32°C

டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார் என்.சந்திரசேகரன்:பின்னணி என்ன?

admin Published: August 12, 2026 4 நிமிட வாசிப்பு இந்தியா
எழுத்து:

டாடா குழுமத்தின் தலைமைப் பிடிமான நிறுவனமான டாடா சன்ஸ் (Tata Sons) தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக என்.சந்திரசேகரன் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வரவிருக்கும் ஆகஸ்ட் 18-ம் தேதி நடைபெறவுள்ள நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு (AGM) முன்னதாக வெளியாகியுள்ள இந்தத் திடீர் முடிவு, இந்திய வர்த்தக உலகிலும் பங்குச் சந்தையிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விலகலுக்கான பின்னணியும் வாரிசு அரசியல் மோதலும்

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

என்.சந்திரசேகரனின் தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20 வரை நீடிக்கும் என்றபோதிலும், அவருக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்குவதற்குத் டாடா குழுமத்திற்குள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வலுத்து வந்தது. குறிப்பாக, டாடா அறக்கட்டளையின் (Tata Trusts) தலைவர் நோயல் டாடா உள்ளிட்ட பெரும்பாலான அறங்காவலர்கள் இவருக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்குவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

இந்த மோதலுக்குப் பின்னணியில் ஒரு வாரிசு வளர்ச்சி அரசியலும் இருப்பதாகக் கார்ப்பரேட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. நோயல் டாடா, தனது மகன் நெவில் டாடாவுக்கு (Neville Tata) டாடா சன்ஸ் நிறுவனத்தில் கூடுதல் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றும், அவருக்கு வழிவிடும் வகையில் 2027 பிப்ரவரிக்குப் பின்னர் சந்திரசேகரன் தலைவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் விரும்பியதாகச் சொல்லப்படுகிறது.

மேலும், நிறுவனத்தின் வணிக உத்திகள், நிர்வாகக் குழு உறுப்பினர்களின் நியமனங்கள், பங்குதாரர் ஷாபூர்ஜி பலோன்ஜி (Shapoorji Pallonji) குழுமம் வெளியேறுவது தொடர்பான விவகாரங்கள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது (IPO) குறித்த கொள்கை முடிவுகளிலும் நோயல் டாடாவுக்கும் சந்திரசேகரனுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வந்தன.

பிப்ரவரி 24, 2026 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்திலேயே சந்திரசேகரனின் பணி நீட்டிப்பு தீர்மானத்திற்கு ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. அதைத் தொடர்ந்து 6 மாதங்கள் கடந்தும் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையிலும், ஆகஸ்ட் 18 பொதுக் குழு கூட்டத்தில் (AGM) தன் நீட்டிப்பு குறித்த பகிரங்கச் சர்ச்சைகள் எழுவதைத் தவிர்க்கும் வகையிலும், அவர் இப்பதவி விலகல் முடிவை எடுத்துள்ளார்.

40 ஆண்டுகால உழைப்பும் சந்தித்த சவால்களும்

1987-ம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் எளிய மென்பொருள் பொறியாளராகப் பணியில் இணைந்த என்.சந்திரசேகரன், தனது திறமையால் படிப்படியாக உயர்ந்து 2009-ல் டிசிஎஸ் சிஇஓ-வாகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து 2017-ல் டாடா சன்ஸ் தலைவரானார். டாடா குழுமத்தின் 150 ஆண்டுகால வரலாற்றிலேயே குடும்ப உறுப்பினரல்லாத தொழாண்மையாளர் ஒருவர் (Professional) டாடா சன்ஸ் தலைவரானது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது தலைமைத்துவக் காலத்தில், டாடா குழுமத்தை டிஜிட்டல் மயம், மின்சார வாகனத் தயாரிப்பு மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி என அதிநவீன உலகளாவிய தொழில்நூட்பப் பாதையில் தொலைநோக்குப் பார்வையுடன் வழிநடத்திய அதே வேளையில், குழுமம் எதிர்கொண்ட பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு நெருக்கடிகளையும் என்.சந்திரசேகரன் மிகவும் திறம்பட எதிர்கொண்டார். குறிப்பாக, பல தசாப்தங்களுக்குப் பிறகு டாடா குடும்பத்தின் கைவசத்திற்கு வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் மீட்டுருவாக்கம், அதன் செயல்பாட்டுச் சவால்கள் மற்றும் சர்வதேச விமான விபத்து/சேவைச் சிக்கல்களைச் சீரமைத்ததோடு, உலகளாவிய பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட சந்தை அழுத்தங்களால் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் ஐடி சேவை கட்டணங்களைக் குறைக்க நேரிட்ட சூழ்நிலையையும் திறம்பட சமாளித்தார். மேலும், டாடா மோட்டார்ஸின் சர்வதேசப் பிராண்டான ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனம் சந்தித்த சைபர் தாக்குதல்கள் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி முடக்கங்களைச் சரிசெய்து லாபப் பாதைக்குத் திருப்பியதுடன், நிறுவனத்தின் பங்குச்சந்தை பட்டியல் (IPO) விவகாரங்கள் மற்றும் ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் வெளியேற்றம் தொடர்பான நுட்பமான சட்ட/வர்த்தகச் சிக்கல்கள் வரை அனைத்தையும் மிகவும் சாதுரியமாகக் கையாண்டு டாடா குழுமத்தின் சந்தை மதிப்பை வரலாற்றுச் உச்சத்திற்கு உயர்த்தினார்.

பங்குச் சந்தையில் ஏற்பட்ட தாக்கம்

என்.சந்திரசேகரனின் இந்தத் திடீர் விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, மும்பைப் பங்குச் சந்தையில் டாடா குழுமப் பங்குகளின் மதிப்பு கணிசமாகச் சரிவைக் கண்டது. டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா பவர் உள்ளிட்ட முக்கியத் டாடா நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்ததால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்குப் பெருமளவிலான சந்தை மதிப்பு இழப்பு ஏற்பட்டது.

மொத்ததில் தற்போது டாடா சன்ஸ் தலைவராக இருக்கும் என்.சந்திரசேகரன் 2027 பிப்ரவரி 20 வரை தனது தற்போதைய பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வார். அதற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் சவாலான பணியில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ் நிர்வாகக் குழுவினர் ஈடுபடவுள்ளனர்.

ரமாபிரபா