அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தொடக்கப்புள்ளி:-பிப்.1-ன் வரலாற்றுப் பயணம்!
மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் ‘வேலை’ என்பது வாழ்வாதாரத்தைத் தாண்டி சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிய நிலையில், தகுதியுள்ள உழைப்பாளர்களைத் தேடும் நிறுவனங்களையும், திறமையுள்ள தொழிலாளர்களையும் ஒரே புள்ளியில் இணைக்க ஓர் அதிகாரப்பூர்வமான அமைப்பு அவசியமானது. 16-ஆம் நூற்றாண்டிலேயே வேலையின்மை ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்த போதிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் அதனை முறைப்படுத்த அரசு முன்வந்தது. தனிநபர்களின் தன்னார்வ முயற்சிகளாகத் தொடங்கி, பின்னாளில் அரசின் கடமையாக மாறிய இந்த ‘வேலைவாய்ப்பு அலுவலக’க் கட்டமைப்பு, இன்று உலகளாவிய தொழிலாளர் சந்தையின் முதுகெலும்பாகத் திகழ்கிறது.
வேலைவாய்ப்பு அலுவலகங்களின் தோற்றம்: ஒரு வரலாற்றுப் பயணம்
உலகிலேயே முதன்முறை: இங்கிலாந்தின் முன்னெடுப்பு 1909-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘லேபர் எக்ஸ்ச்சேஞ்’ (Labour Exchange Act) சட்டத்தின்படி, 1910 பிப்ரவரி 1 அன்று இங்கிலாந்தில் முதன்முதலாக 62 அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இதுவே உலக வரலாற்றில் அரசு அதிகாரப்பூர்வமாகத் தொழிலாளர் சந்தையில் தலையிட்ட முதல் நிகழ்வாகும். தொடங்கப்பட்ட நான்கே ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 430 ஆக உயர்ந்தது. இன்று இது ‘ஜாப்செண்ட்டர் ப்ளஸ்’ (Jobcentre Plus) என்ற பெயரில் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

முன்னோடிகளின் முயற்சி
-
ஹென்றி ராபின்சன் (1650): வேலையளிப்பவர்களையும் தேடுபவர்களையும் இணைக்க அரசு அலுவலகம் வேண்டும் என 17-ஆம் நூற்றாண்டிலேயே இவர் குரல் கொடுத்தார். ஆனால் அப்போதைய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இதனை ஏற்கவில்லை.
-
அல்சேஜர் ஹில் (1871): லண்டனில் இவர் தொடங்கிய தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து 1902-இல் சட்டம் இயற்றி, அரசு இதன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றது.
தனியார் நிறுவனங்களின் வருகை அரசு அலுவலகங்களுக்கு முன்பே, 1873-இல் ஜான் கேப்பிடாஸ் என்பவரால் பள்ளி ஆசிரியர்களுக்காக முதல் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. இவை தகவல்களை வழங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையைப் பின்பற்றின.
சர்வதேசக் கண்காணிப்பும் ஒழுங்குமுறையும் 1919-இல் ‘பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு’ (ILO) உருவானபோது, அதன் முதல் பரிந்துரையே “கட்டணம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கும் தனியார் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் அல்லது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்பதுதான். லாப நோக்கற்ற பொதுச் சேவையே முதன்மையாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 2016-இல் பொது வேலைவாய்ப்பு நிறுவனங்களின் உலகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர் நலன் காக்கப்பட்டு வருகிறது.
ரமாபிரபா


