கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும்!
கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள் தவிர யாருமே சொல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. காரணம், ‘மோடி என்ற பெயர் கொண்ட எல்லாரும் திருடர்களாக இருக்கிறார்களே, அது எப்படி?’ என்று ராகுல் எழுப்பிய கேள்வி அவதூறு வகையை சேர்ந்தது. அந்த வாக்கியம் பிரதமரை நேரடியாக ‘திருடன்’ என வர்ணிக்கிறது. கூடவே ‘மோடி’ என்ற surname கொண்ட லட்சக்கணக்கானோரையும் அவதூறுக்கு உள்ளாக்குகிறது. நியாயமாக சொல்லப் போனால் அவதூறு செய்வதை வெறுக்கும், அதனை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் யாருமே ராகுலுக்கு கிடைத்த தண்டனையை வரவேற்க வேண்டும். குறைந்த பட்சம் அவர் அப்படிப் பேசியதை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் இங்கே செய்யவில்லை. அதற்குக் காரணம் எளிது: பாதிக்கப்பட்டது ‘நம்ம ஆள்’.
கருத்து சுதந்திரம் குறித்த ஒரு முந்தைய பதிவில் நான் எழுதிய வரிகள் இவை:
‘வன்முறையைப் பொருத்தவரை நம்ம ஆள் அரிவாள் எடுத்தால் வீரன். எதிரி எடுத்தால் அவன் கொடூரன். இதுவேதான் கருத்துரிமை விஷயத்திலும் நாம் அணுகுகிறோம். நம்ம ஆள் செய்தால் அது கிண்டல், கேலி, நையாண்டி. எதிராளி செய்தால் அது அவதூறு, இழிவுபடுத்துதல்.’++
இந்த பாசாங்குத்தனம், hypocrisy, நம்மில் பெரும்பான்மையானோரிடம் காணப்படுகிறது. இதனை நான் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன்.
என்னைப் பொருத்த வரை நான் ராகுலின் தண்டனையை கடுமையாக எதிர்க்கிறேன். ஆனால் இந்த விஷயத்தில் என்னிடம் எந்த பாசாங்குத்தனமும் இல்லை. காரணம், கருத்துரிமையை நான் தொடர்ந்து ஆதரித்து வந்து கொண்டிருக்கிறேன். கருத்துரிமையில் அவதூறு செய்யும் உரிமையும் அடங்கும் என்றும் சுட்டிக் காட்டி வந்திருக்கிறேன். ‘Freedom of speech includes freedom to offend,’ என்ற ரஷ்டியின் கூற்றை தொடர்ந்து மேற்கோள் காட்டி வருபவன் நான்.
எனவே, இன்றைக்கு ராகுலின் தண்டனையை எதிர்த்து அணி வகுக்கும் அனைவரிடமும் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்: நீங்கள் வெறுக்கும் நரேந்திர மோடியை ஒருவர் அவதூறு செய்ததை ஆதரித்து நிற்கிறீர்கள். சரி, ஆனால் நாளைக்கு நீங்கள் உகந்ததாகக் கருதும் ஒன்றை வேறு ஒருவர் அவதூறு செய்வார். உங்கள் ஆதர்சத் தலைவனை, உங்கள் மதகுருவை, உங்கள் கடவுளை, உங்கள் புனித நூலை. அப்போது என்ன செய்வீர்கள் என்று இன்றே யோசித்துக் கொள்ளுங்கள்.
கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவான உங்கள் நிலைப்பாடு அப்போதுதான் பரிசோதனைக்கு உள்ளாகும். அப்போது மட்டும் ‘ஒரு விஷயத்தை விமர்சனம் செய்யலாம் பாஸ். ஆனா அவதூறு செய்யறது தப்பு. அதுக்கு தண்டனை கொடுக்கணும்,’ என்று பிளேட்டை மாற்றி சொல்வீர்கள் எனில் இன்றைக்கு ராகுல் குறித்த உங்கள் நிலைப்பாடு அதீத பாசாங்குத்தனமானது என்று புரிந்து கொள்ளுங்கள்.
அப்படி செய்தால் உங்களின் இன்றைய நிலைப்பாட்டுக்கு அறச்சீற்றம் காரணம் அல்ல, வெறுமனே மோடி மீதான காண்டுதான் காரணம். It may be understandable, but it’s shamefully hypocritical.