தேசத்தின் நீல எல்லைக் காவலர்கள்: இந்திய கடலோர காவல்படை தினம்!
இந்தியாவின் பரந்து விரிந்த கடல் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், கடல்சார் சட்டங்களை நிலைநாட்டுவதிலும் மிகமுக்கியப் பங்காற்றி வரும் இந்தியக் கடலோரக் காவல் படை (Indian Coast Guard – ICG), இன்று தனது 50-வது நிறுவன தினத்தை (Raising Day) எட்டியுள்ளது. 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி வெறும் 7 ரோந்துக் கப்பல்களுடன் ஒரு சிறிய பிரிவாகத் தொடங்கப்பட்ட இந்தப் படை, இன்று ஆசியாவிலேயே நான்காவது பெரிய கடலோரக் காவல் படையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. “வயம் ரக்ஷாமஹ்” (நாங்கள் பாதுகாக்கிறோம்) என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இப்படையின் அரை நூற்றாண்டு கால சாதனைகளையும், அதன் வளர்ச்சியையும் பார்ப்போமா?.
வரலாற்றுப் பின்னணி மற்றும் வளர்ச்சி
1970-களின் தொடக்கத்தில், இந்தியாவின் கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும், பொருளாதார மண்டலத்தைப் பாதுகாக்கவும் ஒரு பிரத்யேகப் படை தேவைப்பட்டது. இதன் விளைவாக, 1977-இல் கடற்படையிலிருந்து பிரிக்கப்பட்டு, இடைக்காலக் கடலோரக் காவல் படை உருவாக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இது முறைப்படுத்தப்பட்டது.

-
தொடக்க நிலை: 7 ரோந்துக் கப்பல்கள்.
-
தற்போதைய பலம்: 155 கப்பல்கள் மற்றும் 80 விமானங்கள்.
-
எதிர்கால இலக்கு: 2030-ஆம் ஆண்டிற்குள் 200 கப்பல்கள் மற்றும் 100 விமானங்களை உள்ளடக்கிய வலிமையான படையாக மாறத் திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியப் பணிகள் மற்றும் செயல்பாடுகள்
இந்தியாவின் 11,098 கி.மீ நீளமுள்ள கடற்கரையையும், 20.1 லட்சம் சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தையும் (EEZ) இப்படை இரவு பகலாகக் கண்காணித்து வருகிறது.
-
தேடுதல் மற்றும் மீட்பு (SAR): கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது மற்றும் இயற்கைச் சீற்றங்களின் போது துரிதமாகச் செயல்படுவது இவர்களின் முதன்மைப் பணி. இதுவரை 11,800-க்கும் மேற்பட்ட உயிர்களை இப்படை காப்பாற்றியுள்ளது.
-
கடல்சார் பாதுகாப்பு: எல்லை தாண்டிய கடத்தல்களைத் தடுத்தல் மற்றும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குதல்.
-
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவுகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பது.
-
பேரிடர் மேலாண்மை: லட்சத்தீவு மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர்களின் போது மீட்புப் பணிகளில் தங்களின் அசாத்தியத் திறமையை இப்படை வெளிப்படுத்தியுள்ளது.
தற்சார்பு இந்தியா மற்றும் நவீனமயமாக்கல்
‘ஆத்மநிர்பார் பாரத்’ (Aatmanirbhar Bharat) மற்றும் ‘மேக் இன் இந்தியா’ திட்டங்களின் கீழ், இந்தியக் கடலோரக் காவல் படை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் நவீன கண்காணிப்பு அமைப்புகளைப் பயன்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை வலுப்படுத்துகிறது.
மேலும், பாலின சமத்துவத்தைப் போற்றும் வகையில், கப்பல்கள், விமானப் போக்குவரத்து மற்றும் அலுவலகப் பணிகளில் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பயிற்சி மற்றும் எதிர்காலத் தலைவர்கள்
கொச்சியில் உள்ள இந்தியக் கடலோரக் காவல் படை பயிற்சி மையம் (CGTC), வருங்கால அதிகாரிகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமீபத்தில், ஜனவரி 28, 2026 அன்று 81-வது சட்ட மற்றும் செயல்பாட்டுப் பயிற்சியை முடித்த இளம் அதிகாரிகள் பணியில் இணைந்துள்ளனர். இவர்களுக்குக் கடல்சார் சட்ட அமலாக்கம், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முடிவுரை
சாகர் (SAGAR – Security and Growth for All in the Region) போன்ற உன்னதக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும் இந்தியக் கடலோரக் காவல் படை, இந்தியாவின் கடல்சார் இறையாண்மையின் தூணாகத் திகழ்கிறது. 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த வரலாற்றுத் தருணத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதிலும், மீனவர்களின் நண்பனாக இருப்பதிலும் இப்படையின் சேவை ஈடு இணையற்றது.
தனுஜா


