கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் பிரதமர்- முதல்வர் பழனிசாமி சர்டிபிகேட்!

கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் பிரதமர்- முதல்வர் பழனிசாமி சர்டிபிகேட்!

மிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 13 சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வருகை தந்துள்ளார். தாராபுரத்தில் இன்றுநடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தாராபுரம் தொகுதி வேட்பாளரும், மாநில பாஜக தலைவருமான எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய விவரம்:

கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களே!

அண்ணா திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்களே!

அண்ணா திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளே, தொண்டர்களே!

இந்த சிறப்பான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெரியோர்களே! தாய்மார்களே! வாக்காள பெருமக்களே மகளிரணி சகோதரிகளே! இளைஞர் பட்டாளங்களே! பத்திரிகையாளர்களே! ஊடக நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி கலந்த வணக்கத்தை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெறவிருக்கிற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வாகை சூடுவார்கள் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். நம்முடைய கூட்டணி வலிமையான மற்றும் வெற்றிக் கூட்டணி. இந்த தேசத்திற்கு நன்மை செய்யக்கூடிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இடம் பெற்றிருக்கக்கூடிய கூட்டணி நம்முடைய வெற்றிக் கூட்டணி. மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் இந்திய நாடு உயர்வடைய, இந்திய நாட்டிலிருக்கும் மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையில் இரவு, பகல் பாராமல் உழைக்கின்ற உயர்ந்த இடத்திலிருக்கின்ற மரியாதைக்குரிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் இன்று உலகளவில் இந்திய நாடு வல்லரசாக வேண்டுமென்ற நாட்டு மக்கள் கனவை நனவாக்கியிருக்கிறார்கள். இந்திய நாடு உலகளவில் பெருமை அடைகிறதென்றால் அவருடைய உழைப்பால் இந்திய திருநாடு உயர்ந்து நிற்கிறது என்பதை பெருமையயோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை கேட்கும் போதெல்லாம் கொடுக்கும் அரசு மத்திய அரசு, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள். தமிழ்நாட்டில் இரு வழிச் சாலை, நான்கு வழிச் சாலை, எட்டு வழிச் சாலை என ஏறத்தாழ 5,200 கி.மீ. நீளமுள்ள சாலைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை மூலமாக ஏறத்தாழ ரூபாய் 1 இலட்சத்து 5 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதியுதவி வழங்கி தமிழகம் உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலம் என்ற பெருமையை உருவாக்க நமக்கு இந்தத் திட்டத்தை வழங்கிய மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு நீர் பற்றாக்குறை மாநிலம். அதைப் போக்க அண்ணா திமுக-வின் ஒப்பற்ற தலைவி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்த கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் நிறைவேறும்போது தமிழ்நாட்டு மக்கள் ஏற்றம் பெறுவார்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் பிரச்சனையே இல்லையென்ற நிலை உருவாகும், அந்தத் திட்டத்தை மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள், அதற்கான முயற்சியை எடுப்பார்களென்று இந்தத் தருணத்தில் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். மிகப்பெரிய இத்திட்டம் தமிழகத்திற்கு வரவேண்டுமென்றால் மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கத்தோடு இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். அதற்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் மனது வைக்க வேண்டும், தமிழ்நாட்டு மக்கள் மீது பேரன்பு கொண்ட மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் நமக்கு இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறைவேற்றி தருவார்கள்.

தமிழகத்தில், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக பெருநகரங்களில் வளர்ச்சியை காண முடிகிறது. சிறந்த உள்கட்டமைப்பு, தடையில்லா மின்சார விநியோகம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். 2019-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் என் தலைமையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில், தொழில் முதலீட்டாளர்கள்

ரூபாய் 3 இலட்சத்து 500 கோடி மதிப்பிலான தொழில் முதலீடு செய்ய 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் பல்வேறு தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உருவாகும்போது, நேரடியாக 5.50 இலட்சம் நபர்களுக்கும் மறைமுகமாக 5 இலட்சம் நபர்களுக்கும் என மொத்தமாக 10.50 இலட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் கனவான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஏறத்தாழ ரூபாய் 1,652 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் அத்திட்டம் நிறைவேற்றப்பட்டு இந்த வறட்சியான பகுதியிலுள்ள மக்கள் செழுமையாகவும் இந்த மாவட்டங்களெல்லாம் பசுமையாகவும் காட்சியளிப்பதை காணப்போகிறோம்.

