திருவின் குரல் – விமர்சனம்!

நம் தமிழக சுகாதாரத்துறையின் அரசு மருத்துவமனைகள் மூலம் தினசரி இரண்டு கோடி புறநோயாளிகளை கவனித்து வருகின்றனர். ஆறு மணி நேரத்தில் இரண்டாயிரம் புற நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு ஊசி தேவையென்றால் அதைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைத்து விட்டு மேலும் ஆரு மணி நேரம் உள் நோயாளிகளைக் கவனிக்க வேண்டும். பணியில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். இதே சென்னை அரசு மருத்துவமனை நூற்றுக்கணக்கிலான மருத்துவரகளும் அன்றாடம் முன்னூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும். இது நம் நாடு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை சார்ந்து ஒவ்வொரு மருத்துவர் மீதும் மருத்துவ ஊழியர் மீதும் விதிக்கப்பட்ட சுமை. இச்சூழலில் அரசு மருத்துவமனையில் கடைநிலை ஊழியர்களெல்லாம் கிரிமினல்களாக காட்டி ஒரு படைப்பை வழங்கி இருக்கிறார்கள் . ஆம்.. ஒரு அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் விஷயத்தை வைத்து கிரைம் ஆக் ஷன் திரில்லர் படமாக வந்துள்ளது திருவின் குரல். அருள்நிதி, பாரதிராஜா, ஆத்மிகா நடித்திருக்கிறார்கள். ஹரிஷ் பிரபு இயக்கி உள்ளார்.
அதாவது ஓரளவு காது கேட்கும் வாய் பேச முடியாத இளைஞன் திரு (அருள்நிதி) அத்தை பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். திடீரென அப்பா மாரிமுத்துவிற்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அந்த மருத்துவமனையில் இருக்கும் கடைநிலை ஊழியர்களான நால்வர் திரைமறைவில் பல்வேறு கொலை, கொள்ளை போன்ற வேலைகளை செய்கிறார்கள். திரு வீட்டு பெண்களிடம் தவறான பாலியல் கண்ணோடத்துடன் பார்க்கிறார்கள். இதனால் திரு இவர்களை அடிக்கிறார். இந்த நால்வரும் செய்யும் ஒரு கொலையை திருவின் அக்காவின் மகள் பார்த்துவிட, இந்த பெண்ணையும் கொலை செய்ய முயற்சி செய்கிறது இந்த டீம். திருவை திசை திருப்பவும், பழி வாங்கவும் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ள திருவின் அப்பாவிற்கு தவறான மருந்துகள் செலுத்தி திருவை பாடாய்படுத்துகிறார்கள். இறுதியில் இந்த பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவதுதான் திருவின் குரல் கதை.
ஹீரோ அருள்நிதி சிறப்பு மாற்று திறனாளியாக (வாய் பேச முடியாத, கூடவே செவித்திறனும் சற்றே பாதிப்படைந்த) சவாலான வேடத்தில் .இது மட்டுமே வித்தியாசமே தவிர, அவர் வழக்கமாகச் செய்யும் கேரக்டர்தான்.. அப்பாவாக பாரதிராஜா, பாசமான முகத்தைக் காட்டும் போதும், அரசு மருத்துவமனையில் உடல் வலியால் தவிக்கும்போதும் நடிகராக ஸ்கோர் செய்கிறார். .
அருள்நிதியின் அப்பாவாக நடித்திருக்கும் பாரதிராஜா, உடல்நிலை சரியில்லாத வேடத்தில் மிக தத்ரூபமாக நடித்திருக்கிறார். அவருடைய அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஆத்மிகா, கதையோடு பயணிக்கும் வேடத்தில் நடித்து மனதில் நிற்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் அஷ்ரப், ஏ.ஆர்.ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மஹேந்திரன் ஆகியோர் கொடூரமான நடிப்பு காட்சிகளில் பக்காவாக ஸ்கோர் செய்கிறார்கள்..
பெரும்பாலும் அரசு மருத்துவமனையையே வட்டமடிக்கும் கதையை போரடிக்காமல் நகர்த்த உதவியிருக்கிறது சின்ட்டோ பொடுதாஸின் கேமரா. சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை போதுமான பலத்தைக் கொடுத்துள்ளது.
ஆரம்ப பேராவில் சொன்னது போல் இன்னமும் நம்மை ஆட்சி செய்யும் கொரோனா தொற்று , ஊரடங்கு பாதிப்புகள், பொருளாதார வீழ்ச்சியின் நடுவே அரசு மருத்துவமனைகளை மட்டுமே நடுத்தர, ஏழை மக்கள் அணுக சக்தி உடைய வாழும் நாட்டில், தேவையில்லாத பயத்தைக் கொடுக்கும் வகையில் மிகத் தவறான கதையிது, அதிலும் போலீஸ் டிப்பார்ட்மெண்ட் போக்கையே கிண்டலாக்கும் லாஜிக் ஓட்டைகள்!
மொத்தத்தில் திருவின் குரல் – தெளிவில்லை
மார்க் 2.5/5