செய்தியைக் கேட்க / Listen to News
காலத்தின் வேகமான ஓட்டத்தில் ஓடி மறையும் கணங்களை, அப்படியே உறைந்து நிற்கச் செய்து வரலாறாக மாற்றும் அரிய கலை புகைப்படக் கலை. ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். புகைப்படத்தின் வரலாறு ஒரு கருவியின் வரலாறு மட்டுமல்ல; அது நான் பார்த்ததை என்றும், வைத்திருக்க வேண்டும் என்ற மனித ஆசையின் வரலாறு. அந்த மனிதன் ஒரு பொருளின் உருவத்தை ஒளி எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள பல நூற்றாண்டுகளாக முயன்றான். அந்தக் காலத்திலேயே ஒளியியல் முறையின் அடிப்படைக் கருத்துகள் அறியப்பட்டிருந்தன. பின்னர், அறிவியலின் வளர்ச்சி, வேதியியல் கண்டுபிடிப்புகள், ஒளியியல் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்தபோது, புகைப்படம் என்ற அற்புதக் கலை உருவெடுக்கத் தொடங்கியது. ஒரு சமூகத்தின் வரலாற்றையும், ஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையையும், காலத்தின் பண்பாட்டையும் ஒரே புகைப்படம் பதிவு செய்து வைத்திருக்க முடியும். அதனால்தான் புகைப்படம் என்பது காலத்தை உறையச் செய்யும் கலை என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் பத்திரிகைத் துறையில் புகைப்படத்துக்கு இருக்கும் முக்கியத்துவம் அளப்பரியது. ஒரு செய்தியைப் படிக்கும்போது, நமக்கு தகவல் கிடைக்கிறது. அதே செய்தியுடன் ஒரு புகைப்படத்தைப் பார்க்கும்போது, அந்தச் சம்பவம் நம் மனதில் காட்சியாக மாறுகிறது. இங்ஙனம் மனித மனங்களின் மகிழ்ச்சி, கண்ணீர், கொண்டாட்டம், வரலாற்று மாற்றங்கள் என அத்தனை உணர்வுகளையும் ஒரு நொடியில் பதிவு செய்யும் புகைப்படக் கலைஞர்களின் திறமையைப் போற்றுவதற்கும், இந்தத் தொழில்நுட்பத்தை உலகுக்குத் தந்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினம் உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக புகைப்பட தினம் உருவான வரலாற்று பின்னணி
புகைப்படத் தொழில் நுட்பத்தின் பிறப்பிடமும், இந்த சிறப்பு தினம் ஆகஸ்ட் 19 அன்று கொண்டாடப்படுவதற்கான காரணமும் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலப் பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்தது. 1837 ஆம் ஆண்டில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் டாகுரே மற்றும் ஜோசப் நைஸ்ஃபோர் நீப்ஸ் ஆகிய இரு அறிவியலாளர்கள் இணைந்து ‘டாகுரோடைப்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்பட முறையைக் கண்டுபிடித்தனர். ஒளி-உணர்திறன் கொண்ட ஒரு பிரத்யேக மேற்பரப்பில், ஒளியை உள்வாங்கி நிரந்தர பிம்பங்களை உருவாக்கும் முதல் வெற்றியுடைய வேதியியல் நுட்பமாக இது அமைந்தது.
இதனைத் தொடர்ந்து, 1839 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்சஸ் இந்த டாகுரோடைப் முறையை அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்தது. பிரெஞ்சு அரசாங்கம் 1839 ஆகஸ்ட் 19 அன்று இதற்கான காப்புரிமையைப் பெற்று, அதனை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எந்தவிதக் கட்டணமுமின்றி ‘உலகிற்கான இலவசப் பரிசு’ எனப் பிரகடனம் செய்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியான ஆகஸ்ட் 19 ஆம் தேதியே, உலகப் புகைப்பட தினமாகக் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் சிறப்புத் தீம்: ஹோம் (HOME)
ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடும் வகையில் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்து முன்வைக்கப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வத் தீமாக “HOME” (வீடு) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கருப்பொருள் வெறும் செங்கற்களாலும் சுவர்களாலும் ஆன கட்டிடங்களை மட்டும் குறிக்கவில்லை. உங்களுக்கு ‘வீடு’ என்ற உணர்வைத் தரும் உணர்வுபூர்வமான பிணைப்புகளைப் படம்பிடிக்க உலகளாவிய புகைப்படக் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1. நீங்கள் பிறந்து வளர்ந்த சிறுவயது நினைவுகள் நிறைந்த இடம்
2. தாய்நாடு மற்றும் சொந்த ஊரின் பாரம்பரியப் பின்னணிகள்
3. தற்போதைய உங்கள் குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள மனிதர்கள்
4. மனதிற்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும் இயற்கை அல்லது மனித மனித பிணைப்புகள்
இவை அனைத்தும் இந்த ஆண்டின் புகைப்படக் போட்டிகளுக்கான முதன்மைப் பொருளாக அமைகின்றன.
காலத்தைப் பதிவு செய்யும் காலப் பேழை
கடந்த கால நிகழ்வுகளை எதிர்கால சந்ததியினர் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் படம்பிடிப்பதில் புகைப்படக் கலை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. வரலாற்றை வெறும் எழுத்துக்களாகப் படிப்பதற்கும், அன்றைய மனிதர்களின் உணர்வுகளைப் புகைப்படமாகப் பார்ப்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
தொழில்நுட்பம் வளர்ந்து இன்றைக்கு ஸ்மார்ட்போன்களும் டிஜிட்டல் கேமராக்களும் அனைவரின் கரங்களிலும் நிறைந்திருந்தாலும், ஒரு புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் கோணம், வெளிச்சம் மற்றும் உணர்வுகளைக் துல்லியமாகப் பிடிக்கும் புகைப்படக் கலைஞர்களின் பார்வை என்றென்றும் தனித்துவமானது.
கேமராவின் லென்ஸ் வழியே உலகைப் பார்த்து, வரலாற்றை நிழற்படங்களாகச் சேமித்து வைக்கும் அத்தனை புகைப்படக் கலைஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் உலக புகைப்பட தின நல்வாழ்த்துகள்!
நிலவளம் ரெங்கராஜன்