நொய்யல் ஆற்றை நவீனப்படுத்த ரூபாய் 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கீழ்பவானி பாசனத் திட்டத்தை நவீனப்படுத்த ஏறத்தாழ ரூபாய் 933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டன்சத்திரம், தாராபுரம், அவிநாசி பகுதிகளில் ரூபாய் 724 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணிகள் முடிவுற்று மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்கு ரூபாய் 980 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

திருப்பூர் நகராட்சியில் ரூபாய் 1,125 கோடி மதிப்பீட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திருப்பூர் மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளில் ஏறத்தாழ 636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலம் திருப்பூர் மாநகராட்சி, உடுமலைப்பேட்டை நகராட்சி, பல்லடம் நகராட்சி, அவிநாசி பேரூராட்சி, மடத்துக்குளம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ஏறத்தாழ ரூபாய் 500 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி 75 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் நிறைவேறும்போது இந்தப் பகுதி ஏழை, எளிய மக்களுக்கு சொந்தமாக வீடுகள் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.

அடித்தட்டில் வாழ்கிற ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட ஆதிதிராவிட குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்க மாண்புமிகு அம்மாவின் அரசு அதிகமான கல்லூரிகளை திறந்துள்ளது. இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரை, 2013-ஆம் ஆண்டு காங்கேயத்திலும், 2019-ஆம் ஆண்டு அவிநாசியிலும், 2020-ஆம் ஆண்டு பல்லடத்திலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் உயர்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து இந்திய திருநாட்டில் உயர்கல்வி கற்பதில் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்கும் போது தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தவர்கள் எண்ணிக்கை 34 விழுக்காடாக இருந்தது, மாண்புமிகு அம்மா அவர்கள் கல்வியில் ஏற்படுத்திய புரட்சி, மறுமலர்ச்சி மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு செய்து கிராமங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள். இவ்வாறு அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக தற்போது 49 விழுக்காடு மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயின்று வருகிறார்கள். இவையெல்லாம் வரலாற்றுச் சாதனை. கல்வியில் உயர்வு பெறும் மாநிலம் பொருளாதார வளர்ச்சி பெற்று மேம்படையும் என்பதை சுட்டிக்காட்ட விழைகிறேன்.

தமிழகத்தில் 248 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 1,079 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளது. மாணவச் செல்வங்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்க மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 52.31 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு கொடுத்துள்ளோம். இவையெல்லாம் மாண்புமிகு அம்மா அரசின் சாதனைகள் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் இதுவரை 12.51 இலட்சம் நபர்கள் பயனடைந்துள்ளனர். 1 சவரன் ரூபாய் 37 ஆயிரம் மதிப்புள்ள தங்கம், திருமண நிதியுதவியாக ரூபாய் 25,000 மற்றும் ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் 12.51 பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கடுமையாக பாதித்த நேரத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் நல் ஆலோசனையை பெற்று மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்பட்டு, இந்தியாவிலேயே அதிகளவில் சுகூ-ஞஊசு பரிசோதனை மேற்கொண்டதன் விளைவாக அந்நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் 4 மாதங்களுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லாமல் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை கொடுத்தோம். குடும்பத்திற்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். ஏழைகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகின்றார்களோ அப்போதெல்லாம் அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்த அரசு அம்மாவின் அரசு என்பதை சுட்டிக்காட்டி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அண்ணா திமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் நம்முடைய கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் வாக்களித்து பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து மீண்டும் அம்மா அரசு அமைய உங்களிடன் அன்பான வேண்டுகோள் வைத்து இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

Related Posts

error: Content is protected !!