இப்தார் நல்லிணக்கக் கூடுகைகளும் போதாமைகளும் !

இப்தார் நல்லிணக்கக் கூடுகைகளும் போதாமைகளும் !

து ரமலான் காலம். பல்சமயச் சூழல் கொண்ட நிலத்தில் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும், புரிதலையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இப்தார் விருந்துகூடல்கள் இப்போது பரவலாக நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்கள் தரப்பில் இருந்தும் பொதுத்தளத்தில் இருந்தும் இந்தக் கூடல்கள் திட்டமிடப் படுகின்றன. முஸ்லிம் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள், முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்விச் சாலைகள், தொழில் நிறுவனங்களில் இப்தார் கூடல்கள் பொது அரங்குகளில் நடைபெறுகின்றன. இவை தவிர்த்து முஸ்லிம்களும் சகோதர சமூகத்தவரும் இணைந்து நடத்தும் இப்தார் கூடல்கள் பள்ளிவாசல்களிலும் பொது அரங்குகளிலும் நடைபெறுகின்றன.

சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இவை நடைபெறுகின்றன. சகோதர சமயத் தலைவர்கள், சகோதர சமயப் பிரபலங்கள், திரைத்துறை, ஊடகத் துறை சார்ந்த ஆளுமைகள் இந்தக் கூடுகைகளில் சிறப்பு அழைப் பாளர்களாகப் பங்கேற்கிறார்கள். வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு இது. சகோதார சமய நண்பர்களுக்கு இஸ்லாத்தின் உயர் விழுமியங்களையும், முஸ்லிம்களின் அன்பையும் எடுத்து வைக்கும் நோக்கத்துடன் நடத் தப்படும் இந்த இப்தார் நல்லிணக்கக் கூடல்களில் தமிழக / இந்திய இஸ்லாமிய மரபின் செழிப்பான பக்கங்கள் பேசப்படாமல் அல்லது அந்தச் செழிப்பான வரலாற்றை இஸ்லாமிய வரலாறு இல்லை என்னும் கருத்தியல் பரப்புகைகளோடு அரங்குகள் கலைகின்றன.

இந்திய, தமிழ்ச்சூழலில் இருந்து கொண்டு இஸ்லாத்தின் நல்லிணக்கம் சார்ந்த மேன்மைகளை சகோதர சமூகத்தவருக்கு எடுத்து வைக்கும்போது அதில் இரண்டு கூறுகள் இருக்கின்றன. திருக்குர்ஆன் , நபி மொழி என்னும் ஹதீஸ் , நபிகளின் வாழ்க்கை, நபித் தோழர்களின் வாழ்க்கை இவற்றில் இருந்து அதற்கான தரவுகளை முன் வைப்பது ஒன்று. மற்றொன்று இந்தியத் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் சென்ற ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பல்சமய மக்களோடு கலந்து வாழும் முஸ்லிம்கள் வாழ்வியல், சமயவியல் தளங்களிலிருந்து நல்லிணக்கத் தரவுகளைத் துலக்கிக் காட்டுவது.
ஆனால் இந்த இப்தார் கூடல்கள் தமிழக இஸ்லாம் வரலாற்றை, தமிழக முஸ்லிம்கள் குறித்த பார்வையை தர்ஹா நீக்கம் செய்யப்பட்ட இஸ்லாமாகக்
கட்டமைக்கின்றன. நிகழ்ச்சி நடத்தும் அமைப்பில் இருக்கின்றன. முஸ்லிம் நண்பர்கள் தொடர்ந்து இதனைச் செய்து வருகிறார்கள். இதன் வழியாக அவர்கள் தர்ஹாக்களை, அங்கு சமாதியாகி இருக்கும் பெரியார்களை, சூஃபிகளை இஸ்லாமியத் தளத்திற்கு வெளியில் நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

தமிழக முஸ்லிம்களின் நல்லிணக்க வரலாற்றைத் தமிழக இஸ்லாம் வரலாற்றை, தர்ஹாக்களை அவற்றோடு தொடர்புடைய பெரியார்களான இறைநேசர்களைத் தவிர்த்து எழுதுதல் என்பது இஸ்லாம் சமயத்தை, இந்திய முஸ்லிம்களைத் தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை இந்துத்துவம் எழுதுவது போன்று அபத்தமானது. தர்ஹாக்களின் வரலாறும் இறை நேசர்களின் வரலாறும் இந்த மண்ணின் நல்லிணக்க மரபோடு ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இரு நூற்றாண்டு தொடங்கி பத்து நூற்றாண்டு வரையிலான கால அளவைக்கொண்ட அடர்த்தி நிறைந்தது தர்ஹாக்களின் வரலாறு. அனைத்துச் சமூகத்தவரும் தடை எதுவுமின்றி இயல்பாக, யாரும் அழைக்காமலேயே வந்து போகிற நல்லிணக்க வரலாறு அது.

