டிஜிட்டல் கூலிகளுக்கு ‘திவசம்’: மெகாஸ்டார் போட்ட அதிரடி ஸ்கெட்ச்! மிரண்டு கிடக்கும் வன்ம மந்தைகள்!
ஒரு காலத்தில் சினிமாவைக் கொண்டாடிய சோஷியல் மீடியா, இன்று சினிமாவையே கடித்துக் குதறும் ‘காட்டுமிராண்டி’த்தனமான இடமாக மாறிவிட்டது. அன்று ஒரு படம் மொக்கையாக இருந்தால் மக்கள் மெல்லப் பேசுவார்கள். இன்று? படம் ரிலீஸாவதற்கு முன்பே, “இந்தத் தயாரிப்பாளரைத் தெருவுக்குக் கொண்டு வந்தே தீருவேன்” எனச் கங்கணம் கட்டிக்கொண்டு ஒரு கும்பல் அலைகிறது. இது விமர்சனம் அல்ல; இது திட்டமிடப்பட்ட ‘டிஜிட்டல் படுகொலை’!இத்தகைய கயமைத்தனத்தைச் செய்யும் ஆன்லைன் கிரிமினல்களுக்கு, நீதிமன்ற உத்தரவின் துணையோடு மிகச்சரியான ‘ஆப்பு’ வைத்துள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி!
எஸ்கே-வை குறிவைத்த ‘வன்ம’ மந்தைகள்: பராசக்தி கண்ட ‘பரபர’ துவேசம்!
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்திற்கு நடந்தவை, தமிழ் திரையுலகையே உலுக்கியெடுத்துள்ளது. படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்கு முன்பே, சில குறிப்பிட்ட ரசிகர் பட்டாளங்கள் (குறிப்பாக ‘தளபதி’ பெயரைச் சொல்லிக்கொண்டு அலையும் ஒரு கூட்டம்) எஸ்கே-வை குறிவைத்து நடத்திய தாக்குதல் கொடூரமானது. “எஸ்கே-வை வளரவிடக் கூடாது” என்கிற ஒற்றை வன்மத்துடன், தியேட்டருக்குப் போகாமலேயே ‘நெகட்டிவ்’ கமெண்டுகளைத் தெறிக்கவிட்டார்கள். ஒரு கலைஞனின் உழைப்பைத் தரம் தாழ்ந்த சொற்களால் சிதைக்கும் இந்தப் போக்குக்கு ‘விமர்சனம்’ என்று பெயர் வைப்பதே அவமானம்!

சிரஞ்சீவி போட்ட ‘மெகா’ ஸ்கெட்ச்: சென்னை டூ ஹைதராபாத்!
தமிழ்நாட்டில் தயாரிப்பாளர் சங்கம் “ஐயா… தியேட்டர் வாசலில் மைக் பிடிப்பவர்களைத் தடுங்கள்” என நீதிமன்றத்தில் கெஞ்சியபோது, “கருத்து சுதந்திரம்” எனச் சொல்லி நீதிபதிகள் நழுவிக்கொண்டார்கள். ஆனால், தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவி (எ) மன சங்கர் வரபிரசாத் காரு அப்படி விடவில்லை. “என் உழைப்பைச் சிதைக்க யாருக்கும் உரிமை இல்லை” எனப் பாய்ந்ததன் விளைவு… இன்று BookMyShow போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களே நீதிமன்றக் கூண்டில் ஏறியிருக்கின்றன.
ஆம்..நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சினிமாத்துறையின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:
-
நெகட்டிவ் ரிவ்யூக்களுக்குத் தடை: உள்நோக்கத்துடன், ஒரு படத்தின் வெற்றியைப் பாதிக்கும் வகையில் பரப்பப்படும் ஆதாரமற்ற ‘Fake Reviews’ மற்றும் சமூக வலைதளப் பதிவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
BookMyShow-விற்கு அறிவுறுத்தல்: ‘BookMyShow’ போன்ற தளங்களில் டிக்கெட் வாங்காதவர்கள் அல்லது படம் பார்க்காதவர்கள் ரிவ்யூ எழுதுவதைத் தவிர்க்கும் வகையில் தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
யூடியூப் விமர்சகர்களுக்கு எச்சரிக்கை: படம் வெளியான முதல் சில மணி நேரங்களிலேயே ‘தியேட்டர் ரெஸ்பான்ஸ்’ என்ற பெயரில் எதிர்மறையான கருத்துக்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதிரடி தீர்ப்பு சரி… நடைமுறைக்கு சாத்தியமா? – ஒரு ‘ரியாலிட்டி’ செக்!
-
டிக்கெட் வாங்காதவன் ரிவ்யூ போட முடியுமா?: இனி ‘புக் மை ஷோ’வில் டிக்கெட் வாங்கியவர்கள் மட்டுமே ரேட்டிங் போட முடியும் எனத் தொழில்நுட்ப மாற்றங்கள் ஒரு நல்ல தொடக்கமே. ஆனால், வாட்ஸ்அப் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் பரப்பப்படும் ‘வெட்டுக்கிளி’ போன்ற நெகட்டிவ் பதிவுகளை எப்படித் தடுப்பது?
-
பெய்டு புரொமோஷன் (Paid Promotion): ஒரு படத்தின் காலை வாரவே பல லட்சங்களைச் செலவழித்து பல சினிமா பிரபலங்கள் சார்பில் ‘ஐடி விங்’ வேலைகளைச் செய்கிறார்கள். இவர்களைக் கண்டுபிடித்துச் சிறையில் தள்ளும்வழி என்ன?
-
கருத்து சுதந்திரத்தின் எல்லை: நீதிமன்றம் விதித்திருக்கும் இந்த ‘கடிவாளம்’ உண்மையான விமர்சகர்களையும் மிரள வைக்குமா இல்லையா?. நல்ல படங்களை வரவேற்று, மொக்கைப் படங்களை மொக்கை என்று சொல்லும் நேர்மையான குரல்களும் முடக்கப்பட வாய்ப்புண்டில்லையா?.
ஆந்தை ரிப்போர்ட்டர் முடிவுரை:
சினிமா என்பது வியாபாரம் மட்டுமல்ல, பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம். அதைத் தனிப்பட்ட ஈகோவுக்காகச் சிதைப்பது ‘பொருளாதார பயங்கரவாதம்’ தான். நீதிமன்றத்தின் இந்தச் சவுக்கடி, ‘ஃபேக்’ ஐடி பின்னால் ஒளிந்துகொண்டு வன்மம் கக்கும் ‘டிஜிட்டல் கோழை’களுக்கு விழுந்த மரண அடி. ஆனால், சட்டத்தை விடச் சிறந்த தீர்வு ரசிகர்களின் மனமாற்றம் மட்டுமே!


