யானைகள் தினம்: காட்டின் வளம் காக்கும் தோழன்!
தமிழ் சங்க இலக்கியங்களில் யானையை, 170க்கும் மேற்பட்ட பெயர்களில் குறிப்பிடுகிறார்கள்.அவற்றில் சில: 1. யானை, 2. வேழம், 3. களிறு, 4. பிளிறு, 5. கலபம், 6. மாதங்கம், 7. கைமா, 8.உம்பல் 9. வாரணம், 10. அஞ்சனாவதி, 11. அத்தி, 12. அத்தினி, 13. அரசுவா, 14. அல்லியன், 15. அனுபமை, 16. ஆம்பல், 17. ஆனை, 18. இபம், 19. இரதி, 20. குஞ்சரம், இராசகுஞ்சரம், 21. இருள், 22. தும்பு, 23. வல் விலங்கு, 24.கரி, 25.அஞ்சனம். மேலும் யானைகள், இயற்கையின் தலைச்சிறந்த படைப்பு. பிறருக்கு தீங்கு நினைக்காத ஒரே உயிரினம்’- என 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர் எழுதியுள்ளார்.போரிடுவதற்கும், விவசாயத்திற்கும் பயன்பட்ட யானைகள், ஆலயங்களில் தெய்வ காரியங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தந்தத்திற்காக யானைகளைக் கொல்வது அதிகரித்த காரணத்தால் 1872-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் அரசு, யானைகளைப் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவித்தது. அதன்பிறகு சர்க்கஸ், ஆலயங்கள், திருமடங்கள் ஆகியவற்றில் மட்டுமே யானைகள் வளர்க்கப்பட்டு வந்தன. சர்க்கஸ்கள் தங்கள் செல்வாக்கை இழந்த பிறகு, ஆலயங்களிலுள்ள யானைகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைந்து வருகிறது. இதை எல்லாம் அனைவரும் அறிந்து , யோசிக்கவே ஆகஸ்ட் 12ஆம் தேதி, உலக யானைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. காட்டின் வளம் காக்கும் யானைகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் ஒரு நாள் இது. இந்த நாள் உருவானதற்கு ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு.2012ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12 அன்று, வில்லியம் சாட்னர் இயக்கத்தில் ‘Return to the Wild’ என்ற ஆங்கில திரைப்படம் வெளியானது. இது, தனியாரிடம் வளர்க்கப்படும் ஒரு யானையை மீண்டும் காட்டுக்குள் கொண்டு செல்வது பற்றிய கதை. இந்தத் திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள யானை ஆர்வலர்கள், வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள், மற்றும் யானைகள் வாழும் நாடுகளில் உலக யானைகள் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

யானைகளின் பங்கு: ஏன் யானைகள் அவசியம்?
பூமியில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரிய விலங்கு யானை. ஒரு நாளைக்கு சுமார் 200 கிலோ உணவு உட்கொள்ளும் யானை, காடுகளின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்கிறது. யானையின் சாணத்தில் இருந்து வெளிவரும் விதைகள், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளைப் பரப்பி, காட்டை வளமாக்குகின்றன. உயிரியல் வல்லுநர்கள் கூற்றுப்படி, ஒரு காட்டின் யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, அந்தக் காட்டின் வளமும் பன்மடங்கு பெருகும். இதனால், ஒரு வனத்தில் 10 யானைகள் இருந்தாலே அது பெரிய காடாக மாறிவிடும் என்கிறார்கள்.
குறிப்பாக, இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக உள்ளது. தமிழ்நாட்டில் சத்தியமங்கலம் வனச்சரணாலயத்தில் மட்டும் ஆண்டுதோறும் 900 முதல் 1200 யானைகள் வந்து செல்கின்றன.
யானைகளின் பிரமிப்பூட்டும் திறன்கள்
யானைகள் மனிதர்களைப் போலவே சுமார் 80 ஆண்டுகள் வரை வாழும் ஆயுள் கொண்டவை. அவற்றின் பிரமிப்பூட்டும் சில திறன்கள்:
- வேகம்: மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியவை.
- நீரைக் கண்டறியும் திறன்: 5 கி.மீ தொலைவில் உள்ள நீரைக் கண்டறியும் மதிநுட்பம் கொண்டவை.
- மூளையின் திறன்: தரையில் வாழும் விலங்குகளில், யானையின் மூளையே மிகப்பெரியது. இது சுமார் 5 கிலோ எடையுடையது. மனிதர்களுக்கு அடுத்தபடியாக அதிக அறிவும், நினைவாற்றலும் கொண்டவையாக யானைகள் கருதப்படுகின்றன.
யானைகளுக்கு என்ன அச்சுறுத்தல்கள்?
வனத்தின் வளத்திற்குக் காரணமான இந்த அற்புத உயிரினங்கள், பல அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன.
- வேட்டையாடுதல்: யானைகள் அவற்றின் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன.
- வாழிட அழிப்பு: மனிதர்கள் விவசாய விரிவாக்கத்துக்காக காடுகளை அழிப்பதால், யானைகளின் வாழிடங்கள் குறைகின்றன. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் ஊருக்குள் வருவதன் மூலம் மனித-யானை மோதல்கள் அதிகரிக்கின்றன.
இந்த அச்சுறுத்தல்களைத் தடுத்து, யானைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். ஏனெனில், மனிதனின் வாழ்வு வளம் பெற, வனவளம் அவசியமாகிறது. வனவளம் செழிக்க, யானைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இந்த சர்வதேச யானைகள் தினத்தில், யானைகளைப் பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்.
நிலவளம் ரெங்கராஜன்


