June 3, 2023

நெருக்கும் நகரங்களும், புதிய வான் போக்குவரத்தும்!- ரமேஷ் கிருஷ்ணன் பாபு

உலகின் பெரும்பாலான நகரங்கள் இன்று சந்திக்கும் பிரச்சினை; போக்குவரத்து நெருக்கடியும் என்று சொன்னால் அதை மிகையல்ல. . இதைத் தீர்க்கும் நோக்கில் புதிய வகைப் போக்குவரத்து வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றனர். குறிப்பாக பணக்கார மேலை நாடுகள் தங்களுக்கு உகந்தப் போக்குவரத்தினைத் தேடி பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது இங்கிலாந்தில் வானூர்தி ரக வாகனங்களை இயக்கத் துவங்கி உள்ளனர்.

கோவிண்டிரி எனும் இடத்தில் சிறிய ரக விமானங்களும், டிரோன்களும் வந்துச் செல்லும் வகையில் ஹெலிபேட் போன்ற உலகிலேயே சிறிய வகை விமான நிலையங்களை அமைக்க உள்ளனர். இதில் சிறிய ரக விமானங்கள் வந்து இறங்கி பயணிகளை இறக்கி விட்டு, பின்னர் புதிய பயணியரை ஏற்றிச் செல்லலாம் (காண்க: https://wef.ch/39IIXOb).

இந்த ஹெலிபோர்ட்களை எங்கு வேண்டுமானாலும் நிறுவலாம்; கழற்றி எடுத்துச் செல்லலாம். இதற்கு பாப்-அப் ஏர்போர்ட் என்று பெயரிட்டுள்ளனர். இத்திட்டத்தில் பிரபல வாகனத் தயாரிப் பாளர் ஹூண்டாய் நிறுவனம் இணைந்துள்ளது. குறிப்பாக இந்த வாகனப் போக்குவரத்து வகையான ஏர்-டாக்ஸிகளை வணிக ரீதியாக சாத்தியமாக்கவே ஹூண்டாய் பங்காளியாக இணைந்துள்ளது. இந்த வாகனப் போக்குவரத்து முறை 2028 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்தால் சாலையில் வாகனங்களின் நெரிசலைக் குறைக்க ரயில் போக்குவரத்து கொண்டு வரப்பட்டும் போத வில்லை. எனவே வான் போக்குவரத்தையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே யூ ஏ இ போன்ற நாடுகளில் வான் போக்குவரத்து பெரும் செல்வந்தர்களால் மேற் கொள்ளப் படுகிறது.

இந்நிலையில் எளியோர்க்கும் இது எட்ட வேண்டும் என்ற சிந்தனையில் உதித்த திட்டமாகும் இந்த சிறிய ரக வான் போக்குவரத்து திட்டம். இதில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் தன்மையுடையவை. இதனால் மாசு ஏற்படும் சூழலும் கட்டுப்படும். உலகம் முழுதும் இது நடைமுறைக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். ஒரு மதிப்பீட்டின்படி அமெரிக்கா வில் வான் போக்குவரத்தின் சந்தை $ 500 பில்லியன்களாக இருக்குமாம். அடுத்த முப்பதாண்டு களில் சுமார் 4% வான் போக்குவரத்தை இந்தச் சிறிய வான் போக்குவரத்து முறையின் கீழ் இயங்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தரை வழிப் போக்குவரத்தைக் கடந்து நீர் வழிப் போக்குவரத்தும் கூட பல்வேறு நகரங்களில் இயக்கப்பட திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. சென்னையிலும் கூட நீர்வழிப் போக்குவரத்து ஏதேனும் ஒரு காலத்தில் நடைமுறைக்கு வரலாம். இந்தச் சிறிய ரக வான் போக்குவரத்து நமது நாட்டிற்கும், சென்னைக்கும் பொருந்துமா என்பதை இப்போது கூற முடியாவிட்டாலும் தேவை என்று வந்துவிட்டால் மெட்ரோ ரயில் சேவையைப் போல அதுவும் அவசியமாகி விடலாம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு