‘சூரி’யை சுத்தமா ஓரம் கட்டி வச்சிட்டு ‘குமரேசனா’ மாறிட்டேன்- விடுதலை அனுபவம்!

“அடுத்தடுத்து வரும் படங்களில், சின்ன வேடத்தில் நடித்தால்கூட போதும் என நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே ஹீரோ என்று வந்திருக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கவில்லை.. சாதாரண காமெடியனான எனக்கு இப்படி வாய்ப்புக் கிடைத்தாலும் நான் வளர்ந்த பாதையை மறக்க முடியாது. இப்போது, கதையின் நாயகனாக நடித்திருந்தாலும் காமெடியன் சூரி என்பதே என் அடையாளம். அதை விட மாட்டேன்” என்றார் விடுதலை ஹீரோ சூரி..
டைரக்டர் வெற்றிமாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக நடிக்க வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ‘விடுதலை’ படம் குறித்தும், அந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் நடிகர் சூரி பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது சூரி சொன்னது,
“முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு மிகப் பெரிய நன்றியை சொல்ல வேண்டும். ஏனென்றால், நம்மிடம் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதை நாம கண்டுபிடிப்பதற்கு முன்னாடியே இன்னொருத்தர் கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம். அப்படி எனக்குள் இருந்த இந்த குமரேசனை கண்டு பிடித்ததற்கு வெற்றி மாறன் அண்ணாவிற்கு பெரிய நன்றி. இதற்கான தகுதியை ஏற்படுத்திய எனக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி மாறன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது எனது நீண்ட நாள் கனவு. நான்கு காட்சிகளிலாவது அவர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று விரும்பினேன். எனது விருப்பத்தை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் சாரிடமும், இணை இயக்குநர் மணிமாறன் சாரிடமும் அடிக்கடி சொல்வேன். அவர்களும் வெற்றிமாறனிடம் நிச்சயம் கேட்டுச் சொல்வதாக சொல்வார்கள்.
அப்படியே தொடர்ந்து அவர்களிடம் கேட்டுக்கிட்டே இருந்தேன். அப்போதுதான் ஒரு முறை “வெற்றி சார் உங்களை சீக்கிரம் கூப்பிடுவாரு” என்று இணை இயக்குநர் ஒருவர் என்னிடம் கூறினார். அதனால் அவருடைய அழைப்புக்காக காத்திருந்தேன். ஆனால், நாட்கள் கடந்து போனதே தவிர, அவரிடமிருந்து அழைப்பு வரவேயில்லை. கடைசியில் நானே வெற்றிமாறன் ஸாரைத் தொடர்பு கொண்டேன். அப்போதுதான் என்னிடம் ஒரு கதையை வெற்றி சார் சொன்னார். அப்போது அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களில் நான் எதிர்பார்த்த வேடங்கள் எதுவும் இல்லை. “இதுல நான் என்ன வேடம் சார் செய்யப் போறேன்?” என்று கேட்டபோது, “நீங்கதான் ஹீரோ” என்று சொன்னார். அதை கேட்டதும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
அந்த செய்தியை உடனேயே சிவகார்த்திகேயன், என் மனைவி என்று அனைவரிடம் சொல்லி மகிழ்ந்தேன். ஆனால், அதற்குப் பிறகும் வெற்றிமாறன் சாரிடம் இருந்து அழைப்பே வரலை. கிட்டத்தட்ட இரண்டு வருஷங்கள் ஆகியும் அவர் என்னை அழைக்காததால், நானே அவரை சென்று பார்த்தேன். அப்போது என்னிடம் சொன்ன அந்தப் படத்தை கை விட்டதாகச் சொன்னார்.
உடனேயே வேறொரு கதையை சொல்லி “நாம் இந்தப் படத்தை பண்ணலாம்” என்றார். துபாயை கதைக் களமாக கொண்ட அந்தப் படத்திற்காக போட்டோ ஷூட் எல்லாம் நடத்தினோம். ஆனால், கொரோனா பரவலால் அந்தப் படமும் கைவிடப்பட்டது. பிறகு கடைசியா, இந்த ‘விடுதலை’ படத்தின் கதையைச் சொல்லி “இதை செய்யலாம்” என்றார். அப்படித்தான் இந்த ‘விடுதலை’ படத்தில் நான் நடிக்க தொடங்கினேன்.
இந்தப் படம் முதலில் சாதாரணமாகத்தான் தொடங்கியது. ஆனால், படப்பிடிப்பு தொடங்கி விஜய் சேதுபதி உள்ளே வந்த பிறகு, மிகப் பெரிய படமாக வளர்ந்துவிட்டது. படம் முடிய வருஷ கணக்காயிருச்சு. அதற்குக் காரணம் கதைக் களம்தான். படப்பிடிப்பு நடந்தது அடர்ந்த வனப்பகுதி மட்டும் அல்ல; மிகவும் ஆபத்தான பகுதியும்கூட. படப்பிடிப்பு தளத்திற்கு போவதற்கே பல மணி நேரமாகும். அங்கு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென்று மழை வந்துவிடும். அப்படி மழை வருவதுபோல் தெரிந்தாலே அங்கிருந்து கிளம்பி விடுவோம். பிறகு அங்கு ஈரப்பதம் குறைந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு நடத்துவோம். மீண்டும் மழை வந்து படப்பிடிப்பு தடைபடும். இதனால்தான் காலதாமதம் ஆனது.
இந்தப் படத்தில் நடிக்கும்போது முதலில் எனது வழக்கமான பாணியில்தான் நடிக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்த வெற்றிமாறன் சார், “நீங்க ‘சூரி’ என்பதையே மறந்துடுங்க. ‘குமரேசன்’ என்ற கதாபாத்திரத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு நான் சொல்வதை மட்டும் செய்யுங்க…” என்றார். அதன்படி இரண்டு நாட்கள் தடுமாறிய பிறகு, வெற்றி சார் சொன்னபடியே ‘சூரி’யை சுத்தமா ஓரம் கட்டி வச்சிட்டு ‘குமரேசனா’ மாறிட்டேன். படம் முழுவதும் முடிவடைந்த பிறகு என்னுடைய நடிப்பை பார்த்து வெற்றி சார் பாராட்டியதோடு, படத்தில் நடித்த கெளதம் மேனன் சாரும், ராஜீவ் மேனன் சாரும் எந்த இடத்திலும் ‘சூரி’ போல் இல்லாமல் புதிய நடிகர் போல் நான் தெரிவதாக பாராட்டினார்கள்.
டப்பிங் பேசும்போதுதான் என்னுடைய போர்ஷனை பார்த்தேன். ஒரு புதிய ‘சூரி’யை பார்த்த உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நிச்சயமாக சொல்றேன் இந்த ‘விடுதலை’ படத்தில் பழைய ‘சூரி’யை துளிகூட உங்களால் பார்க்க முடியாது. இந்த ‘விடுதலை’ படத்திற்காக நான் நிறைய படங்களை விட்டுவிட்டேன்.இத்தனைக்கும் “இந்தப் படத்திற்காக எந்த படத்தையும் விட்டுவிடாதீர்கள்” என்று என்னிடம் வெற்றி மாறன் சார் சொன்னார். எதாவது பட வாய்ப்புகள் வந்தால் அவரிடம் சொல்வேன். அவர் உடனே “அதில் நடித்துவிட்டு வாங்க” என்று சொல்லிவிடுவார். அப்படித்தான் ரஜினி சார் படத்தில் நடித்தேன். ஆனால், சில படங்களை பற்றி நான் அவரிடம் சொல்ல மாட்டேன். காரணம், எனக்காக அவர் இந்த படத்தை தள்ளி வைத்து விடுவாரோ என்ற பயம்தான். மற்றபடி ‘விடுதலை’ படத்திற்காக நானாகத்தான் சில படங்களில் நடிக்காமல் ஒதுங்கினேன்.
இதுக்கிடையிலே “விடுதலை’ படத்தில் வெற்றிமாறன் சார் என்னை ஹீரோவாக்கியது ஏன்..?” என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். என் மனைவிகூட என்னிடம் இதை கேட்டார். என் மனதிலும் அந்த கேள்வி எழுந்தது. அதனால் நானே ஒரு நாள் வெற்றிமாறன் சாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அப்போது அவர் “உன் உடல் தோற்றம், முகத்தில் இருக்கும் அப்பாவித்தனம். இந்த இரண்டுக்காகத்தான் உன்னை இந்தப் படத்தில் ஹீரோவாக்கினேன்” என்று சொன்னார். மேலும், “உடல் தகுதியைகூட உடற் பயிற்சி மூலம் வரவைக்கலாம், ஆனால் அந்த அப்பாவித்தமான முகத்தை எந்த பயிற்சி செய்தும் வர வைக்க முடியாது, அது இயல்பாகவே உனக்கிருக்கு. அதனால்தான் உன்னை தேர்வு செஞ்சேன்”னு வெற்றி சார் சொன்னார்.
இந்த ‘விடுதலை’ படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் இருக்கு. அதிலும் குறுகிய தெருக்களில் ஓட வேண்டும். ஒரு கட்டிடத்தில் இருந்து மற்றொரு கட்டிடத்திற்கு தாவ வேண்டிய காட்சிகள் எல்லாம் இருக்கிறது. பல கேமராக்களை வைத்து அந்தக் காட்சிகளை படமாக்கினார்கள். பாதுகாப்பாக சண்டைக் காட்சிகளை படமாக்கினாலும், எப்படியாவது அடிபட்டு விடும். அப்படி பல முறை நான் கீழே விழுந்து உடல் முழுவதும் பல இடங்களில் தையல் போட்டிருக்கேன். ஆனால், படத்தில் அந்தக் காட்சிகளை பார்க்கும்போது, கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளதாக சந்தோஷப்பட்டேன்.
இந்த ‘விடுதலை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு எனது ரசிகர்கள் திரளாக வந்திருந்தது பற்றி பலரும் பேசுகிறார்கள். நான் ஹீரோவாக நடித்ததால் ரசிர்களை அழைத்து வரவில்லை. என் ரசிகர்கள் பல ஊர்களில் இருக்கிறார்கள். அவர்கள் என் பெயரில் பல நலத் திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
அப்போது என்னை தொடர்பு கொண்டு என் பெயரில் மன்றம் தொடங்க அனுமதி கேட்டார்கள். ஆனால், நான் அதற்கு மறுத்துவிட்டேன். “நீங்க நல்லது செய்யறது சந்தோஷமான விஷயம்தான். ஆனால், முதலில் உங்க குடும்பத்தை பாருங்க. பிறகு மத்தவங்களுக்கு நல்லது செய்யுங்க”ன்னு தெளிவா சொல்லிட்டேன். ஆனால், இந்த முறை அவர்கள் “நாங்க உங்க நிகழ்ச்சியை பார்க்க சென்னைக்கு வரணும்ன்னு கேட்டாங்க. எனக்காக பல நல்ல விஷயங்களை செய்யும் அவங்களுக்காக நான் இதைக்கூட செய்யலன்னா எப்படி…? அதனால்தான் அவர்களை வரவழைத்தேன். அப்படி வந்தவங்க, அவங்க சொந்த பணத்துலதான் பஸ் வச்சி வந்தாங்களே தவிர, நான் செலவு செய்து அவர்களை அழைத்து வரவில்லை.
எனக்கு ஏற்கனவே ஹீரோவா நடிக்க பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், எல்லாமே காமெடி ஹீரோ கதையா இருந்தது. அதனால்தான் அந்தப் படங்களை நிராகரித்தேன். காமெடி வேடத்தை தாண்டிய ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் வெற்றி மாறன் சார் படத்தில் நடிக்க முயற்சித்தேன். அவர் என்னை கதாநாயகனாகவே நடிக்க வைத்தது பெரும் மகிழ்ச்சி. அதற்காக தொடர்ந்து கதாநாயகனாக மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். இனிமேல் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், இனிமேல் ஹீரோவா நடிக்கும் படங்களில் வழக்கமான காமெடி வேடத்தில் நடிக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன். காமெடியை கடந்து நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். அதற்கு ஏற்றவாறு சில கதைகளும் வந்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படத்தில் நாயனாக நடிக்கிறேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன், அந்தப் படங்களின் விவரங்களை சீக்கிரமா சொல்றேன்…” என்றார் நடிகர் சூரி.