தேசிய நூலகர் தினம் -அறிவின் கலங்கரைவிளக்கங்கள்!
விரும்பும் துறையில் புலமை பெற்றிட நூலகம் பெரிதும் துணை செய்கின்றது. ஆழ்ந்து படிக்கும் பழக்கத்தையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கின்றது. ஆய்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி தருகின்றது. பாடப்பொருள் சார்ந்த விரிவான அறிவாற்றலை பெற பெரிதும் உதவுகின்றது. ஆதலால் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நாம் சார்ந்துள்ள துறையின் வளர்ச்சியை புரிந்துகொள்ள பெரிதும் உதவி புரிவது நூலகங்கள்தான். அதனால்தான் கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்றார் அதிவீர ராம பாண்டியர். ‘நூல் அளவே ஆகுமாம் நுண்ணறிவு’ என்றும் ‘நூல் பல கல் ‘என்றும் கூறியிருக்கின்றார் ஔவை பாட்டி. அதற்கு முன்பு வரை ஓலைச்சுவடிகளைதான் நாம் பெரிதும் போற்றி பாதுகாத்து வந்தோம். இப்பொழுதும் தொடர்கிறோம். அந்த வகையில் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதனின் பிறந்த நாளான ஆகஸ்ட் 12ஆம் தேதி, ஆண்டுதோறும் தேசிய நூலகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அறிவுப் பெட்டகங்களான நூலகங்களையும், அவற்றின் அமைப்பையும் மேம்படுத்துவதில் இவரது பங்கு அளப்பரியது.

டாக்டர் எஸ்.ஆர். ரங்கநாதன் – ஒரு முன்னோடி:
சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் நூலகராகப் பணியாற்றிய ரங்கநாதன், இங்கிலாந்தில் நூலக அறிவியல் பயின்று திரும்பிவந்தார். அப்போது, தமிழகத்தில் நூலகங்களில் ஒழுங்கான பராமரிப்போ, போதிய ஊழியர்களோ இல்லை. இந்தச் சூழலில், புத்தகங்களை எளிதாக வகைப்படுத்தவும், வரிசைப்படுத்தவும் அவர் கண்டுபிடித்த “கோலன் பகுப்பு முறை” (Colon Classification) ஒரு புரட்சிகரமான முறையாக அமைந்தது. இம்முறை இன்றும் பல நூலகங்களில் பின்பற்றப்படுகிறது. நூலகவியலுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
உலக நூலகங்களின் வரலாறு:
நூலகங்களின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது. மெசபடோமியா மக்கள் களிமண் தகடுகளில் தங்கள் கதைகளை எழுதி கோவில்களிலும், அரண்மனைகளிலும் பாதுகாத்தனர். அதுவே நூலகங்களின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. கி.மு. 300-களில் எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் சுருள்களுடன் அமைக்கப்பட்டதே முதல் நூலகமாக அறியப்படுகிறது. ஆனாலும் பண்டைக்காலத்தில் கல்வியறிவு பெற்றோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. அரண்மனைகளிலும் கோவில்களிலும் பெரும்பாலும் படிக்கும் நோக்கமின்றி பெருமைக்காக மட்டுமே நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் நூல்கள் படிப்பதற்கே என்ற எண்ணம் தோன்றி நூலகங்கள் உருப்பெற்றன. ‘கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்’ என்பது பழமொழி. எதுவும் தெரியாமல் பிறந்த நாம் அறிஞனாக நூலகப் படிப்பு அவசியம்.
அச்சுக்கலை வளர்ச்சியடைந்த பிறகுதான் நூலகங்கள் பெரும் வளர்ச்சி கண்டன. கி.பி. 18-ஆம் நூற்றாண்டில் பொது நூலகங்களின் தேவை அதிகரித்தது. இதன் விளைவாக, இங்கிலாந்தில் பொது நூலகச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்தியாவின் பெருமைமிகு நூலகங்கள்:
- இந்திய தேசிய நூலகம் (கொல்கத்தா): இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான இது, 1830-ல் பொது நூலகமாகத் தொடங்கப்பட்டு, 1953 முதல் இந்திய தேசிய நூலகமாக செயல்பட்டு வருகிறது. இங்கு 22 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், அனைத்து இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் உள்ள நூல்கள் மற்றும் நாளிதழ்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
- கொல்கத்தா பல்கலைக்கழக நூலகம்: 1856-ல் தொடங்கப்பட்ட இந்த நூலகம், இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழக நூலகம் ஆகும். தற்போது சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
- டெல்லி பொது நூலகம்: இந்திய அரசும், யுனெஸ்கோவும் இணைந்து 1951-ல் உருவாக்கிய இந்த நூலகம், ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது.

கன்னிமரா பொது நூலகம் – சென்னையின் பொக்கிஷம்:
சென்னை ஆளுநராக இருந்த கண்ணிமரா பிரபுவின் முயற்சியால், 1896-ல் கன்னிமரா பொது நூலகம் தொடங்கப்பட்டது. 40,000 நூல்களுடன் தொடங்கிய இந்த நூலகத்தில் தற்போது 7.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இதில் 1 லட்சம் தமிழ் நூல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் அதிக தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம் இதுதான்.
இங்கு விக்டோரியா மகாராணிக்காக உருவாக்கப்பட்ட அட்லஸ், 1600-களில் பருத்தி நூலிழை காகிதத்தில் அச்சிடப்பட்ட பைபிள் போன்ற பழமையான, அரிய புத்தகங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, சமற்கிருதம், உருது, மராட்டி, குசராத்தி, ஒடியா, வங்காளம் என 12 மொழிகளில் 7 லட்சத்து 27 ஆயிரம் நூல்கள் இங்குள்ளன. இலக்கியம், வரலாறு, கலை, கலாசாரம், மருத்துவம், பொறியியல், அறிவியல், கணிதம், அரசியல் மற்றும் ஆராய்ச்சிகள் என அனைத்து துறைகள் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளவும், சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவுகிறது.
இந்நூலகத்தில் உள்ள அனைத்து நூல்களின் தலைப்புகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்தபடியே நூல் பற்றிய விவரங்களை இணையதளம் மூலம் வாசகர்கள் தெரிந்து கொண்டு, நேரில் வந்து நூல்களை படிக்க முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கு படிப்பதற்கு ஏதுவாக பிரெய்லி மற்றும் ஒலிநாடா வழியாக படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அறிவுப் பெட்டகமாக திகழும் கன்னிமாராவிற்கு அழைப்பிதழ் இல்லாமல், விழா நடத்தாமல், அறிவை அள்ளிச்செல்ல தினசரி ஆயிரக்கணக்னோர் ஆர்வத்துடன் வந்து செல்வதால், ஆண்டில் 365 நாளும் கன்னிமாராவில் அமைதி வழியில் அறிவுத் திருவிழா நடக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க சொல்லலாம்.
நூலகங்கள் என்பவை வெறும் புத்தகங்களின் தொகுப்பு அல்ல; அவை அறிவின் ஊற்றுக்கண். இந்த தேசிய நூலகர் தினத்தில், அறிவின் ஒளியைப் பாய்ச்சும் நூலகங்களையும், நூலகர்களையும் போற்றுவோம்.


