பொறுப்பில்லாத (2கே) இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது!
கடந்த இரண்டு வருடங்களாகக் கவனித்து வருகிறேன். வேலை நிமித்தமாக சில குழுக்களில் என் நிறுவனத்திற்கு மருந்துவிற்பனைப் பிரதிநிதி தேவை என செய்தி அனுப்பினால் இப்பொழுதெல்லாம் ஒரே மாதிரியான குணநலன்களுடன் இப்பொழுதிருக்கும் 2கே கிட்ஸ் இன்னும் கிட்ஸ் என்று சொல்லியாகவேண்டும் அல்லவா… பேசுகிறார்கள். நான் கவனித்தவற்றில், 80% பேர் அலைபேசியில் அழைக்கிறார்கள். ( இது எல்லாம் எனக்கு நேர்ந்த அனுபவத்திலிருந்து எழுதுவது… இதுவே கள நிலவரம் என்று எண்ண வேண்டாம் ).
சொல்லுங்க என்றால், இந்த வான்டட் னு போட்டுருந்தது என்று நிறுத்திக்கொள்கிறார்கள்.
ஆமாம் என்றால் அதான் கூப்பிட்டேன் என்கிறார்கள்.
நீங்க என்று கேட்டால், பெயர் மட்டும் சொல்கிறார்கள்.
எங்க இருந்து
இப்பொழுது என்ன பண்ணுகிறீர்கள்,
எங்கும் வேலை பார்க்கிறீர்களா,
என்ன படித்திருக்கிறீர்கள் என்று ஒவ்வொன்றாகக் கேட்க வேண்டியதிருக்கிறது.
அதிலும் உதாரணத்திற்கு ஒருவன் அழைத்தான், இப்ப என்ன பண்ணுகிறாய் என்றதற்கு, ஃபினான்ஸ்ல வேலை பார்க்கிறேன் என்றான். எந்த ஃபினான்ஸ் எனக் கேட்டால் தெரியாத ஒரு பெயரைச் சொன்னான். என்ன வேலை என்று கேட்டால், ரெகவரி என்றான்.
இன்னொருவன் பேசி முடித்துவிட்டு , ப்ரோ என்ன சம்பளம் தருவாங்க ப்ரோ கம்பெனில என்று என்னிடமே கேட்கிறான்.
ஒருவன் புள்ளீங்கோ ஹேர் ஸ்டைலில் ஜீன் ஒரு தொழ தொழ சட்டை போட்டுக்கொண்டு துணைக்கு ஒருவனை அழைத்து வருகிறான்
இன்டர்வியூவிற்கு. நிறைய பேர் குறித்த நேரத்திற்கு வருவதில்லை.
என்ன வேலை என்று தெரியாமலேயே வருகிறார்கள்.
வேலை குறித்து சொன்னால், அலையனுமா என் கிறார்கள்.
ஒருவனிடம் வண்டியும் இல்லை, லைசென்சும் இல்லை, சர்டிஃபிகட்டும் இல்லை. மார்க் ஷீட் மட்டும் வைத்துள்ளான். ஆTHஹார் கார்ட் வைத்துள்ளான். இன்டர்வியூ வருகிறான்.
அப்படியே சல்லடை போட்டு தேர்ந்த அல்லது பொறுப்பான ஒரு ஆளை எடுத்தால் அவன் நீட்டிப்பதில்லை. ஒரு தொழிலில் அடிப்படையைக் கற்றுக்கொள்வதற்குள் அடுத்த சம்பளத்திற்கு நகர ஆசைப்படுகிறார்கள். ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது போல் நிறுவனம் நிறுவனமாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆங்காங்கே வேலை இருக்கிறது. ஆனால் வேலை பார்க்க மனமில்லாமல் இருக்கிறார்கள்.
ஸ்விகி, ஜொமேட்டோ வில் கல்லூரி முடித்த FRESH CANDIDATES சேர்வது அவர்களுக்கான COMFORT ZONEஐ விட்டு வெளியே வர ஆசைப் படவில்லை என்பதையும் சிலரது எப்ப வேண்டுமானாலும் வேலைக்குப்போகலாம் , கண்காணிப்பு இல்லை என்ற சோம்பேறித்தனமும் தான் காரணமோ என்று எண்ண வைக்கிறது.
