம் சிங்கத்தின் உடலையும், குதிரை, யானை அல்லது கிளியின் தலையையும் கொண்டதாகும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வாயிலில் ஷர்துலா இருப்பது நாட்டு மக்களின் சக்தியை குறிக்கிறது என்று அரசு குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது வலிமை மற்றும் கருணையின் சமநிலையை பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் உள்ள குஜ்ரி மஹால் அருங்காட்சியகத்தில் இருக்கும் ஷர்துலா சிலையின் நினைவாக நாடாளுமன்றத்தின் தென்கிழக்கு பொது நுழைவாயிலுக்கு ஷர்துலா என்று பெயரிடப் பட்டுள்ளது.

ஹம்ச துவாரம்

அன்னப்பறவையை குறிக்கும் ‘ஹம்சா’ என்ற பெயர் புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலுக்கு வைக்கப்பட்டுள்ளது. அன்னப்பறவை, இந்து கடவுளான சரஸ்வதியின் வாகனமாகும். மேலும், அன்னப்பறவை மோட்சத்தை குறிக்கிறது. பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியில் இருந்து ஆன்மா விடுதலை பெறுவதே மோட்சமாகும். சுய-உணர்தல் மற்றும் ஞானத்தை குறிப்பதற்காக புதிய நாடாளுமன்றத்தின் ஆறாவது வாயிலில் அன்னப்பறவையின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!