சர்வதேச இளைஞர் தினமின்று!
ஒவ்வொரு நாட்டின் எதிர்காலமே இளையோர் கையில் தான் உள்ளது. இளையோரின் வளர்ச்சிக்கு ஏற்பவே, நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு இளையோரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இத்தகைய வலிமை படைத்த இளையோரை, ஒவ்வோர் அரசும் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் நோக்கத்திலேயே இந்த உலக இளையோர் நாள் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரையின்படி 2014 முதல் கொண்டாடப்படுகிறது. அதே சமயம் இந்திய பண்பாட்டை உலகுக்கு எடுத்துகாட்டியவர், ஆன்மயோகி, ராமகிருஷ்ணரின் தலைமை சீடரான விவேகானந்தர் 1863 ஜனவரி 12-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நரேந்திரநாத். இளம் வயதில் பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். தேசப்பற்று, வீரம், ஒழுக்கம், மனிதநேய பண்புகள், தளர்ந்து போகாத நெஞ்சம், உத்வேகம், அன்பு மற்றும் மரியாதை போன்ற நற்குணங்கள் படைத்த இளைஞர்களால் மட்டுமே நாடு முன்னேறும் என்று நம்பிக்கையை உலகெங்கிலும் விதைத்தார். இவரது பிறந்தநாளை தேசிய இளைஞர் நாளாக இந்திய அரசு 1984-ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்கு தேவையான திறன்களுடன் இளைஞர்களை ஆயத்தப்படுத்துவதற்கான முக்கியமான தேவையை இந்த தினம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதாவது ஐ.நா., அறிக்கையின்படி, 15 வயது முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இதில் பெரும்பாலானோர் வளரும் நாடுகளில் உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் பங்கு போன்றவற்றை இளைஞர்களுக்கு ஒவ்வொரு அரசும் சரியான விதத்தில் ஏற்படுத்தி தரவேண்டும். குடும்பத்தை முன்னேற்ற வேண்டியது, இவர்கள் கையில் உள்ளது. எனவே இளைஞர்கள், பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆனாலும் சிலர், இளமைப் பருவத்தில் ஆல்கஹால், புகையிலை, போதைப் பொருள் ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். மாறாக திறமைகளை வளர்த்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவ இந்நாளில் இளைஞர்கள் உறுதி ஏற்க வேண்டும்.
மனித வாழ்வை மூன்று பருவங்களாக கொண்டாடுகிறோம். குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதியபருவம். இந்தப் பருவங்களில் இளமைப்பருவம் என்பது மட்டுமே நமக்கான வாழ்க்கையை நாம் மட்டுமே தீர்மானித்து வாழும் துணிவையும் சுதந்திரத்தையும் தருவதாக அமைகிறது. குழந்தைப்பருவமும் முதிய பருவமும் மற்றவரை சார்ந்தே உள்ளது. இளமைப்பருவம் என்பது கவலைகளை புறம்தள்ளிவிட்டு மகிழ்ச்சியை மட்டும் நாடும் பருவம். நம் அனைவருக்குமே உங்களால் மறக்க முடியாத காலம் அல்லது நினைவுகள் எது என்று கேட்டால் உடனடி பதிலாக ‘பள்ளி அல்லது கல்லூரியில் கிடைத்த அனுபவங்கள் மட்டுமே’ என்றுதான் வரும். வாழ்வின் இறுதி மூச்சு வரை மறக்க முடியாத நினைவுகளை சுமந்து நம்முடனே மடிவது இளமைக்கால நினைவுகள் மட்டுமே என்றால் மிகையல்ல.
அதிலும் ஒருவர் தனது இளமைக்காலத்தில் பெற்ற கல்வி உலகளாவிய அனுபவங்கள் கற்றுக்கொண்ட பண்புகளை வைத்து செய்யும் செயல்களால்தான் அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. இளைய பருவத்தில் உடலும் மனமும் ஆரோக்கியத்துடனும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலுடனும் இருக்கும். அதை முறையாக நேர்வழியில் பயன்படுத்தி வாழ்வை வெற்றிகரமாக்கும் பொறுப்பு இளைஞர்கள் கையிலேதான் உள்ளது. இளையவர்களின் மனோசக்தி எத்தகையது என்பதை நன்கு உணர்ந்தே சுவாமி விவேகானந்தர் 100 இளைஞர்களைத் தாருங்கள் நாட்டை மாற்றிக் காட்டுகிறேன் என்றார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர் களுக்காகவே தனது உரைகளையும் எழுத்துகளையும் அர்ப்பணித்தார். எழுச்சிமிகு தன்னம்பிக்கையை பள்ளி, கல்லூரிகளில் எதிர்கால இளைஞர்கள் முன் உரை நிகழ்த்தி ஊட்டினார்.
