ஆத்மாவின் குரல்: உலக பிரார்த்தனை தினத்தின் மகத்துவமும் தத்துவமும்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை ‘உலக பிரார்த்தனை தினமாக’ (World Day of Prayer) கடைப்பிடிக்கப்படுகிறது. இது வெறும் ஒரு நாள் நிகழ்வு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து, சக மனிதர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் தங்கள் வேண்டுதல்களை முன்வைக்கும் ஒரு உன்னதமான இயக்கம்.
பெண்களின் விடாமுயற்சியால் மலர்ந்த வரலாறு
19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த கிறித்தவப் பெண்கள், உலகம் முழுவதும் உள்ள பெண்களின் நலனுக்காகவும், சமயப் பணிகளுக்காகவும் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கினர். இதன் தொடக்கமாக 1887-இல் பிரஸ்பிடேரியன் பெண்கள் உள்நாட்டுப் பணிகளுக்காக ஒரு பிரார்த்தனை நாளை அறிவித்தனர்; தொடர்ந்து மெதடிஸ்ட் மற்றும் பாப்டிஸ்ட் பெண்களும் வெவ்வேறு ஆண்டுகளில் இத்தகைய பிரார்த்தனை தினங்களை முன்னெடுத்தனர். 1897-இல் ஆறு வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் ஒரு குழுவாக இணைந்து, ஒரு பொதுவான கூட்டுப் பிரார்த்தனை தினத்தை உருவாக்கினர். 1912-ஆம் ஆண்டில் இது வெளிநாட்டு மிஷனரி பணிகளுக்காகவும் விரிவுபடுத்தப்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. நியூயார்க்கில் 1900-இல் நடந்த மாநாட்டிற்குப் பின், பெண்கள் ஒரு மத்திய ஆய்வுக் குழுவை அமைத்து, மற்ற நாட்டுப் பெண்களின் வாழ்க்கை நிலை மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்துப் பாடங்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தினர். 1908-இல் ‘உள்நாட்டுப் பணிகளுக்கான பெண்களின் சபை’ (Council of Women for Home Missions) உருவானது; இது பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன், புலம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு போன்ற முக்கியமான சமூகப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டது. பெண்களின் இந்த விடாமுயற்சியே இன்றைய உலக பிரார்த்தனை தினத்தின் ஆணிவேராக அமைந்தது.

பிரார்த்தனை: அனைவருக்கும் பொதுவான கருவி
பிரார்த்தனை செய்வதற்குப் பெரிய படிப்போ, பட்டமோ அல்லது கோடிக்கணக்கான சொத்தோ தேவையில்லை. ‘நான் அறிவாளி இல்லை’ என்றோ, ‘நான் ஏழை’ என்றோ யாரும் ஒதுங்கி நிற்க வேண்டியதில்லை. வாழ்க்கையில் நம்மால் கையாள முடியாத தடைகள் வரும்போது, அந்த உயரதிகாரப் பேராற்றலைத் தட்டி எழுப்பும் ஒரு கருவிதான் பிரார்த்தனை.
“உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள்; உங்களால் எதைச் செய்ய முடியவில்லையோ அதை இறைவனிடம் பிரார்த்தனையாகச் சமர்ப்பியுங்கள்.”
தியானமும் பிரார்த்தனையும்
அமைதியாக அமர்ந்து சில வார்த்தைகளைச் சொல்வது மட்டும் பிரார்த்தனை அல்ல. அது ஒரு சாந்தமான தியான நிலை. நம் மனம் கூர்மையாகவும், அமைதியாகவும் இருக்கும்போது நாம் செய்யும் பிரார்த்தனைக்குச் சக்தி அதிகம். அதனால்தான், தியானத்திற்குப் பிறகு செய்யப்படும் வேண்டுதல்கள் ஆழமான மாற்றங்களை உருவாக்குகின்றன.
முழுமையான ஈடுபாடு
மனம் எங்கோ அலைபாய்ந்து கொண்டிருக்க, உதடுகள் மட்டும் மந்திரம் சொல்வது பிரார்த்தனை ஆகாது. ஒருவருக்குப் பயங்கரமான வேதனை இருக்கும்போது, அவர் இயல்பாகவே முழு ஈடுபாட்டுடன் இறைவனை நோக்குகிறார். அந்த ‘ஆத்மாவின் அழுகுரல்’தான் உண்மையான பிரார்த்தனை. நீங்கள் மிகுந்த நன்றியோடு இருக்கும்போதும் அல்லது ‘வேறு வழியே இல்லை’ என்று நிர்க்கதியாக நிற்கும்போதும் எழும் அந்த உணர்வுக்குப் பிரபஞ்சம் நிச்சயம் பதிலளிக்கும். நீங்கள் பலவீனமாக உணரும் தருணத்தில்தான், இறைவனின் பலம் உங்களோடு இருக்கிறது.
உண்மையான நேரத்தை ஒதுக்குங்கள்
நமக்குச் செய்ய வேலை ஒன்றும் இல்லை என்றாலோ அல்லது பொழுதே போகவில்லை என்றாலோதான் நாம் பல நேரங்களில் கடவுளை நினைக்கிறோம். மிச்சமிருக்கும் நேரத்தைக் கடவுளுக்குக் கொடுப்பதை விட, நம் வாழ்வின் முக்கியமான, தரமான நேரத்தைப் (Quality Time) பிரார்த்தனைக்கு ஒதுக்க வேண்டும். ஏதோ ஒரு வரத்தைப் பெற வேண்டும் என்று அவசரப்படாதீர்கள். “கடவுள் எனக்குச் சொந்தமானவர்” என்று நீங்கள் உணர்ந்துவிட்டால், அங்கே அவசரத்திற்கு இடமிருக்காது.
பக்தி எனும் சிகிச்சை
இன்றைய உலகில் பேராசையாலோ அல்லது பயத்தினாலோதான் மக்கள் அதிகம் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால், உண்மையான பிரார்த்தனை என்பது ‘எதையாவது அடைய வேண்டும்’ என்ற எண்ணத்திற்கு எதிரானது. அது இறைவனை கௌரவித்து, நம்மை முழுமையாகச் சமர்ப்பிப்பதாகும். இந்தச் சரணாகதி நிலையும், பக்தியும் நம் வாழ்க்கையில் ஒரு மருந்தாகச் செயல்பட்டு, நம் மனக் காயங்களைக் குணப்படுத்தும்.
கடவுள் எப்போதும் நம்மைப் பாதுகாக்கிறார் என்ற ‘நம்பிக்கை’ இருந்தால், அங்கே ஏக்கம் பிறக்கும். அந்த ஏக்கம் பிறக்கும்போது, உண்மையான பிரார்த்தனை தானாகவே உங்கள் உள்ளத்திலிருந்து மலரும்.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