கடைசியாக என்னிடம் வேலைக்கு வந்த ஒரு பையன் கடுமையான உழைப்பாளியாகக் காட்டிக்கொண்டான். பி எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து ஒரு பி பி ஓ வில் வேலை பார்த்து அதன் மூலம் வாடிக்கையாளர்களைப் பிடித்து தனியாக நிறுவனம் போல் ஆரம்பித்து தன் உடன் படித்த நண்பர்கள் இருவரை வேலைக்குப் போட்டு பார்த்திருக்கிறான். கோவிட் வந்ததும் எல்லாம் உடைந்தது. ஜோமெட்டோவில் வேலைக்குப் போய் விட்டு அந்த கம்ப்யூட்டர் வேலையைப் பகுதி நேரமாகப் பார்த்திருந்தான். ஜோமெட்டோவும் கைகொடுக்காமல் மெடிக்கல் ரெப் என்று என்னிடம் வந்தான்.
அவனுக்கு இரண்டு அண்ணன் கள். அவர்களுக்கு இரு பைக் போக, இவனுக்கு இரண்டு வண்டிகள். இரண்டுமே கடனில் வாங்கியிருக்கிறான். இரண்டுக்குமே ஈ எம் ஐ ஓடிக்கொண்டிருக்கிறது. எதற்கு இரண்டு வண்டிகள் என்று கேட்டேன். பிடித்திருந்தது அதற்காக என்றான். இதில் 5ஜி எப்படி உபயோகிக்கவேண்டும் என்று பல வித விளக்கங்கள் அவனிடம் உண்டு. அடிக்கடி ரிசார்ஜ் செய்கிறான். இரவு ஒரு மணி வரை ஆன்லைன் விளையாட்டாம். பகலில் அவனால் வேலைக்கு வர முடியவில்லை. அவனால் மனனம் செய்யும் வேகம் கை கூடவில்லை. சம்பாதிப்பதை எப்படிச் செலவழிக்கிறோம் என்று கூட தெரியாதவனாக இருக்கிறான். அவனிடம் பேசினால் அவனைப்போல ஒரு பேட்ச் நண்பர்களைக் கை காண்பிக்கிறான்.
இப்போதிருக்கும் தலைமுறையினருக்கு வாழ்க்கை மீதான பயம் குறைந்திருக்கிறது.
தன் சுய பொறுப்பு பற்றியோ அது சார் குடும்ப பொறுப்பு பற்றிய விழிப்புணர்வோ இருப்பது போல் தெரியவில்லை. இது எல்லாம் வந்தால் தான் சமூக பொறுப்பு பற்றிப் பேச முடியும். டிஜிட்டல் கரண்சி பரிமாற்றம் வந்த பிறகு ஒரு காசு அவனுக்கு வருவதும் போவதிலும் எந்த உணர்வும் இன்றி தென்படுகின்றான்.
யாரிடமாவது 500 ஜி பே பண்ணு என்கிறான். வந்ததும் மாத்திவிடுகிறேன் என்கிறான். கையில் காசு இல்லாவிட்டாலும் நுகரும் தன்மை இப்போதிருக்கும் தலைமுறையினருக்குக் குறையவில்லை என்றே தோன்றுகிறது.
காசைக் கையில் வாங்கி , கொடுத்துப் பழகிய தலைமுறையினருக்கு அதன் வலியும் மகிமையும் புரியும்படிக்கான ஒரு வாழ்வியலை அவர்கள் அனுபவிப்பது குறைந்தே காணப்படுகிறது.
தனக்குத் தேவையானதை அடைய அவர்களுக்கு இருக்கும் உத்வேகமும் அதற்குத் தன்னைத் தயார்படுத்த வேண்டிய தகுதிக்கான பொறுப்பும் எதிர் எதிர் விகிதத்தில் இருக்கின்றன.
பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நெருங்கிய சமூக பொறுப்பாளர்களுக்கும் அவர்களை வழி நடத்த ஒழுங்கு படுத்த பெரும் பங்கு இருக்கிறது. பூமர் பட்டங்களைத் தாங்கிக்கொண்டு தான் இதைச் செய்தாக வேண்டும்.
வாழ்த்துகள் பூமர்களே….!