![]()
அவ்வளவு ஏன்? மனிதக்குலத்தையே ஆட்டிப்படைத்த இயற்கைப் பேரழிவுகளான சுனாமி, வர்தாப்புயல், கொரோனாத்தொற்று என அத்தனை இடர்களிலும், ஜாதி, மதம், குலம், மொழி மறந்து, உயிரையும் துச்சமாக நினைத்து, தங்கள் முழு சக்தியையும் திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றி, அவர்களின் பசி போக்க உதவியது சேவை குணமிக்க இளைஞர்கள்தான் என்பதை அனைவரும் அறிவோம். அப்படிப்பட்ட இளையவர்களின் ஆற்றல் முறையாக பயன் படுத்தப்பட்டால் கலாம் அவர்கள் சொன்னதுபோல் இந்தியாவும் பசி பட்டினி அற்ற சிறந்ததொரு வல்லரசாக மாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒரு இளைஞர் நலமுடன் வாழ்ந்தால் அவரால் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெருமையே.
இப்படிப்பட்ட இளைய சமுதாயத்தை எண்ணியும் அவர்களின் முன்னேற்றம் குறித்தும் அதற்கான வழிமுறைகள் பற்றியும் உலகின் அனைத்து நாடுகளும் பல்வேறு வகைகளில் திட்டங்கள் வகுத்துள்ளதை அறிவோம். அந்த வகையில் 1965லிருந்தே உலக நாடுகளின் சார்பில் ஐ.நா. சபை இளைஞர்கள் மீதான கவனத்தை அதிகப்படுத்தியது எனலாம். அமைதி, மரியாதை மற்றும் புரிந்துணர்வின் சில இலட்சியங்களை இளைஞர்கள் இடையே ஊக்குவிக்கும் விதமாக முன்னெடுப்புகளும் இருந்தன. டிசம்பர் 17, 1999 அன்று இளைஞர்களளின் மதிப்பை உணர்ந்த அமைச்சர்களால் உலக மாநாட்டில் வைத்த பரிந்துரையை ஏற்று ஐ.நா. சபையால் ஆகஸ்ட் 12 ந்தேதி அறிவிக்கப்பட்டு 2000 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது .இந்த நாள் இளைஞர்களின் கல்வி, அரசியல் ஈடுபாடு மற்றும் சமூகம் சார்ந்த உலகப் பிரச்சினைகளை சமாளிக்கும் மேலாண்மை போன்றவற்றில் விழிப்புணர்வைத் தரும் நாளாக அமைகிறது இந்த ஆண்டுக்கான சர்வதேச இளைஞர் தினத்தின் கருப்பொருள் (Theme), “நிலையான வளர்ச்சி இலக்குகளுக்காக இளைஞர்களின் உள்ளூர் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அப்பால்” என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், உலகளாவிய இலக்குகளை அடைவதற்கு, உள்ளூர் சமூகங்களில் இளைஞர்கள் ஆற்றும் தனித்துவமான பங்கை இந்த ஆண்டு கருப்பொருள் வலியுறுத்துகிறது. அதாவது, உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட பெரிய இலக்குகளை, இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் சிறுசிறு செயல்கள் மூலம் நடைமுறைப்படுத்தி, அதை உண்மையாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
மொத்தத்தில் இளைஞர்கள் நாளைய நம்பிக்கையாகக் கருதப்படுகிறார்கள். நாடுகளும் அவற்றின் விருப்பங்களும் அதையே சார்ந்துள்ளன. இளைஞர்கள் என்பது வெறும் தனிநபர்களின் குழு மட்டுமல்ல, நாம் புரிந்துகொள்ளும் எதிர்காலம் – நிலைத்தன்மையின் எதிர்காலம். ஆண்டுகள் முன்னேறும்போது நாம் காண விரும்புவது இதுதான். வறுமையின் தீய சுழற்சியும் வளங்களின் பற்றாக்குறையும் தூய திறமைகளையும் வாய்ப்புகளையும் திருடுவதாக இருக்கும் உலகில், நமது பிரகாசமான எதிர்காலத்திற்கும், நனவாகும் திறன் கொண்ட கனவுகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் பிரச்சினைகளை நாம் எதிர்த்துப் போராட வேண்டும்.
தனுஜா