தர்ஹா நீக்கம் செய்யப்பட்ட முஸ்லிம் வரலாறு நம்/ அவர்கள் என்னும் எதிர் நிலைகளைக் கட்டமைத்துக் கொண்டே நல்லிணக்கம் பேசும். தர்ஹா மரபில் நாம்/அவர்கள் என்னும் எதிர்வுகள் கிடையாது; எல்லாம் நாம்தான் . முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் இருதரப்பையும் இணைத்து வைக்கின்ற இஸ்லாமியப் பண்பாட்டின் பெருமித மிக்க விழுமியங்களைக் கொண்டது தர்ஹா மரபு. இப்தார் விருந்துகளைத் தடபுடலாக நடத்துகின்ற முஸ்லிம் நண்பர்களுக்கு தர்ஹாக்களின் மீதும் இறை நேசர்களின் மீதும் ஒவ்வாமை இருக்கலாம். ஆனால் வரலாற்றை மாற்ற முடியாது.
பள்ளிவாசல்களின் வரலாறு அல்ல தமிழக இஸ்லாத்தின் வரலாறு. மாறாக தர்ஹாக்களின் வரலாறுதான் தமிழக இஸ்லாத்தின் வரலாறு. இந்த மண்ணின் மரபான செழிப்பான நல்லிணக்க மரபின் வரலாறு. ஒவ்வொரு தர்ஹாக்கள் குறித்தும் ஒரு கூட்டம் கதைகள் முஸ்லிம்களிடமும் முஸ்லிம் அல்லாதவர்களிடமும் இருக்கின்றன.

முஸ்லிம் அல்லாதவர்களின் பராமரிப்பில் இருக்கின்ற, முஸ்லிம் அல்லாதவர்கள் நிலம் வழங்கி இருக்கின்ற தர்ஹாக்கள் பலவும் இருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு விஜய நாராயண புரத்தில் அமைந்திருக்கும் மேத்தப் பிள்ளை தர்ஹா என்றழைக்கப்படும் ஆடிப்பள்ளி தர்ஹா, மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மேலக்கால் தர்ஹா, கன்னியாகுமரி மாவட்டம் ஆளூரிலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சேனம்பள்ளி தர்ஹா இவை எல்லாம் முஸ்லிம் குடியிருப்புகள் எதுவும் இல்லாத சகோதர சமயத்தவர் மட்டுமே வாழுகின்ற பகுதிகளில் அமைந்திருக்கும் தர்ஹாக்கள்.

அதிலும் திருநெல்வேலி ஆடிப்பள்ளி தர்ஹா ஆண்டு விழாவின்போது விஜய நாராயணபுரத்தில் வாழுகின்ற இந்துச் சகோதரர்கள் அந்த விழாவிற்கு வருகை தரும் முஸ்லிம்களுக்காகத் தங்கள் வீடுகளையே ஓரிரு நாட்கள் காலி செய்து கொடுக்கிறார்கள். இன்றும் தர்ஹாக்களைப் பராமரித்து வருகின்ற முஸ்லிம் அல்லாத நண்பர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். இஸ்லாமியப் பெரியார் ஒருவர் சில காலம் தங்கித் தவமிருந்தார் என்பதற்காகத் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிறு பகுதியை விற்பனை செய்யாமல் அவர் நினைவாக வைத்திருக்கும் இந்து மதக்
குடும்பங்களும் இருக்கின்றன .

பல்சமய மக்கள் இயல்பாக வந்து போகிற தர்ஹாக்கள் குறைந்தபட்சம் நூறு எண்ணிக்கையையாவது தமிழகத்தில் நம்மால் அடையாளப் படுத்த முடியும். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் தர்ஹாக்கள் என்னும் நல்லிணக்கத் தாய் மடிகள் இருக்கின்றன.
பள்ளிவாசல்கள் முஸ்லிம்களின் தொழுகைக்கு உரியது. முஸ்லிம்கள் அழைத்தால் மட்டுமே சகோதரச் சமூகத்தவர்கள் பள்ளிவாசலுக்கு வருவார்கள். அங்கு அவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே. அதன் இயங்குவெளி அப்படியானது.

ஆனால் தர்ஹாக்கள் அப்படியல்ல. அவரவரும் தங்களின் சுயத்துடன் வந்து புழங்கும் வெளியினைக் கொண்டது. முஸ்லிம்கள் அல்லாதவர்கள் யாரும் அழைக்காமலேயே தர்ஹாவுக்கு வருவார்கள். பார்வையாளர், பங்கேற்பாளர் என எப்படி வேண்டுமென்றாலும் தர்ஹாவில் அவர்கள் இருக்கலாம் என்னும் பண்பாட்டுச் சுதந்திர வெளிகளை தர்ஹாக்கள் கொண்டிருக்கின்றன. வரலாறு கீழிருந்து மேலாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். ஆனால் நம் நண்பர்கள் மேலிருந்து கீழாக வரலாற்றை எழுத நினைக்கிறார்கள். அதிகாரங்களை மையப்படுத்திய வரலாற்று எழுதியலின் காலம் நிறைவுக்கு வந்து விட்டது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. மக்களிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

Thuckalayhameem Musthafa

நிழற்படம்: தக்கலை ஹலீமா

Related Posts

CLOSE
CLOSE
error: Content is protected !!